குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து – பாதிப்பை விளக்கும் புகைப்படங்கள்

குஜராத்தின் மஹி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது.இரு லாரிகள், இரு கார்கள் மற்றும் ஒரு ரிக்ஷா வாகனம் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

பாலம் இடிந்த செய்தி பரவியதும் உள்ளூர் மக்கள் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். இந்த பாலம் 1985ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இரண்டு லாரிகள் தற்போதும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. அந்த வாகனங்களை மீட்ட பிறகு அதில் மேலும் யாரும் சிக்கியுள்ளார்களா அல்லது இறந்துள்ளார்களா என்பது தெரியவரும்" என வடோதரா காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆனந்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மிதேஷ் பட்டேல், "பாலத்தில் ஒரு பகுதி இடிந்துவிட்டது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. தற்போது வரை ஒரு சிறுமி உட்பட எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

சாலை மற்றும் கட்டுமானத் துறை செயலாளர் பிஆர் படேலியா ஊடகங்களிடம் பேசுகையில், "இந்த பாலத்தில் ஒரு பகுதி சேதமடைந்ததாக இன்று காலை செய்தி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நாங்கள் ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

மஹிசாகர் நதியில் ஐந்திலிருந்து ஆறு வாகனங்கள் விழுந்ததாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹ்ரிஷிகேஷ் படேல் தெரிவித்தார். பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் வாகனங்கள் நதிக்குள் விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு