You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலைச் சேதப்படுத்த நினைக்கும் இரான், இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்?
- எழுதியவர், ஜெரெமி பொவன்
- பதவி, சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி
கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று அந்தத் தாக்குதல் குறித்தும், அது நடத்தப்பட்ட முறை குறித்தும் இரான் வெளிப்படையாக அறிவித்தது.
இரானின் ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.
இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும்.
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்திருக்கிறது.
கடந்த முறை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ‘வெற்றியை கொண்டாடுங்கள் ஆனால் பதிலடி வேண்டாம்’ என்று கூறினார். அதனால் இஸ்ரேல் அதனைச் செய்யவில்லை. ஆனால், இம்முறை இஸ்ரேலின் மனநிலை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
இஸ்ரேலின் தடுப்பு அமைப்பு என்னவானது?
நேற்றிரவு (அக்டோபர் 1) இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட்டின் ட்வீட்டைப் பாருங்கள்: "இது, மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றியமைக்க, 50 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு."
''இந்த பயங்கரவாத ஆட்சியைக் கொடிய முறையில் முடக்குவதற்கு'' இஸ்ரேல் இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இப்போது பென்னட்டின் இஸ்ரேலின் பிரதமராக இல்லை (அவர் வருங்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராகலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதனால்தான் கடினமானவர் என்பதைக் காட்ட அவர் இந்த நிலைப்பட்டை வெளியிட்டார்). ஆனால் இது இஸ்ரேலின் ஒரு குறிப்பிட்ட மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
அணுசக்தி தளங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் என இரானியப் பொருளாதாரத்திற்குச் சேதம் விளைவிக்கக்கூடிய எதன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம். இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.
இரானும் அதன் அணுசக்தி நிலையங்களும் தாக்கப்பட்டால், லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவிடம் இருக்கும் அதிநவீன ஆயுதங்களின் மிகப்பெரிய களஞ்சியம் அதற்குப் பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் ஹெஸ்பொலா அமைப்பை நிலைகுலைய வைத்து, அதன் ஆயுதங்களில் பாதியை அழித்துவிட்டது. லெபனானிலும் படையெடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இடமிருக்கிறதா?
ஹெஸ்பொலா வடிவில் இரானுக்கு இருந்த தடுப்பு, நொறுக்கப்பட்டுவிட்டது. எனவே இஸ்ரேலியர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானம் தாங்கிக் கப்பல்களின் மற்றொரு குழுவை மத்தியதரைக் கடலுக்கு அனுப்புகிறார். ‘நீங்கள் இஸ்ரேலைத் தாக்கினால், அமெரிக்காவையும் தாக்குவதாக அர்த்தம்’ என்று அவர் இரானுக்குச் சமிக்ஞை செய்கிறார்.
இந்த ஸ்திரமற்ற தன்மை, நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் உருவாகும் கொந்தளிப்பு, ஆகியவற்றால்தான் போர் வலுக்குமோ என்ற பயம் பரவலாக இருக்கிறது.
இப்போது அது வெளிவருவதை நாம் காண்கிறோம். இந்த நேரத்தில் ராஜதந்திரத்திற்கு மிகக் குறைந்த இடமே இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)