You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார்.
”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்”
"அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார்.
"இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார்.
“அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.
சரமாரி கேள்விகள்
எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார்.
"நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார்.
”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.
"எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார்.
பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார்.
இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார்.
”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார்.
இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது.
இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி
இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன?
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.
அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும்.
இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது.
தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது.
சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
பாஜக சொல்லும் காரணம் என்ன?
அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.
இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர்.
கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)