You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெப்போலியனின் தோல்விக்காக தமிழ்நாட்டில் கோட்டை கட்டிய மன்னர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் அவை. பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் போனபார்ட் ஆட்சி செய்த அந்தத் தருணத்தில், பிரான்ஸிற்கும் ஐரோப்பாவின் மற்ற சில நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர்கள் நடந்துவந்தன. 1803 முதல் 1815 வரை இந்தப் போர்கள் நடந்தன.
முடிவில் வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு செயின்ட் ஹெலனா தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த இறுதித் தோல்விக்கு முன்பாகவே ஒரு பின்னடைவைச் சந்தித்தார் நெப்போலியன். War of the Sixth Coalition என்ற பெயரில் நடந்த மோதலில் 1814ல் தோற்கடிக்கப்பட்டார் நெப்போலியன் போனபார்ட். First Treaty of Paris கையெழுத்திடப்பட்டு, நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
நெப்போலிய யுத்தத்தில் இது ஒரு மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்பட்டது. இந்த வெற்றியில் பிரிட்டனுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் செல்வாக்கு உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜி மன்னரின் கீழ் இருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இரண்டாம் சரபோஜி, நெப்போலியனுக்கு எதிரான பிரிட்டனின் இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒரு மிகப் பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்ப முடிவுசெய்தார்.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த சரபேந்திரராஜபட்டினம் என்ற ஊரில் இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க அவர் முடிவுசெய்தார். அதன்படி மனோரா என்ற கோட்டைச் சுவருடன் கூடிய நினைவுக் கோபுரம் கட்டப்பட்டது.
இந்த நினைவுக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது என்பதை, கோட்டைச் சுவர்களிலேயே ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி ஆகிய ஐந்து மொழிகளில் கல்வெட்டுகளாகப் பொறித்துவைத்தார் இரண்டாம் சரபோஜி.
பிரான்ஸின் மன்னரான நெப்போலியன் பிரிட்டிஷ்காரர்களால் தோற்கடிக்கப்பட்டதற்காக தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஒரு நினைவுக் கோட்டை கட்டப்பட்டது.
நெப்போலியனின் தோல்வியை இந்த அளவுக்குக் கொண்டாடியது யார்? காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு