நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தம் - கோபத்தில் மஹ்தி குடும்பம்

காணொளிக் குறிப்பு, நிமிஷா பிரியா விடுதலை, கோபத்தில் மஹ்தி குடும்பம் - என்ன நடக்கிறது?
நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தம் - கோபத்தில் மஹ்தி குடும்பம்

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனையின் பிடியில் இருக்கிறார் இந்திய செவியிலரான நிமிஷா பிரியா. கடந்த 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது இந்தியாவில் தலைப்புச் செய்தியானது. ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது 'வஸாபி' (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை அவர்களது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென', தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சில மதகுருமார்களின் தலையீடு மூலம்தான் நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது, பணம் கொடுத்தால் நிமிஷாவை மீட்டுவிடலாம் போன்ற செய்திகள் மஹ்தி குடும்பத்தையும், பழங்குடியினரையும் கோபப்படுத்தியுள்ளன. அது நிமிஷாவிற்கான மன்னிப்பைப் பெறும் செயல்முறையை இன்னும் தாமதப்படுத்துகிறது' என்று நிமிஷாவை மீட்க முயற்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி, அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

"மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மதத்தலைவர் கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் உடன் நிமிஷா விடுதலை குறித்து பேசியதாக கூறுபவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை

எங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று பொய்யாக கூறி மதத்தலைவரை சிலர் சந்தித்து பேசியிருக்கிறார்கள். எங்கள் அனுமதியின்றி நடந்துள்ள இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து நிமிஷாவை மீட்க உதவி வரும் 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் குழுவின்' உறுப்பினர் பாபு ஜானிடம் பேசியபோது, "நிமிஷா விஷயத்தில் யார் உதவினாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பு என்பதுதான் பிரதானம். அதை விடுத்து, தாங்கள் தலையிட்டால் உடனே நிமிஷா விடுதலை ஆகிவிடுவார் போன்ற செய்திகள் மஹ்தியின் குடும்பத்தையும், அவர்களது பழங்குடியையும் கோபப்படுத்தியுள்ளது" என்கிறார்.

அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ.பால் என்பவர் கடந்த ஜூலை 22 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், நிமிஷா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான முயற்சிகளை தான் எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அப்துல் ஃபத்தா மஹ்தி, "இப்படி பரப்பப்படும் அனைத்து பொய்யான செய்திகளும் உண்மையை மாற்றிவிடாது. எங்களின் ஒரே கோரிக்கை இஸ்லாமிய முறைப்படி கண்ணுக்கு கண் என்ற தண்டனையான பழிவாங்கலை அமல்படுத்துவதாகும். நாங்கள் நீதியைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய நிமிஷா பிரியா வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சாமுவேல் ஜெரோம், "மஹ்தியின் குடும்பம் ஒரு உயிரை இழந்துள்ளது. நிமிஷாதான் அந்தக் கொலையைச் செய்தவர். அப்படியிருக்க அந்தக் குடும்பத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் சுயலாபத்தோடு செயல்படுவது அவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷரியா சட்டத்தில் இடம் இருப்பதாலும், நிமிஷாவின் தாய் மற்றும் மகளைக் கருத்தில் கொண்டும் அவரைக் காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம்" என்றார்.

சரி, ஏமன் மக்கள் இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறார்கள்?

ஏமனைச் சேர்ந்த நோமன் அல் பாகர் என்ற நபர் முகநூலில் நிமிஷா வழக்கு தொடர்பாக பல பதிவுகளை இட்டு வருகிறார்.

அவர் ஜூலை 17 அன்று வெளியிட்ட ஒரு பதிவில், "இந்த வழக்கில் மரண தண்டனை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை, இந்தியா எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அல்லது உண்மைகளை மாற்ற முயற்சித்தாலும், நாங்கள் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். நீதியைப் பெற ஏமன் மக்களும், வஸாபி பழங்குடியும் ஒன்றிணைய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

இதுவே நிமிஷா வழக்கு குறித்த ஏமன் பொது மக்களின் மனநிலை என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

"நிமிஷா ஒரு கொலைக் குற்றவாளி. நம் வீட்டில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, பணம் தருகிறேன் அல்லது ஒரு மதத்தலைவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி விடுதலை பெறலாம் என குற்றவாளியின் தரப்பு கூறினால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? எனவே ஏமன் மக்களின் கோபம் நியாயமானதுதான். இதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் இருந்துகொண்டே யாராலும் நிமிஷாவை மீட்டுவிட முடியாது. நான் உள்பட எந்தவொரு தனிநபராலும் முடியாது. மஹ்தி குடும்பம் மன்னிப்பு அளிக்காவிட்டால், நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு