இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்?

    • எழுதியவர், இசபெல் கெர்ரெட்சன்

நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.

அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன.

நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண்ட பாலைவனச் சிங்கங்களில் காமாவும் ஒன்று.

அந்த சிங்கத்தைப் பெல்ஜிய புகைப்படக் கலைஞர் கிரீட் வான் மால்டரென் வியத்தகு முறையில் படம் பிடித்துள்ளார். லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் நடத்தப்படும் மதிப்புமிக்க 'ஆண்டின் சிறந்த வன உயிர் புகைப்படக் கலைஞர்' போட்டியில் அவரது புகைப்படம் மிகவும் பாராட்டப்பட்டது.

"அது நாள் முழுவதும் அந்த கடல்நாயைக் கவனித்துக் கொண்டிருந்தது," என்று வான் மால்டரென் கூறுகிறார். அவர் காரில் இருந்தபடியே காமாவைப் பார்த்துக் கொண்டே, அந்தப் படத்தைப் பிடிக்க பல நாட்கள் காத்திருந்தார்.

மொத்தம் 80 சிங்கங்களைக் கொண்ட நமீபியாவில், ஸ்கெலிட்டன் கடற்கரையில் 12 பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன.

அவை வறண்ட நமீபிய பாலைவனத்திலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுக்கு உணவைத் தேடி இடம்பெயர்ந்து, இந்த புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப 2017-ஆம் ஆண்டில் தங்கள் உணவு மற்றும் நடத்தையை கடுமையாக மாற்றிக் கொண்டன. மேலும், இந்த மாற்றத்தால் அவை செழித்து வளர்வதாகவும் தெரிகிறது.

'எல்லாமே ஒரு போராட்டம்தான்'

"இந்த விலங்குகள் எவ்வளவு மீள்தன்மை கொண்டவை என்பதைப் புகைப்படம் காட்டுகிறது... அவை உயிர்வாழத் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கின்றன," என்கிறார் வான் மால்டரென்.

"இந்தச் சிங்கங்கள் கடினமானவை. வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதைப் பற்றியது, இங்கு எல்லாமே ஒரு போராட்டம்தான்."

காமாவுக்கு மூன்று மாத வயதானதிலிருந்தே அதை வான் மால்டரென் கவனித்து வருகிறார். அதற்கு இப்போது மூன்றரை வயது. "கிட்டத்தட்ட அது வயது வந்த சிங்கமாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

மேலும், அந்தப் பெண் சிங்கம் ஒரே இரவில் 40 கடல்நாய்களைக் கொல்லக்கூடிய அச்சமூட்டும் வேட்டைக்காரியாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்களை 1980 முதல் கண்காணித்து வரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் பிலிப் ஸ்டாண்டர், ''காமா, ஸ்கெலிட்டன் கடற்கரையில் வளர்ந்த முதல் தலைமுறை சிங்கங்களில் ஒன்று. வான் மால்டரெனின் புகைப்படம் உண்மையிலேயே முக்கியமானது. ஏனெனில் அது காமா, கடற்கரையில் தனியாக இருந்த முதல் நாளைக் காட்டுகிறது" என்று கூறுகிறார்.

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் 1980களில் ஸ்கெலிட்டன் கடற்கரையில் வாழ்ந்தன, ஆனால் ஒரு வறட்சி மற்றும் விவசாயிகளுடனான மோதல் காரணமாகப் பெரும்பாலான சிங்கங்கள் அழிந்த பிறகு அவை பாலைவனத்திற்குத் திரும்பின என்று ஸ்டாண்டர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த விலங்குகள் "மீண்டும் கடற்கரைக்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடித்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.

'நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை'

இந்த விலங்குகள் "மிகவும் வாழத் தகுதியற்ற நிலப்பரப்பில், தாவரங்கள் இல்லாத பெரிய மணல் குன்றுகளின் பரப்பில்" வாழப் பழகியுள்ளன என்று 1997 இல் 'பாலைவனச் சிங்கப் பாதுகாப்பு அறக்கட்டளையை' (Desert Lion Conservation Trust) நிறுவிய ஸ்டாண்டர் கூறுகிறார்.

"பாலைவனச் சிங்கங்கள் நம்பமுடியாத அளவிற்குத் தனித்துவமானவை," என்கிறார் ஸ்டாண்டர். அவை எந்தச் சிங்கத்தை விடவும் மிகப்பெரிய வாழ்விடத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

மேலும் "அவை மிகவும் ஆரோக்கியமான, சிறந்த விளையாட்டு வீரர்கள். ஒரு பாலைவனச் சிங்கத்தின் சராசரி வாழ்விட எல்லை சுமார் 12,000 சதுர கிமீ (4,600 சதுர மைல்கள்)'' என்று அவர் கூறுகிறார்.

அதேசமயம் செரெங்கேட்டியில் உள்ள ஒரு சிங்கத்தின் வாழ்விட எல்லை பொதுவாக சுமார் 100 சதுர கிமீ (39 சதுர மைல்கள்) இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவை தண்ணீர் இல்லாமலும் உயிர்வாழப் பழகிவிட்டன. "அவை உண்ணும் இறைச்சியிலிருந்து நீர் தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான நடாஷா கூப்பர் கூறுகையில், "சவன்னா வனப்பகுதியில் அல்லது 'லயன் கிங்' படத்தில் வருவது போல ஒரு பெரிய பாறையின் மீது சிங்கங்களைப் பார்த்து நாம் பழகிவிட்டோம், எனவே கடற்கரையில் ஒன்றைப் பார்ப்பது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. இது மிகவும் விந்தையாகவும் அசாதாரணமானதாகவும் உணர்கிறோம்."

பாலைவனச் சிங்கங்கள் சவன்னா சிங்கங்களை விடச் சிறிய குழுக்களாகப் பயணிக்கின்றன என்று கூப்பர் கூறுகிறார். "பொதுவாக, அதிக இரைகள் இருக்கும் பகுதிகளில், குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் வசிக்கின்றன," என்று அவர் கூறுகிறார்.

"இந்த பகுதியில், போதுமான உணவைப் பெறுவதற்காகச் சிறிய குழுக்களாக அதிக தொலைவுக்குச் சுற்றித் திரிகின்றன."

இது சிங்கங்களைப் படம் பிடிக்கும் பணியை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது.

"ஒரு புகைப்படக் கலைஞராக இது அருமையாக உள்ளது, ஏனெனில் இந்தச் சிங்கங்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "அவை சும்மா படுத்துத் தூங்காமல், உயிர்வாழ எப்போதும் வேட்டையாடுகின்றன."

மீண்டும் கடற்கரைக்கு பயணம்

2015 இல், வறட்சி காரணமாகச் சாதாரணமாக அவை வேட்டையாடும் தீக்கோழிகள், ஓரிக்ஸ் மற்றும் ஸ்ப்ரிங்பாக் போன்ற உள்நாட்டு இரைகள் குறைந்த பிறகு, சிங்கங்கள் மீண்டும் கடலைக் கண்டறிந்து கடற்கரையில் கடலோர இரைகளை வேட்டையாடத் தொடங்கின.

"கடல்நாய்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன," என்று வான் மால்டரென் கூறுகிறார். "காலநிலை மாற்றம் இந்த பாலைவனச் சிங்கங்களை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது, அட்லாண்டிக் கடற்கரையில் உயிர்வாழ அசாதாரண வழிகளில் அவற்றைப் பழக்கப்படுத்தியுள்ளது."

பல தலைமுறைகளாகச் சிங்கங்களின் நடத்தை மாறுவதைப் பார்ப்பது "ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்ட முதல் பாலைவன பெண் சிங்கம் "ஒட்டகச் சிவிங்கிகளை வேட்டையாடுவதில் சிறப்புப் பெற்றிருந்தது," என்று அவர் கூறுகிறார். "இப்போது இந்த கடல்நாய் சிங்கங்களுக்கு ஒரு சிறிய ஓய்வு இடைவெளியைக் கொடுக்கிறது."

2025 மார்ச்சில் கடற்கரையில் இரண்டு குட்டிகள் பிறந்தன என்று வான் மால்டரென் மேலும் கூறுகிறார். "இந்த பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்."

நமீபியாவின் பாலைவனச் சிங்கங்கள் மட்டுமே கடல்வாழ் இரைகளை வேட்டையாடத் தெரிந்த சிங்கங்களாக இருக்கின்றன. "நாங்கள் அவற்றை கடல்சார் சிங்கங்கள் என்று குறிப்பிடுகிறோம், ஏனெனில் அவை கடல் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளவும் கடலில் இருந்து உணவை உட்கொள்ளவும் கற்றுக் கொண்டுள்ளன," என்று ஸ்டாண்டர் கூறுகிறார்.

ஸ்டாண்டர் நடத்திய ஒரு ஆய்வில், மூன்று இளம் பெண் சிங்கங்கள் 18 மாத காலப்பகுதியில் உட்கொண்ட உயிரிப்பொருட்களில் (biomass) 86% நீர்க்காகங்கள் (cormorants), ஃபிளமிங்கோக்கள் மற்றும் கடல்நாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டது.

"இது ஒரு சிறிய சிங்கங்களின் எண்ணிக்கையாக இருந்தாலும், கடலைப் பற்றிய அறிவை பயன்படுத்தி அவை இப்போது மீண்டு வரும் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாண்டர்.

இதற்கு ஸ்கெலிட்டன் கடற்கரையில் வசிக்கும் மனிதர்களுடனான மோதலைக் குறைக்க வேண்டும். சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு மிக அருகில் வரும்போது அவற்றைப் பயமுறுத்தச் சிங்கங்களை பாதுகாக்கும் காவலர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாண்டர் கூறுகிறார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்க, சிங்கங்கள் கடக்கும்போது ஒரு எச்சரிக்கையை அனுப்பும் மெய்நிகர் வேலி அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

சிங்கங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைப் புகைப்படக் கலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தான் புகைப்படம் எடுக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதே தனது வேலையின் முக்கிய நோக்கம் என்று வான் மால்டரென் கூறுகிறார். "[எனது புகைப்படங்கள்] இந்த விலங்குகளின் அழகையும் அவற்றின் பலவீன நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றின் மீள்தன்மை நமக்கெல்லாம் ஒரு பாடம். மாற்றத்தை எதிர்கொள்ள, தகவமைத்துக் கொள்ள மற்றும் காலம் கடப்பதற்கு முன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"விலங்குகள் மீண்டு வரும், அவை, அவற்றின் அறியப்பட்ட அழகு மற்றும் வலிமையைப் மீண்டும் பெறும் திறன் கொண்டவை. நாம் அவற்றிற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அழகான பாடத்தை அந்தப் புகைப்படம் நமக்குக் கடத்துகிறது" என்று ஸ்டாண்டர் ஒப்புக்கொள்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு