You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பைடனுக்கு பார்கின்சன் நோய் பாதிப்பா? கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆக முடியுமா?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் இடையே ஜூன் 27-ஆம் தேதி நடந்த நேருக்கு நேர் விவாதம், அமெரிக்க அரசியல் களத்தில் பல கேள்விகளையும், குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு.
அதன்படி, ஜூன் 27-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பைடன் செயல்பட்ட விதம் அவரது கட்சிக்குள் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளதுடன், அவரது உடல்நிலை குறித்தும், மாற்று அதிபர் வேட்பாளர் குறித்தும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பைடனுக்கு எதிர்ப்பு ஏன்?
ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாகக் கடந்த மாத இறுதியில் நேருக்கு நேர் விவாதித்தனர்.
டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. பார்கின்சன் நோய்க்கு 81 வயதான பைடன் சிகிச்சை பெறுகிறார் எனவும், இதனால்தான் அவர் கம்மிய குரலில், மந்தமாகப் பேசினார் எனவும் கூறப்பட்டன.
பார்கின்சன் நோய் நிபுணர் ஒருவர் கடந்த ஆண்டு முதல் எட்டு முறை வெள்ளை மாளிகைக்கு வருகை தந்ததாக 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரைன் ஜீன்-பியர், "பார்கின்சன் நோய்க்கு அதிபர் சிகிச்சை பெற்றாரா? இல்லை" என பதிலளித்தார்.
டொனால்ட் டிரம்ப் உடனான பைடனின் மோசமான விவாதத்திற்குப் பிறகு, அவரது மனக் கூர்மை பற்றிய கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
"81 வயதான பைடன் இந்தத் தேர்தலில் ஒரு இளம் போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,” என்ற கருத்தை பல ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர்.
டிரம்ப் உடனான விவாதத்தில் தான் சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பைடன், அதே சமயம் 'சர்வவல்லமை படைத்த இறைவன் மட்டுமே தன்னை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும்' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தன் மீது சந்தேகம் கொண்டுள்ள கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ள பைடன், "ஒன்று எனக்கு எதிராக நில்லுங்கள், அல்லது என் பின்னால் நில்லுங்கள்," எனக் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவு ஏன்?
2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு துணை அதிபராகப் பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் என்ற சாதனைகளைப் படைத்தார்.
இதற்கிடையே, தேர்தலில் அதிபர் பைடனின் வயது அவருக்கு எதிராக இருக்கலாம், எனவே 59 வயதான துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பளராக நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.
குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், "துணை அதிபர் கமலா ஹாரிஸ் பைடனை விடச் 'சிறந்தவர்', ஆனால் அவரைவிடப் 'பரிதாபமானவர்'," என்று விமர்சித்துள்ளார்.
ஜூன் 27-ஆம் தேதி நடந்த விவாதத்தில் பைடனின் செயல்திறன் குறைவாக இருந்தபோதிலும், கமலா ஹாரிஸ் தனது தலைவருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்.
90 நிமிடங்கள் நடந்த மேடை விவாதத்தை வைத்து பைடனின் ஆளுமையை அளவிடக்கூடாது என கமலா ஹாரிஸ் கூறினார்.
சில கருத்துக்கணிப்பு முடிவுகளைச் சுட்டிக்காட்டி, டிரம்பிற்கு எதிரான போட்டியில் கமலா ஹாரிஸ் பைடனை விடச் சிறப்பாகச் செயல்படுவார் என அவரை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.
கமலாவைக் குறித்த விவாதங்கள்
தேசிய அளவில் கமலா ஹாரிஸுக்கு இருக்கும் நற்பெயர், பிரசார உள்கட்டமைப்பு, இளம் வாக்காளர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அவர்கள், தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக அதிபர் வேட்பாளரை மாற்ற கமலா ஹாரிஸ் சிறந்த தேர்வாக இருப்பார் என வாதிடுகின்றனர்.
ஆனால், இது பைடனின் கூட்டாளிகள் உட்பட சில ஜனநாயகக் கட்சியினருக்குச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முதல் வாக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே தனது முயற்சியில் தோல்வியுற்ற, துணை அதிபர் பதவியில் குறைந்த ஆதரவை (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாகப் பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) கொண்டிருக்கும் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்துவது சரியாக இருக்காது என அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இதற்கு எதிராக, ஜனநாயகக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷிஃப், ஜிம் க்ளைபர்ன் போன்றவர்கள் ஹாரிஸை வெளிப்படையாக முன்னிறுத்துகின்றனர்.
"அவர் அதிபரின் கூட்டாளியாக இருந்தாலும் சரி, அல்லது அதிபர் வேட்பாளராக இருந்தாலும் சரி அவர் குடியரசுக் கட்சியினரும், டிரம்பும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒருவர்," என்று ஹாரிஸின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநர் சிம்மன்ஸ் பிபிசி-யிடம் கூறினார்.
பைடனால் போட்டியில் இருந்து விலக முடியுமா?
ஆம், முடியும்.
பைடனே போட்டியில் இருந்து விலகினால் அது பெரிய செய்தியாக மாறும். ஜனநாயகக் கட்சியினர் நேரடியாக அடுத்த வேட்பாளரைத் தேடிப் போவார்கள்.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டில் (DNC) கட்சியின் அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்தக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளராக பைடனையும், துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸையும் அறிவிக்க ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
அங்கு, ஒரு வேட்பாளர் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையான 'பிரதிநிதிகளின்' ஆதரவைப் பெற வேண்டும்.
ஒருவேளை பைடன் போட்டியில் இருந்து விலகினால், அது மற்றவர்கள் களத்தில் இறங்க வழிவகுக்கும். பெரும்பான்மையான பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறும் நபர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆனால், போட்டியில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியையும் தற்போது வரை பைடன் வெளிப்படுத்தவில்லை.
பைடனை வலுகட்டாயமாக மாற்ற முடியுமா?
நவீன அரசியல் சகாப்தத்தில், ஒரு பெரிய தேசியக் கட்சி வலுகட்டாயமாக ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் வாங்க வைக்க வற்புறுத்தியதில்லை.
இருப்பினும், ஜனநாயக தேசிய மாநாட்டின் விதிமுறைகளில் சில சிக்கல்கள் உள்ளன, அவை பைடனைப் போட்டியில் இருந்து வெளியேற்றுவதைச் சாத்தியமாக்குகின்றன.
தேசிய மாநாட்டின் விதிமுறைகள், "பிரதிநிதிகள் அனைவரும் மனசாட்சிப்படி தங்களைத் தேர்ந்தெடுத்தவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க" அனுமதிக்கின்றன. அதாவது, அவர்கள் விருப்பப்பட்டால் வேறொரு வேட்பாளரைத் தேர்ந்தேடுக்க முடியும்.
கமலா ஹாரிஸால் பைடனுக்கு மாற்றாக இருக்க முடியுமா?
அதிபர் பைடன் தனது பதவிக் காலத்திலேயே பதவி விலகியிருந்தால், கமலா ஹாரிஸ் தானாகவே அந்த இடத்தைப் பிடித்திருப்பார்.
ஆனால், வேட்பாளர் போட்டியிலிருந்து பைடன் விலகினால் இதே விதிகள் பொருந்தாது. துணை அதிபர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த வழிமுறையும் இல்லை.
அதற்குப் பதிலாக, கமலா ஹாரிஸ் மற்ற வேட்பாளர்களைப் போலவே பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஓட்டுக்களைப் பெற வேண்டும்.
போட்டியில் இருந்து விலகினால், அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸை பைடன் ஆதரிக்கலாம்.
அவர் ஏற்கனவே ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இருப்பதால் தற்போது அதிபரிடம் இருக்கும் அனைத்துப் பிரசார நிதிகளையும் கமலா ஹாரிஸ் அணுகலாம். மேலும் தேசிய அளவில் அறிமுகமான நபராகவும் அவர் உள்ளார்.
ஆனால், அமெரிக்க மக்களிடையே அவருக்கு இருக்கும் குறைந்த ஆதரவு பாதகமாக அமையலாம்.
பைடன் அதிபராக இருக்கவேண்டும் என்று 43% வாக்காளர்கள் விரும்புவதாகவும், 49% பேர் டிரம்பிற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட CNN கருத்துக்கணிப்பு, தெரிவிக்கிறது.
கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால் 45% பேர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் 47% பேர் டிரம்பை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.
2020-இல் பைடனுக்கு எதிராக நின்ற கமலா ஹாரிஸ்
2020-இல் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் அதிபர் வேட்பாளர் இடத்துக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார்.
பின்னர், ஜனநாயகக் கட்சி சார்பாகத் துணை அதிபர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். சுமார் ஓராண்டிற்கு முன்பு அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட கமலா ஹாரிஸ், பல இடங்களிலும் பிரசாரங்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டு, ஜோ பைடனுக்கு எதிராகக்கூட பேசி விமர்சித்தார். எனினும், 2019-ஆம் ஆண்டின் இறுதியில் அந்தப் பிரசாரம் முற்றுப்பெற்றது.
2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட கமலா ஹாரிஸ், தனது பிரசாரத்தை உற்சாகமாகத் தொடங்கினார். ஆனால், அவரால் தெளிவான திட்டங்களை விளக்க முடியவில்லை. சுகாதாரம் போன்ற துறைகளில் முக்கியக் கொள்கைகளைக் குறித்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கத் தவறினார்.
பின்னர் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
போட்டியில் உள்ள மற்றவர்கள் யார்?
கலிஃபோர்னியா ஆளுனர் கவின் நியூசோம், மிஷிகன் ஆளுனர் க்ரெட்சென் விட்மர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிகீக் ஆகியோர் ஜோ பைடனின் மாற்று வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)