எரிமலையில் விழுந்த பெண் – உயிருடன் இருப்பது தெரிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்?

    • எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன்
    • பதவி, பிபிசி செய்திகள்

இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அலறிய சத்தம் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த நாட்களில், கடுமையான நிலப்பரப்பாலும் மூடுபனி வானிலையின் காரணமாகவும், 26 வயதான அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று மீட்புக் குழு அவரது உடலை கண்டடைந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

"மிகுந்த சோகத்துடன், அவர் உயிர் பிழைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மரின்ஸின் குடும்பத்தினர் கூறினர்.

"நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்து பிரார்த்தனைகளுக்கும், அன்பும் ஆதரவும் மிக்க செய்திகளுக்காகவும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தோனீசியாவின் லோம்போக் தீவுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்குப் பயணம் செய்திருந்தார் மரின்ஸ்.

சனிக்கிழமை (உள்ளூர் நேரப்படி 06:30 மணி) ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, "எரிமலையின் பள்ளத்திற்கு அருகிலுள்ள பாதையைச் சுற்றியுள்ள பாறையிலிருந்து" மரின்ஸ் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலப்பரப்பு வழுக்கும் தன்மையுடனும், ஏறுவதற்கு "மிகவும் கடினமாகவும்", சுற்றியுள்ள பகுதியைப் பார்ப்பதற்கு சிரமமாகவும் இருந்தது என்று அந்தக் குழுவில் பயணித்த ஒருவர் பிரேசிலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மலையேறுபவர்களால் படம்பிடிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் இணையதளத்தில் பரவி, பிரேசிலிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில், சனிக்கிழமையன்று மரின்ஸ் கவலையுடன் காணப்பட்டாலும் உயிருடன் இருந்ததும், சாம்பல் நிற மண்ணில் உட்கார்ந்து நகர்ந்து கொண்டிருந்ததும் காணப்படுகிறது. அவர் இருந்த இடம் மலையேற்றப் பாதைக்குக் கீழே அமைந்திருந்தது.

ஆனால் மீட்புப் பணியாளர்கள் 300 மீ (984 அடி) கீழே இறங்கிய போது, மரின்ஸ் இருப்பதாக நம்பிய இடத்திற்கு அருகே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை அழைத்தபோதும் மரின்ஸ் பதிலளிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் அந்த இடத்தில் இல்லை என்பதை டிரோன் காட்சிகள் சுட்டிக்காட்டின.

எனவே மீட்பு பணிகள் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டதாகவும், வெப்பமான இடங்களில் பயன்படுத்தப்படும் டிரோனின் பயன்பாட்டைக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமையன்று, மீட்புப் பணியாளர்களால் மரின்ஸைக் மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவர் முன்பு இருந்த இடத்தில் இருந்து இன்னும் கீழே விழுந்து விட்டதாகத் தோன்றியது.

ஆனால், 'பருவ நிலை'யின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியபின், மீட்புப் பணியாளர்கள் ஒரு பள்ளத்தாக்கில் 600 மீட்டர் கீழே இறங்கி, இறுதியாக அவரது உடலை அடைந்ததாக இந்தோனீசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவரது உடலை மீட்க முடியவில்லை.

3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இருப்பினும், கடந்த மாதம் ஒரு மலேசிய சுற்றுலாப் பயணி உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் அதில் ஏற முயன்ற பலர் இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரின்ஸ் விழுந்த பிறகு அந்தப் பாதை இன்னும் மூடப்படாதது குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு