பாலத்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் என்ன நடந்தது?
பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக ஐநா பொதுச்சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பாலத்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்த வாக்கெடுப்பு நடந்தது. இருநாடுகள் தீர்வை முன்வைக்கும் நியூயார்க் பிரகடனத்துக்கு ஆதரவாக இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் உட்பட 142 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 10 நாடுகள் மட்டுமே எதிராக வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
என்ன நடந்தது? நியூயார்க் பிரகடனம் என்றால் என்ன?
இந்த பிரகடனம் இரு நாடுகள் தீர்வை முன்வைக்கிறது. மேலும், காஸாவில் உடனடி போர்நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு பாலத்தீன அரசை நிறுவுதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காஸாவின் அரசு நிர்வாகத்தில் இருந்து ஹமாஸை விலக்கி வைத்தல், இஸ்ரேல், அரபு நாடுகள் இடையே உறவை இயல்பாக்குதல் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு உத்தரவாதங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
இந்தப் பிரகடனத்தை அறிமுகப்படுத்திய ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ், மத்திய கிழக்கின் அமைதிக்கு மைய கேள்வியாக இருப்பது, இரண்டு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, நாடுகளாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் அமைதி மற்றும் பாதுகாப்புடன் அருகருகே வாழ வழிசெய்யும் இருநாடுகள் தீர்மானத்தை அமல்படுத்துவதே என்றார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம், பாலத்தீன பிரச்னை தொடர்பாக பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் ஒரு சர்வதேச கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிருந்துதான் நியூயார்க் பிரகடனம் தொடர்பான பேச்சு எழுந்தது.
இந்த தீர்மானத்துக்கு ஐநா அவையில் இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. அவையில் பேசிய இஸ்ரேல் பிரதிநிதி டேனி டானன், இது அமைதியை நோக்கிய நகர்வு அல்ல, இந்த அவையின் நம்பகத்தன்மையை குறைக்கும் செயல் என்றும் விமர்சித்தார். இந்த தீர்மானத்தால் ஹமாஸுக்கு மட்டுமே வெற்றி என்றும் அவர் விமர்சித்தார்.
அதே நேரம் இந்த தீர்மானத்தை பாலத்தீன பிரதிநிதி வரவேற்று பேசினார். மேலும், ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றியும் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இந்த முடிவை இந்திய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்தப் பின்னணியில் பார்க்கும் போது வெள்ளிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பாலத்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெரிய ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய வெளியுறவு அமைச்சகம் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளது.
பாலத்தீனப் பகுதிக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிதான். 2018 பிப்ரவரியில் அங்கு சென்ற மோதி, பாலத்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என பாலத்தீன அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் உறுதியளித்ததாகக் கூறினார்.
மேலும், அப்போது பாலத்தீனம் அமைதியான சூழலில் வாழும் ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திரமான நாடாக மாறுவதை இந்தியா காண விரும்புகிறது என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதே நேரம், இஸ்ரேலுடனும் இந்தியா ஆழமாக உறவைக் கொண்டுள்ளது. இந்தியா இஸ்ரேலிடமிருந்து முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து வருகிறது. பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தச் சூழலில், தற்போது அளித்திருக்கும் வாக்கு பேசுபொருளாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



