காணொளி: முகமது அலி - விளையாட்டைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தியது எப்படி?
குத்துச்சண்டை என்று சொன்னாலே பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் முகமது அலி. உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டைப் போட்டிகளின் பட்டியலில் அவரது ஆட்டங்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். விளையாட்டு உலகின் மிகச்சிறந்த புகைப்படங்களிலும், உலகம் போற்றும் பொன்மொழிகளிலும் அவரது பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
"பட்டாம்பூச்சியைப் போலப் பற, தேனியைப் போலக் கொட்டு" (Float like a butterfly, sting like a bee) என்ற தனது புகழ்பெற்ற வரிகளுக்கு ஏற்பவே முகமது அலியின் விளையாட்டுப் பாணியும் அமைந்திருந்தது. ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் ஆதிக்கம் செலுத்திய அவர், தனது வேகம் மற்றும் நுணுக்கமான கால் அசைவுகளுக்காகப் (footwork) பெரிதும் பேசப்பட்டார். அக்காலத்தில் ஹெவிவெயிட் வீரர்களிடம் இந்த இரண்டு அம்சங்களையும் காண்பது அரிதாக இருந்தது. இதுவே அவரைப் பிற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.
எனினும், குத்துச்சண்டை வளையம் மற்றும் விளையாட்டு மேடைகளைத் தாண்டி முகமது அலி சமூகத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, போரில் பங்கேற்க முடியாது என்று அவர் அறச்சீற்றத்துடன் மறுத்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டார்; குத்துச்சண்டை விளையாட அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
ஆனாலும், அவர் தனது நிலைப்பாட்டில் சமரசமின்றி உறுதியாக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய அவர், முன்னைவிடவும் வலிமையான வெற்றிகளைப் பதிவு செய்தார். அத்தகைய ஆளுமையான முகமது அலியின் பிறந்த தினம் இன்று.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



