டிரம்புடன் நாளை நேருக்கு நேர் விவாதம் - கமலா ஹாரிசுக்கு இந்த ஆயுதம் கைகொடுக்குமா?

    • எழுதியவர், கைலா எப்ஸ்டீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர், நியூயார்க்

2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு முக்கிய விவாதத்தின் போது, ஒரு வேட்பாளர் விவாத மேடையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். அவர் தனது போட்டியாளர் பேசும் போது முக்கிய தருணங்களில் குறுக்கிட்டு, விவாதம் செய்தார்.

அவர் தன் எதிர்தரப்பு வேட்பாளரான ஜோ பைடனை நேரடியாக எதிர்கொண்டார். இந்த விவாதம் அடுத்த சில நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்த நபர் எழுதப்படாத அரசியல் விதிகளை மீறினாரா என்று கூட விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அந்த வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அல்ல. அது கமலா ஹாரிஸ்.

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி, கமலா ஹாரிஸ் மீண்டும் ஒரு விவாத மேடையை எதிர்கொள்ளப் போகிறார். ஆனால் இந்த முறை, 2020ஆம் ஆண்டை விட ஒரு படி மேலே சென்று அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தன்னை முன்னிறுத்துகிறார். இதுவரை மேற்கொண்ட தன் பிரசாரத்தின் கடினமான ஒரு சவாலில் டிரம்பை எதிர்கொள்ளப் போகிறார்.

கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலுக்கு அவர் போட்டியிடத் தொடங்கியது முதல் துணை அதிபர் பதவியில் அமர்ந்தது வரை கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில், `விவாதங்கள்’ முக்கிய பங்கு வகிக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘கமலா ஹாரிஸின் அரசியல் திறன் பற்றிய கவலைகள்’

இதற்கு முன்னர் அவர் பங்குபெற்ற நான்கு முக்கிய விவாதங்களை பார்க்கும் போது, கமலா ஹாரிஸ் ஒரு விவாதத்தில் எப்போது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

கமலா ஹாரிஸ் இந்த உள்ளுணர்வை டிரம்பிற்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

2020-ம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கான போட்டியில் தோல்வியுற்றதில் இருந்து அவரது அரசியல் திறன் பற்றிய கவலைகள் நீடிக்கிறது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அவர் சில நேர்காணல்களில் தடுமாறியது அவரின் அரசியல் பேசும் திறன் பற்றிய கவலைகளை அதிகரித்தது. அவரது தற்போதைய பிரசாரம் இந்த நீண்ட கால கவலையை அகற்ற விரும்புகிறது.

இந்த நிகழ்வுகளை வைரல் வீடியோக்கள் எவ்வாறு வகைப்படுத்துகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, கமலா ஹாரிஸ் தடுமாற்றங்களை தவிர்க்க வேண்டும்.

"அவர் தனித்து நிற்க வேண்டும்." என்று "ஷி தி பீப்பிள்’’ குழுவை உருவாக்கிய அமி அலிசன் கூறினார். இந்த அமைப்பு அரசியலில் வேறுபாடுகள் இன்றி அனைத்து பெண்களும் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.

"விவாதத்தின் போது அவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்." என்றும் அமி கூறினார்.

கமலா ஹாரிஸ் தன் ஆரம்ப கால விவாதங்களில், தனது எதிர் தரப்பினரை தங்களைத் தாங்களே தோற்று போகச் செய்யும் சூழலை உருவாக்கியதன் மூலம் வெற்றியைக் கண்டார்.

2010 ஆம் ஆண்டு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கான விவாதத்தில், மதிப்பீட்டாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது குடியரசுக் கட்சியின் எதிர்ப்பாளர் ஸ்டீவ் கூலி ஆகியோரிடம் இரட்டை வருமானம் (double-dipping) எனப்படும் சர்ச்சைக்குரிய நடைமுறையைப் பற்றிக் கேட்டார்கள், இது ஒரு அரசு அதிகாரி அவர்களின் அரசாங்க சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திலிருந்து பெற அனுமதிக்கிறது.

"ஓய்வூதியம் மற்றும் அட்டர்னி ஜெனரலாக உங்களின் சம்பளம் இரண்டையும் எடுத்துக்கொண்டு இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளீர்களா?" என ஒரு நடுவர் வேட்பாளர்களிடம் கேட்டார்.

"ஆம், நான் செய்வேன்," என்று கூலி பதிலளித்தார். "நான் அதற்கு தகுதி பெற்றிருக்கிறேன்"

சிறிது நேரம், தனது நிலைப்பாட்டை பற்றி எதுவும் பேசாமல் மெளனம் காத்த கமலா ஹாரிஸ், பின்னர், "அப்படியே செய்யுங்கள், ஸ்டீவ், நீங்கள் அதற்கு தகுதியானவர்!" என்று பேசினார்.

ஸ்டீவ் கூலியை சட்டதிட்டங்கள் தெரியாதவர் என்று சித்தரிக்கும் நோக்கில் கமலா ஹாரிஸின் பிரச்சாரக் குழு இந்த தருணத்தை ஒரு விளம்பரமாக மாற்றியது. கமலா அந்த தேர்தலில் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016 ஆம் ஆண்டு கலிபோர்னியா செனட் பதவிக்கான விவாதத்தின் போது, கமலா ஹாரிஸின் எதிர்ப்பாளர் தனது இறுதி கருத்தை ஒரு `dab’ மூலம் நிறைவு செய்தார். இது அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த ஒரு நடன அசைவு.

திகைத்துப் போன கமலா ஹாரிஸ், "எனவே, இந்த தேர்தலில் வேட்பாளர்களுக்கு இடையே தெளிவான வித்தியாசம் உள்ளது என்பது நிரூபணம் ஆகிவிட்டது" என்று கேலியாக சொன்னார்.

அந்த தேர்தலிலும் வாக்காளர்கள் மீண்டும் கமலா ஹாரிஸை வெற்றி பெற செய்தனர்.

‘அமைதியை ஆயுதமாக பயன்படுத்துபவர்’

இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் கமலா ஹாரிஸ் விவாத மேடையில் வாய்ப்புகளை பயன்படுத்தும் திறனை நிரூபிக்கின்றன, அதே போல் எப்போது பேசாமல் பின்வாங்குவது சிறந்தது என்பதை அறியும் அவரின் உணர்வையும் காட்டுகிறது.

ஜூலியன் காஸ்ட்ரோ மற்றும் எலிசபெத் வாரனின் 2020 அதிபர் தேர்தல் பிரசாரங்களில் பணியாற்றிய ஜனநாயகக் கட்சியின் மூலோபாயவாதியான மாயா ரூபர்ட், "அவர் நம்பமுடியாத அளவிற்கு அமைதியை ஆயுதமாக பயன்படுத்துபவர் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

கமலா ஹாரிஸ் தேசிய அரங்கில் நுழைந்தவுடன், நெருக்கடியான களத்தில் நின்ற போதிலும், தனக்கான தளத்தை சிறப்பாக பயன்படுத்தி கொள்வதில் திறமையானவர் என்பதை நிரூபித்தார்.

எவ்வளவு பெரிய அரங்காக இருந்தாலும் , அவர் பேசுவதற்கான விருப்பத்தை வெளிப்படையாக அறிவிப்பார். இது அவருடைய எதிரிகளையும் - பார்வையாளர்களையும் அவரின் கருத்துகளை கேட்கும் சூழலை ஏற்படுத்தும்.

2020ம் ஆண்டு துணை அதிபர் விவாதத்தில் கமலா ஹாரிஸின் செயல்பாடு இப்போது வரை பேசப்படுகிறது. கமலா பேசி கொண்டிருக்கையில் மைக் பென்ஸ் குறுக்கிட்டார், அப்போது கமலா, "துணை அதிபர் அவர்களே, நான் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று உறுதியான குரலில் சொன்னார்.

சில வாரங்களுக்கு முன்பு, டெட்ராய்டில் தனது பேரணிக்கு இடையூறு செய்த காஸா எதிர்ப்பாளர்களை நோக்கி கமலா ஹாரிஸ் அதே வரியைப் பயன்படுத்தினார்.

"நான் பேசி கொண்டிருக்கிறேன்," என்று அவர்களை நோக்கி சொன்னார் “டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லுங்கள். இல்லையெனில் நான் பேசுகிறேன்." என்றார்.

தங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், கருத்துகள் கேட்கப்படுவதை உறுதி செய்யவும் பல கறுப்பினப் பெண்கள் திறம்பட பயன்படுத்திய அதே சொற்றொடரை கமலா ஹாரிஸ் பயன்படுத்துகிறார் என்று கூறுகிறார் அலிசன்.

"அவர் கருத்துகள் கேட்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதில் அவர் மிகவும் திறமையானவர்."

ஆனால், 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க செனட்டராக இருந்த கமலா ஹாரிஸ், மயாமியில் நடந்த ஜனநாயகக் கட்சியின் முதன்மை விவாதத்தின் போது, பஸ்ஸிங் (bussing) எனப்படும் கொள்கையில் பைடனின் கடந்தகால நிலைப்பாட்டை சவால் செய்யும் நோக்கில் எதிர் விவாதங்களுக்கு இடம் தராமல் கருத்துகளை முன்வைத்தார். இது, 2019 இல் அவரது மறக்க முடியாத விவாத தருணமாக அமைந்திருந்தது.

‘ஒரு திறமையான வழக்கறிஞர்’

இன வேறுபாட்டை களையும் முயற்சியில் வெவ்வேறு சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களைக் கொண்டு செல்லும் சிவில் உரிமைகள் தொடர்பான கொள்கையை எதிர்த்த சட்ட வல்லுநர்களுடன் இருந்த பைடனை அவர் விமர்சித்தார்.

"கலிபோர்னியாவில் ஒரு சிறுமி இருந்தாள், அவள் ஒருங்கிணைந்த பொதுப் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பில் இருந்தார், அவள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்" என்று ஹாரிஸ் கூறினார்.

பைடனிடம் இதனை சொல்லி கொண்டிருக்கையில் சற்று இடைநிறுத்தி, "அந்தச் சிறுமி நான்தான்." என்றார்.

விவாதத்தின் முடிவில், பைடனைத் தவிர வேறு எந்த வேட்பாளரையும் விட கமலா ஹாரிஸ் அதிகமாகப் பேசியிருந்தார் என்பது தெரிந்தது.

விவாதத்திற்குப் பிறகு 24 மணி நேரத்தில் $2 மில்லியன் நிதி திரட்டியதாக அவரது பிரசாரக் குழு அறிவித்தது.

பிரசாரத்தில் ஏற்பட்ட திருப்புமுனை மற்றும் வாக்கெடுப்பில் அடுத்தடுத்த எழுச்சி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பின்னர் `பஸ்ஸிங்’ செயல்பாட்டில் தனது சொந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த போராட வேண்டி இருந்தது.

இது அவரது செய்தி பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஒரு ஒத்திசைவான கொள்கை நிலைப்பாட்டை முன்வைக்க இயலாமை ஆகியவற்றை காட்டியது.

கமலா ஹாரிஸ் செய்த பல செய்தி தடுமாற்றங்களில் இதுவும் ஒன்றாகும், அது இறுதியில் அவரது அதிபராகும் முதல் முயற்சியை முறியடித்தது.

‘டிரம்பின் பேச்சுகளை புறக்கணிப்பது சிறந்தது’

ஒரு நிலையான கொள்கையை வெளிப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்தது மேற்கோள் காட்டப்பட்ட பொதுவான காரணங்களில் ஒன்றாகும். மேலும் கொள்கை விவரங்கள் பற்றி வரும் விவாதத்தில் கேள்வி எழுப்பப்படலாம். விரைவில் அவரின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்த வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் பல ஆண்டுகளாக கமலா ஹாரிஸின் பொதுக் கருத்துகளின் காணொலிகளை பகிர்ந்து, அவரது பேசும் பாணியை கேலி செய்து அவரை தகுதியற்றவர் என்று காட்டியுள்ளனர்.

அவர் பேசும் போது வாய்மொழியான சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார். சில சொற்றொடரை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் தெளிவின்மைக்காக அவரை விமர்சித்துள்ளனர்.

அவர் அதிபர் வேட்பாளராக தேர்வான பிறகு, ஒரு சமீபத்திய சிஎன்என் நேர்காணலில், காலநிலை மாற்றம் குறித்த பதில் அளித்தார். "இது ஒரு அவசரமாக கையாள வேண்டிய விஷயம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதை உள்ளடக்கிய அளவீடுகளைப் பயன்படுத்த வேண்டும்" என்று ஹாரிஸ் கூறினார்.

நேர்காணல்களில் பேசுவதை விட விவாத மேடைகள் சவால் மிக்கதாக இருக்கும். விவாத மேடையில், பேசும் நேரம் குறைவாக இருக்கும். செய்தியின் தெளிவு முக்கியமானது.

ஏபிசி நியூஸ் நடத்தும் விவாதம், பொதுக் கருத்தை மீள் கட்டமைப்பதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக கமலா ஹாரிஸுக்கு இருக்கும், மேலும் கமலா ஹாரிஸ் அடிக்கடி இந்த நிகழ்வுகளுக்கு பல வலிமையான கருத்துகளோடு வருவதையும், எதிர் அணியினரை தாக்குவதையும் கடந்த கால விவாதங்கள் காட்டுகின்றன.

ஆனால் அவர் முதல் முறையாக டிரம்புடன் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது, கடந்த கால விவாதங்களின் அழுத்தத்தை விட இது அதிகமாக இருக்கும்.

மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட, டிரம்ப் ஒரு வலிமையான சவாலை முன்வைக்கிறார். 2016 ஆம் ஆண்டு தனது எதிர்ப்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான விவாதத்தில், அவர் மேடையில் ஹிலாரி பின்தொடர்ந்து, அனைத்து கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்தார்.

பைடனுக்கு எதிரான அவரது முதல் 2020 அதிபர் விவாதம், டிரம்ப் குறுக்கிட்ட போது புரியாத கைகலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில், பைடன் மிகவும் எரிச்சலடைந்தார்: "நீங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்” என்றார்.

"டொனால்ட் டிரம்ப் ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த வேட்பாளர், அவர் எப்போது என்ன செய்வார் என்பது உங்களுக்குத் தெரியாது," என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை விவாதங்களுக்குத் தயார்படுத்திய ஸ்மித் கூறினார்.

கமலா ஹாரிஸ், ஒரு முன்னாள் வழக்குரைஞர், விவாத மேடையில் முன்னும் பின்னுமாக கருத்தை பரிமாற்றம் செய்வதில் திறமையானவர். அவர் செனட் விசாரணைகளில் வாதிடும் போது டிரம்பின் அதிகாரிகளையும் உச்ச நீதிமன்ற வேட்பாளர்களையும் திணறடித்தார். இது அவரின் வாதிடும் திறனை நிரூபித்தது.

ஆனால் வரவிருக்கும் ஏபிசி விவாதத்தின் வடிவம் அவரது வழக்குரைஞர் திறன்களை மேம்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தலாம், ஏனெனில் எதிராளி பேசும் முறை வரும் போது கமலாவின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படும்.

ஜூன் மாதத்தில் பைடன்-டிரம்ப் விவாதத்தின் அடிப்படையில் அதே விதிகளைக் கொண்டிருந்தது, கமலா ஹாரிஸ் டிரம்புடன் மோதுவதற்கு மாறாக மதிப்பீட்டாளர்களிடமிருந்து தந்திரமான கேள்விகளை எதிர் கொள்வார்.

கமலா ஹாரிஸ் சில கேள்விகளை எதிர்கொண்டபோது சிரமப்பட்டார். என்பிசி நியூஸின் லெஸ்டர் ஹோல்ட் உடனான அவரது மறக்கமுடியாத 2021 நேர்காணலின் போது, அவர் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக பதில் அளிக்க தடுமாறினார்.

ரூபர்ட் சொல்லக் கூடிய ஒரு ஆபத்து என்னவென்றால், கமலா ஹாரிஸ் டிரம்ப்புடனான உண்மைகளை பற்றி வாதிடுவதை காட்டிலும் ஒரு நீண்ட விவாதத்திற்கு இழுக்கப்படுவார்.

டிரம்ப் கமலா ஹாரிஸை தூண்டி பேச வைப்பது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம், மேலும் அவர் உரையாடலில் ஆதிக்கம் செலுத்தினார் என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தலாம்.

“சில சமயங்களில் கமலா ஹாரிஸ் டிரம்பின் பேச்சுகளை புறக்கணிப்பது சிறந்த எதிர்வினையாக இருக்கும்.” என்கிறார் ரூபர்ட்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)