You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மதுரோ புட்டபர்த்தி சத்ய சாயிபாபா ஆசிரமத்துக்கு வந்தாரா?
வெனிசுவேலா தலைநகரில் ஜனவரி 3ஆம் தேதி தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியோ ஃப்ளோரெஸை கைது செய்தது. இதற்கிடையே, மதுரோ முன்பு ஆந்திராவின் புட்டபர்த்திக்கு வந்த புகைப்படங்கள் வைரலாக தொடங்கியுள்ளன.
மதுரோ, சத்தியசாயின் பக்தர்தான் என கூறுகிறார் புத்தபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்தியசாய் சென்ட்ரல் டிரஸ்டின் மேலாண்மை அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர்.
பிபிசியிடம் பேசிய அவர், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், சிலியா ஃப்ளோரெஸும் 2005ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள சத்திய சாய் பாபா ஆசிரமத்தைச் சென்று, பாபாவின் ஆசீர்வாதங்களை பெற்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
இங்கு பல வெளிநாட்டு பக்தர்கள் வருவார்கள். அந்த வெளிநாட்டு பக்தர்கள் தாங்களே யார் என்பதை தெரிவித்தால் தவிர, அவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
மதுரோ வந்த சமயத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள் உள்ளே சென்று பாபாவை சந்தித்ததாக தெரிகிறது. கோரிக்கை வைத்து ஒரு புகைப்படமும் எடுத்துள்ளனர். அந்த ஒரு புகைப்படம்தான் எங்களிடம் உள்ளது என்று ரத்னாகர் தெரிவித்தார்.
"வெனிசுவேலாவிலும் பாபாவைச் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கே மட்டுமல்ல… உலகின் பல நாடுகளில் பாபா பெயரில் பல ஆசிரமங்கள் உள்ளன. அவை அனைத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மதுரோ சத்திய சாய் பாபாவின் பக்தர். பாபாவின் போதனைகளை பின்பற்றுபவர். தனது இல்லத்தில் சத்திய சாயியின் புகைப்படத்தையும் வைத்திருந்ததாக எங்களுக்கு தகவல் உள்ளது" என்று ரத்னாகர் விளக்கினார்.
வெனிசுவேலா அதிபரும் கூட…
தற்போதைய வெனிசுவேலா அதிபர் டென்சி ரொட்ரிகஸும் சத்தியசாய் பக்தர்தான் என்று ரத்னாகர் பிபிசியிடம் கூறினார். அவர் துணை அதிபராக இருந்த காலத்தில் புட்டபர்த்திக்கு வந்து, சத்தியசாய் பாபாவின் மகா சமாதியை தரிசித்ததாக தெரிவித்தார். டென்சி ரொட்ரிகஸ் சத்தியசாய் சமாதியை தரிசிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சத்தியசாய் சென்ட்ரல் டிரஸ்ட் இணையதளம் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள், தகவல்களின் படி, ரொட்ரிகஸ் 2023 ஆகஸ்டிலும், 2024 அக்டோபரிலும் புட்டபர்த்திக்கு வந்துள்ளார். 2024ல் வந்தபோது அவர் வெனிசுவேலாவின் நிர்வாக துணை அதிபராக இருந்தார். அப்போது அவர்களை சத்தியசாய் சென்ட்ரல் டிரஸ்டின் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜே. ரத்னாகர் வரவேற்றார். 2023ல் டென்சி ரொட்ரிகஸ் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற போது புட்டபர்த்திக்கு வந்ததாகவும், அதனை தனது தனிப்பட்ட பயணமாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு