You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத வன்முறை அதிகமில்லாத நாக்பூரில் திடீரென வன்முறை நிகழ்ந்தது ஏன்? யார் காரணம்? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், பாக்யஶ்ரீ ராட், ஆஷே யேக்டே
- பதவி, பிபிசி மராத்தி
நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி இரவு நடந்தது என்ன என்பது பலருக்கும் புரிந்துகொள்ள முடியாதது. மத வன்முறை வரலாறு அதிகமில்லாத இல்லாத இந்த நகரில் 2 குழுக்களிடையே திடீரென கல்வீச்சு தொடங்கியது. தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அமைதி நிலவ வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசும், உள்ளூர் காவல் அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் நடந்த மறுநாள் கடைகள் மூடப்பட்டிருந்தன, வன்முறை கும்பலால் எரிக்கப்பட்ட கார்கள் நின்றுகொண்டிருந்தன. சம்பவ இடத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாக்பூரின் காந்தி கேட் முதல் ஆக்ராசென் சவுக், சக்கரதாரா, கணேஷ்பேட்டை வரை மத்திய நாக்பூர் முழுவதுமே சந்தைப் பகுதி என்பதால், அங்குள்ள அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும் ஒரு பதற்றமான நிலை உள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாக்பூரில் வன்முறை ஏற்பட காரணம் என்ன? யார் செய்தது? கற்களை வீசி, நெருப்பு வைத்தவர்கள் யார்? காவல்துறை தாமதம் செய்ததா? இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? விரிவாகப் பார்க்கலாம்.
'இதுபோல் எதையும் நான் பார்த்ததில்லை'
நாக்பூரின் பஹல்தார்பூரா பகுதியில் தற்போது பதற்றமான அமைதி நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டுள்ளன, சந்தை மூடப்பட்டுள்ளது, இந்த மூடப்பட்ட கடைகளின் முன் அமர்ந்திருக்கும் அப்துல் கலீக் மற்றும் அண்டை வீட்டார் சன்னி தவ்தாரியாவுடன் பேசினோம்.
அப்துல் கலீக் பேசுகையில்,"எனது வாழ்நாள் முழுவதும் இதுபோல் எதுவும் நடந்து நான் பார்த்ததில்லை. எங்கள் நகரில் இதுபோல் எப்போதும் ஏற்பட்டதில்லை. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம், இங்கு எதுவும் நடக்கவில்லை. நேற்றிரவு நேர்ந்த குழப்பத்திற்கு பிறகு எங்கள் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாள் முழுவதும் உபவாசம் இருந்த பிறகு நாங்கள் பிரார்த்தனை செய்ய சென்றிருந்தோம். நாங்கள் திரும்புவதற்குள் அனைத்து பகுதிகளிலும் குழப்பம் நிலவியது. நடந்தது மிகவும் தவறானது. நாங்கள் மிகவும் அவதியடைந்துள்ளோம்." என்றார்.
இதைச் சொல்லும் போது அப்துல் கலீகால் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு அருகே அமர்ந்திருந்த சன்னி தவ்தாரியா,"நாங்கள் இந்த வயதை எட்டிவிட்டோம், ஆனால் இதைப் போல் எதுவும் இதுவரை நடந்ததில்லை. இதனை செய்ய விரும்பியவர்கள் செய்திருக்கிறார்கள். அதன் விளைவுகளை நாங்கள் அனுபவிக்கிறோம். எங்களால் நேற்றிரவு முழுவதும் தூங்க முடியவில்லை. எங்கள் குடும்பங்களில் பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர். தற்போது அடுத்து என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்று கூறினார்.
அப்துலுக்கு அருகே அமர்ந்திருந்த சன்னி தேவ்தரியா, இதைப் போன்ற ஒன்றை பார்ப்பது இதுதான் முதல் முறை என கூறினார். "இந்துகள், முஸ்லீம்கள் ஆகிய நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக அமைதியாக வழ்ந்துவந்திருக்கிறோம். இங்கு சண்டைகள் இல்லை. திங்கட்கிழமை நடந்தது உள்ளூர் மக்களின் தவறல்ல. இதற்கு வெளியாட்கள்தான் பொறுப்பு. வெளியிலிருந்து வந்த இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் இதைச் செய்தனர்." என்று அவர் தெரிவித்தார்.
நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி நடந்தது என்ன?
நாக்பூர் முழுவதும் தற்போது அதிக காவல்துறையினர் உள்ளனர். கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற தெருக்கள் இரும்பு தகடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சில கடைகள் சூறையாடப்பட்டுள்ளதுடன், 2 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, சில வீடுகளின் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளதுடன், ஒரு வீட்டின் சிசிடிவி உடைக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் நடந்தது என்ன என்பதைப் பற்றி முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
இதைப் பற்றி பேசிய அவர், "2025 மார்ச் 17ஆம் தேதியன்று விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்கள் நாக்பூர் நகரின் மஹல் பகுதியில் 'ஒளரங்கசீப் சமாதியை அகற்றுங்கள் என்பது போன்ற முழக்கங்களுடன் போராட்டம் நடத்தினர்.
"இந்த போராட்டத்தின் போது, அவர்கள் புல்லால் செய்யப்பட்ட பாய்களை சமாதியின் குறியீடாக எரித்தனர். அதன் பின் கணேஷ்பேத் காவல்துறையினர் பிற்பகல் 3:09 மணிக்கு போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 299, 37(1), 37(3) பிரிவுகள் மற்றும் மகாராஷ்டிர காவல்துறை சட்டத்தின் 135ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்."
"பின்னர் மாலையில் ஒரு வதந்தி பரப்பப்பட்டது. காலையில் நடைபெற்ற போராட்டத்தில் எரிக்கப்பட்ட கல்லறைத் துணியில் மத வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாக வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தி பரவிய நிலையில், மாலை பிரார்த்தனைக்குப் பிறகு இருநூறு முதல் முந்நூறு பேர் கூடி முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். இவர்கள் தீவிரமாக பேசத் தொடங்கி, " அதை தீக்கிரையாக்குவோம்' என்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பலப் பிரயோகம் செய்ய வேண்டியதாயிற்று," என்றார் பட்னவிஸ்.
"முன்னதாக அவர்கள் பஜ்ரங்தள் செயல்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால் அவர்கள் கணேஷ்பேத் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடைய புகார் கேட்கப்படும் நேரத்தில் ஹன்ஸாபுரி பகுதியில் இருநூறு முதல் முந்நூறு பேர் தங்கள் கைகளில் குச்சிகளுடன் கற்களை வீசத் தொடங்கினர். அவர்கள் முகத்தின் மீது கொடிகளை கட்டியிருந்தனர். இந்த சம்பவத்தில் 12 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்," என முதலமைச்சர் தெரிவித்தார்.
"மூன்றாவது சம்பவம் பால்தார்பூரா பகுதியில் 7:30 மணிக்கு நிகழ்ந்தது. அங்கு, 80 முதல் 100 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து காவல்துறை மீது தாக்குதல் நடத்தியது. அதன் விளைவாக, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும், லேசான தடியடியையும் பிரயோக்கிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கிரேன், இரண்டு ஜேசிபிகள் மற்றும் சில நான்கு சக்கர வாகனங்கள் இந்த சம்பவத்தில் எரிக்கப்பட்டன," என்றார் முதலமைச்சர்.
கல்லறை துணி எரிக்கப்பட்டதாக கூறப்படுவது வதந்தி என முதலமைச்சர் கூறியிருந்தாலும். நாக்பூர் உள்ளுர்வாசிகள் அதுதான் உண்மையில் நடைபெற்றது என கூறுகின்றனர்.
பிபிசி மராத்தியிடம் பேசிய வழக்கறிஞர் ராகேஷ் தவ்தாரியா சொல்கிறார், "காந்திகேட் சிவாஜி சிலையருகே நேற்று நடந்ததை கண்டிக்கிறேன். எனது மதத்தை பின்பற்ற நான் பிற மதங்களை அவமதிக்க வேண்டிய தேவை இல்லை. நான் ஒரு இந்து. யாராவது எனது கீதையையும், ராமாயணத்தையும் எரித்து அவமதித்தால் நான் மோசமாக உணர்வேன். அதேபோல் அங்கு ஒரு துணி எரிக்கப்பட்டது. அந்த துணி அவமதிக்கப்பட்டது இந்துகள், முஸ்லிம்கள் இருவருக்குமே ஏற்றது அல்ல.
நிர்வாகம் இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், அதற்கு அடுத்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். காலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகளை அமைத்திருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போதுமான அளவு காவல்துறையினர் போடப்பட்டிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. முஸ்லிம் சமூகத்தினர் முழக்கமிட்டதும், தாக்குதல் நடத்தியதும் மிகவும் தவறுதான். காவல்துறையினரும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது பணியை செய்துகொண்டிருந்தனர்." என்றார்.
காவல்துறை இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
"இந்த வன்முறையில் 33 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் அதிகாரிகள். ஒருவர் ஒரு கோடரியால் தாக்கப்பட்டார். பொதுமக்களில் 5 பேர் காயமடைந்தனர். மூவர் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்," என்றார் முதலமைச்சர்.
காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர சிங்ஹால் சொல்கிறார்." இதுவரை, 5 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளோம். இதைத் தவிர, 50-க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்."
காவல்துறை எடுத்த நடவடிக்கை பற்றி பேசிய முதலமைச்சர்,"மாநிலத்தின் டிஜிபி அனைத்து காவல் ஆணையர்களின் கூட்டத்தை நடத்தி மாநிலம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தார்."
காலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு இடைப்பட்ட நேரத்தில் நாக்பூரில் முழுமையான அமைதி நிலவியது. ஆனால் அதன் பின்னர் மாலையில், சிலர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றன. கற்கள் நிரப்பிய தள்ளுவண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.
"சிலர் கற்களை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிக அளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, சில வீடுகளும், இடங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன.," என்றார் முதலமைச்சர் பட்னவிஸ்.
சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னவிஸ், "சாவா திரைப்படம் சத்ரபதி சம்பாஜி மகராஜின் உண்மையான வரலாற்றை நம் முன் கொண்டுவந்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுள்ளன. ஒளரங்கசீப்பிற்கு எதிரான கோபம் வெளியே வருகிறது.
மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம். பெரிய அளவிலான முதலீடு மாநிலத்திற்குள் வருகிறது என்பதால் மக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஊக்கப்படுத்தப்படவேண்டும். யாரேனும் கலவரத்தை தூண்ட நினைத்தால், சாதி, மத பேதமின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என கூறினார்.
சட்டப்பேரவைக்கு வெளியே, ஊடகங்களிடம் பேசிய மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, "ஒளரங்கசீப் மகராஷ்டிராவின் மீதுள்ள ஒரு கறை. அந்த கறையை அகற்றுவதற்காக சிலர் போராடுகின்றனர். அது தவறல்ல. ஒளரங்கசீப்பின் அநீதி, அடக்குமுறை மற்றும் புகழ்ச்சியை மகாராஷ்டிரா பொறுத்துக் கொள்ளாது. இத்தகையோரை மகாராஷ்டிரா மன்னிக்காது." என்றார்.
அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், காவல்துறை நடவடிக்கை, மற்றும் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)