You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் கொலை முயற்சி: சுட வந்த நபரை முன்பே பார்த்தவர் பிபிசியிடம் கூறிய முக்கியத் தகவல்
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் பேசியபோது, டிரம்ப் பேசிய மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட கிரெக், டிரம்ப் மேடையில் ஏறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் ஒரு நபர் “கரடி போல் தவழ்ந்து சென்றதை” கண்டதாக பிபிசியிடம் கூறினார். அந்த நபரை காவல்துறையிடம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்த நபரின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர் துப்பாக்கியுடன் இருப்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது போலீசார் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை,” என்று கிரெக் கூறினார்.
இதை நேரில் கண்ட மற்றொரு நபரான ஜேசன், பிபிசியிடம் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார்.
“டிரம்பை பாதுகாக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் குதிப்பதை நாங்கள் கண்டோம். கூட்டத்தில் இருந்த அனைவரும் மிக வேகமாகக் கீழே இறங்கினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் எழுந்து நின்று தனது முஷ்டியை மேலே தூக்கிக் காட்டினார்,” என்றார் அவர். மேலும் அங்கு தோட்டா சத்தம் கேட்டதும் குழப்பம் நிலவியதால் அனைவரும் தரையில் படுக்கத் தொடங்கியதாகவும் ஜேசன் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் இருந்த டிம் என்பவர் பேசியபோது, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார்.
"டிரம்ப் கீழே விழுந்ததைத் பார்த்தோம். என்ன செய்வதென்று யாருக்கும் புரியாததால் உடனே எல்லோரும் தரையில் படுக்கத் தொடங்கினார்கள்." என்றார் டிம்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாரன் மற்றும் டெபி, குறைந்தது நான்கு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்கள். சத்தம் கேட்டவுடன் தரையில் படுத்துவிட்டதாகவும், கூட்டத்தினூடாக மேடைக்கு வந்த ரகசிய சேவை ஏஜென்டுகள், மேடையில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர் என்றும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)