சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியை முகத்திலேயே சுட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Italian Ministry of the Interior
- எழுதியவர், ஜெனிஃபர் ஜோன்ஸ், ட்ரிஸ்டன் அப் இஃபான்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வயலட் கிப்சன் கிட்டத்தட்ட வரலாற்றை மாற்றி எழுதும் தறுவாயில் இருந்தார். அவர் ரோமில் ஒரு கூட்டத்தில் இருந்து வெளியே வந்து பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியை துப்பாக்கியால் சுட்டார்.
அந்தக் குண்டு முசோலினியின் மூக்கை லேசாக உரசி சென்றது. அவருக்குப் பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை. வயலட் மீண்டும் சுட முயன்றார். ஆனால் அவரது துப்பாக்கியில் சிக்கல் ஏற்பட்டதால் சுடவில்லை.
பின்னர் அவர் முசோலினியின் ஆதரவாளர்கள் நிரம்பிய கூட்டத்தால் சூழப்பட்டார். அவரது கொள்ளுப் பேத்தி பிலிப்பா கிப்சனின் கூற்றுப்படி, காவல்துறை அந்தக் கூட்டத்திடம் இருந்து அவரைக் காப்பாற்றியது. "ஏனெனில், அந்தக் கூட்டம் ஒருவேளை அவரைக் கொன்றிருக்கக்கூடும்."
இதற்குப் பிறகு, வயலட் இத்தாலியில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார் (நாடு கடத்தப்பட்டார்). அங்கு அவர் நார்தம்ப்டனில் உள்ள ஒரு உளவியல் மருத்துவமனையில் வைக்கப்பட்டார். 1956-இல் அவர் உயிரிழக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
"இல் டூஸ்" (தலைவர் என்று பொருள்) என்றும் அழைக்கப்பட்ட முசோலினியை கொல்ல நான்கு முயற்சிகள் நடந்ததாக அறியப்படுகிறது. ஆனால் வயலட் மேற்கொண்ட முயற்சியே மிக நெருக்கமாக வந்தது.
மத்திய வேல்ஸில் உள்ள செரெடிகியனில் உள்ள லாங்க்ரானோக்கில் வசிக்கும் பிலிப்பா கிப்சன், வயலட் செல்வம் மிக்க, அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.
அவரது தந்தை பரோன் ஆஷ்போர்ன், அயர்லாந்தின் லார்ட் சான்சலராக பணியாற்றிய ஓர் ஆங்கிலோ-ஐரிஷ் பிரபு ஆவார். அது அக்காலத்தில் நாட்டின் மிக உயர்ந்த சட்டபூர்வ பதவியாக இருந்தது.
பிலிப்பா விவரித்தபடி, "வயலட் அந்த வயது மற்றும் அந்தஸ்துக்கு உரிய ஒருவருக்கான வழக்கமான வளர்ப்பைக்" கொண்டிருந்தார். அதாவது, அவர் சலுகைகள் மற்றும் செல்வங்களுடன் வளர்ந்தார். இருப்பினும், அவர் பின்னர் தனது குடும்பத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராகச் சென்றார். அவர் கத்தோலிக்க மதத்திற்கு மாறி ஒரு சோஷலிஸ்டாக ஆனார். இது அவரது குடும்பப் பின்னணியில் இருந்து மிகவும் வேறுபட்டது என்று பிலிப்பா கூறினார்.
பிபிசி ரேடியோ சைம்ருவின் 'ட்ரோஸ் ஜினியோ' நிகழ்ச்சியில் பேசிய பிலிப்பா கிப்சன், "குடும்பத்தினர் இதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனாலும் அவர்கள் வயலட்டிடம் மென்மையாகவே நடந்துகொண்டனர். அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். ஆனால் அவர் மிகவும் புத்திசாலியான பெண்ணாகவும் இருந்தார்," என்று கூறினார்.
வயலட் கிப்சன் பின்னர் இத்தாலிக்குச் சென்றதாகவும் அங்கு அவர் மொழியைக் கற்றுக்கொண்டு, "நல்ல காரியங்களைச் செய்தார்" என்றும் பிலிப்பா கூறினார். "அது பணக்காரர்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்யும் ஒரு காலகட்டமாக இருந்தது," என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், வயலட் தனது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் கடுமையான உளவியல் பிரச்னைகளையும் சந்தித்தார். தனது வருங்கால கணவர் திடீரென இறந்த பிறகு அவர் மனமுடைந்து போனதாக பிலிப்பா கூறினார். கத்தியால் ஒருவரைத் தாக்கியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தற்கொலைக்கும் முயன்றார்.
வயலட் ஏன் பெனிட்டோ முசோலினியைக் கொல்ல முயன்றார் என்பது பற்றிப் பேசுகையில், "முசோலினியின் பாசிசம் வளர்ந்து வருவதையும், அவரது நம்ப முடியாத கொடூரத்தையும் வன்முறையையும் கண்டு அவர் அவ்வாறு செய்தார் என்று நினைக்கிறேன்," என்று கூறினார் பிலிப்பா.

பட மூலாதாரம், Getty Images
மேலும் பேசிய அவர், "சோஷலிச தலைவர் (ஜியாகோமோ மட்டியோட்டி) ஒரு பாசிச கும்பலால் கொல்லப்பட்டார். அதுவே அவரை இந்த முடிவுக்குத் தூண்டிய காரணங்களில் ஒன்று," என்று தெரிவித்தார்.
"ஆகவே, இது அரசியல் நோக்கம், மத நம்பிக்கை சார்ந்த நோக்கம் ஆகிய இரண்டும் சார்ந்தது. ஒரு முக்கியமான காரணத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்துகொள்ள அவர் முன்வந்தார்," எனவும் பிலிப்பா குறிப்பிட்டார்.
கடந்த 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி, பெனிட்டோ முசோலினி ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வயலட் கிப்சன் அவரைக் கொல்ல முயன்றார்.
"அவருக்கு அப்போது 50 வயதுதான். ஆனால் அவர் மிகவும் வயதானவராகத் தோற்றமளித்தார். எனவே தங்களுக்கு மிக அருகில் ஒரு வயதான பெண்மணி துப்பாக்கியை எடுத்ததை யாரும் கவனிக்கவில்லை," என்று பிலிப்பா கிப்சன் விளக்கினார்.
"அவர்களுக்கு இடையே சிறிது தூரமே இருந்தது. ஆனால் அவர் தலையைத் திருப்பியபோது, அது (குண்டு) அவரது மூக்கை லேசாக உரசிச் சென்றது," என்று கூறினார் பிலிப்பா.

அதாவது, அவரது கூற்றுப்படி, அவர் முசோலினிக்கு மிக அருகில் இருந்தபோது, கடைசி நேரத்தில் முசோலினி தலையைத் திருப்பியதால், குண்டு அவரது மூக்கை மட்டும் லேசாக காயப்படுத்தியது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கமும் வயலட்டின் குடும்பத்தினரும் முசோலினிக்கு கடிதம் எழுதியதாக பிலிப்பா கூறினார். அவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர் உயிர் பிழைத்ததற்காக வாழ்த்தினர். மேலும், வயலுட்டுக்கு உளவியல் பிரச்னைகள் இருந்ததையும் அவர்கள் வலியுறுத்தினர்.
"ஓர் அரசியல் எதிரி அவ்வளவு நெருங்கி வந்துவிட்டதாகத் தோன்றக்கூடாது என்பதற்காகவும் முசோலினி அதைச் செய்தார் (அவரது உளவியல் உறுதியற்ற தன்மையை முன்னிலைப்படுத்தினார்). அதாவது, ஒரு தீவிரமான அரசியல் எதிரி தன்னைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டதாக மக்கள் நினைக்கக்கூடாது என்பதற்காக முசோலினி அவரது உளவியல் பிரச்னையை முன்னிலைப்படுத்தினார்."
"முசோலினியை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் அனைத்தில் இருந்தும் தப்பினார். இது முசோலினி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் அவரைத் தோற்கடிக்க முடியாது என்றும் மக்களை நம்ப வைத்தது," என்று அவர் மேலும் கூறினார்.

பின்னர் 1945-இல் முன்னேறி வந்த நேச நாட்டுப் படைகளிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, முசோலினி இத்தாலிய எதிர்ப்புப் போராளிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
வயலட்டின் கதை பின்னர் பாடல்கள், புத்தகங்கள், ஒரு நாடகம், ஒரு வானொலி ஆவணப்படம் மற்றும் 'வயலட் கிப்சன்: முசோலினியை சுட்ட ஐரிஷ் பெண்' என்ற 2021-ஆம் ஆண்டு திரைப்படம் உள்படப் பல படைப்புகளுக்கு உத்வேகம் அளித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், டப்ளினில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகை திறக்கப்பட்டது.
தனது பாட்டி வழி உறவுமுறையான அவரைத் தான் பெரிதும் போற்றுவதாகவும், அதேநேரம் வன்முறையைத் தான் ஆதரிப்பதில்லை என்று பிலிப்பா கூறினார். "எந்த வகையான அரசியல் வன்முறையையும் நான் நிச்சயமாக ஆதரிக்க மாட்டேன், அது ஒருபோதும் தீர்வாகாது," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "ஆனால் அவரது ஆழ்ந்த நம்பிக்கைகளே அவரை அந்தச் செயலை நோக்கி இட்டுச் சென்றதாகவும் நான் கருதுகிறேன். எனவே அவரது துணிச்சலையும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள அவர் கொண்டிருந்த மனப்பான்மையையும் நான் போற்றுகிறேன். ஆனால், அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் எந்த வகையான படுகொலை முயற்சிகளையும் நான் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்," என்றும் கூறினார்.

பட மூலாதாரம், PA Media
யார் இந்த முசோலினி?
பெனிட்டோ அமில்கேர் ஆண்ட்ரியா முசோலினி என்ற முழுப்பெயரைக் கொண்ட பெனிட்டோ முசோலினி, 1883-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி வடக்கு மத்திய இத்தாலியில் உள்ள பிரடாப்பியோவில் பிறந்தார். பின்னர் அவர் வலுவான, சர்வாதிகார ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் அமைப்பான பாசிசத்தை நிறுவினார்.
அவர் 1922 முதல் 1943 வரை இத்தாலியை ஆட்சி செய்தார். இரண்டாம் உலகப் போரின்போது, அவர் நாஜி ஜெர்மனி மற்றும் ஜப்பானுடன் கூட்டணி அமைத்தார்.
முசோலினி அடால்ஃப் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாக, அவர் இத்தாலியில் யூத மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் சட்டங்களை (யூத எதிர்ப்புச் சட்டங்கள்) அறிமுகப்படுத்தினார்.
ஜூன் 1940-இல், முசோலினி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது போரை அறிவித்தார். ஆனால் இந்த முடிவு இத்தாலியின் ராணுவம் பலவீனமாக இருப்பதைக் காட்டியது. அதன் பிறகு, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, பால்கன் போன்ற இடங்களில் இத்தாலி பல தோல்விகளைச் சந்தித்தது.

ஜூலை 1943-இல், நேச நாடுகளின் படைகள் சிசிலியில் தரையிறங்கின. இதற்குப் பிறகு, பாசிச அரசாங்கத்தில் இருந்த அவரது சக ஊழியர்களாலேயே முசோலினி அதிகாரத்தில் இருந்து நீக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செப்டம்பர் 1943-இல், இத்தாலி நேச நாடுகளுடன் சமாதானம் செய்துகொண்டது. அதன் பிறகு, ஜெர்மானிய ராணுவம் இத்தாலியை கைப்பற்றியது. ஜெர்மானிய கமாண்டோக்கள் முசோலினியை சிறையில் இருந்து மீட்டு, ஒரு புதிய அரசின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், அந்த நேரத்தில் அவரிடம் உண்மையான அதிகாரம் அதிகம் இருக்கவில்லை.
நேச நாடுகளின் படைகள் இத்தாலி வழியாக வடக்கு நோக்கித் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, முசோலினி சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவர் இத்தாலிய எதிர்ப்புப் போராளிகளிடம் பிடிபட்டார். பின்னர், 28 ஏப்ரல் 1945 அன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































