You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கழிவறை பயன்படுத்த பணம் இல்லாததால், இரவில் தண்ணீர் குடிக்க மாட்டேன்" - முதல்முறை பெண் வாக்காளர்
நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் ஆயிஷா ஷேக் முதன்முறையாக வாக்கு செலுத்தவுள்ளார். இவர், கிழக்கு மும்பையின் புறநகரில் குறைவான வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் கோவண்டி எனும் பகுதியில் 10-க்கு பத்து அடியே கொண்ட அறையில் வசிக்கிறார். அவருடைய வீட்டில் கழிவறை இல்லை. அப்பகுதியில் உள்ள பொது கழிவறையையே அவர் பயன்படுத்துகிறார்.
"ஒருமுறை கழிவறை பயன்படுத்த 2 ரூபாய் செலுத்த வேண்டும். இருமுறை கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றால், நான்கு ரூபாய் கொடுக்க வேண்டும். என் குடும்பத்தில் இன்னும் ஐந்து பேர் உள்ளனர். எனவே, ஒவ்வொரு மாதமும் இதற்கென நாங்கள் குறைந்தது 700 முதல் 800 ரூபாய் வரை செலவு செய்கிறோம்" என்கிறார் ஆயிஷா.
ஆயிஷாவின் குடும்பத்திற்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. கழிவறை பயன்படுத்துவதற்கு செலவு செய்வது, அவர்களின் நிதி நெருக்கடியில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பணம் மட்டும் இதில் பிரச்னையில்லை. பொது கழிவறையைப் பயன்படுத்தும் போது அவர் பாதுகாப்பின்மையை உணருகிறார். கழிவறையைப் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தே தன் முழு நாளையும் ஆயிஷாவும் அவரைப் போன்ற மற்ற இளம்பெண்களும் திட்டமிடுகின்றனர்.
”நான் உட்பட எந்த பெண்ணும் பொது கழிவறைக்கு தனியாக செல்ல மாட்டோம். மற்ற பெண்களின் துணையுடன் தான் செல்வோம். இரவு நேரங்களில் குறிப்பாக இருட்டிய பின்னர் கழிவறை செல்வதை நாங்கள் தவிர்க்கிறோம். ஏனெனில், அந்நேரத்தில் அங்கு ஆண்கள் மது அருந்துகின்றனர், போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். சில சமயம் பெண்கள் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். எனவே மறுநாள் காலையில் தான் கழிவறை செல்வோம். நான் ஒரு குழுவாகத்தான் கழிவறை செல்வேன். அப்போதுதான் எனக்கு ஏதேனும் நடந்தால் மற்ற பெண்கள் உதவியுடன் அதை சமாளிக்க முடியும். என்னால் இரவில் கழிவறை செல்ல முடியாது. எனவே நான் குறைவாக தண்ணீர் அருந்துகிறேன். கழிவறை பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தாலும் மறுநாள் தான் செல்வேன்” என தன் நிலையை விவரிக்கிறார் ஆயிஷா.
மேலும் அவர் கூறுகையில், “காலையில் கழிவறை பயன்படுத்துவதிலும் பல பிரச்னைகள் உள்ளன. காலையில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கழிவறையை சுத்தம் செய்பவர்கள் அடிக்கடி வர மாட்டார்கள், எனவே, பல சமயங்களில் கழிவறை தூய்மையாக இருக்காது. அது இன்னொரு பிரச்னை” என்றார்.
ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்குகளை 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும்.
அதில் சுகாதார வசதியும் ஓர் இலக்காக உள்ளது.
இந்தியாவின் 70% மக்கள் மேம்பட்ட சுகாதார வசதியுடன் கூடிய வீடுகளில் வாழ்கின்றனர் என, ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 9.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக, இந்திய அரசு கூறுகிறது.
ஆனால், கழிவறைகளை கட்டுவது மட்டும் போதாது என்கின்றனர் நிபுணர்கள்.
Right to Pee எனும் அமைப்பின் செயற்பாட்டாளர் ரோகிணி கடம், ”கழிவறைகள் கட்டுவதற்கு மட்டும்தான் நிதி வழங்கப்படுகிறது. அதை யார் பராமரிப்பது? அதை சுத்தம் செய்ய வேண்டும், மின்சாரம், தண்ணீர் வேண்டும். அதற்கு பணம் தேவை, ஆனால், இதற்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை. அதனால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதன் சுமையை அனுபவிக்கின்றனர். கழிவறை பயன்படுத்த 2 முதல் 5 ரூபாய் வரை செலவு செய்கின்றனர். அந்த பணத்தில்தான் கழிப்பறை பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதே தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம். கழிவறையை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது, ஆனாலும் இது போதாது. ஐநா சபையின் இலக்குகள் குறித்து ஆயிஷா அறிந்திருக்கவில்லை. ஆனால், வளர்ச்சி வேண்டும் என அவர் விரும்புகிறார். அதனை தன் உரிமை என நம்புகிறார். இதை மனதில் வைத்தே அவர் வாக்கு செலுத்த உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)