You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொழுப்பு கல்லீரல்: மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?
ஃபேட்டி லிவர் அல்லது கல்லீரல் பாதிப்புகள் மது அருந்தாதவர்களுக்கும் ஏற்படுமா?
ஆம், 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' மது அருந்தாதவர்களையும் பாதிக்கலாம்.
'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' என்பது கல்லீரலோடு மட்டுமல்ல, செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் அபாயத்துடனும் நெருங்கிய தொடர்புடையது.
வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய கல்லீரல் நோய் எம்.எஸ்.எல்.டி. என அழைக்கப்படுகிறது. சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, வட இந்தியாவில் உள்ள இருவரில் ஒருவர் வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல் நோய் அல்லது நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லீரலில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமான கொழுப்பு இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் என்று கருதப்படும் என்கிறார் சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரைப்பை குடல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் அனுபம் குமார் சிங்.
தொடர்ந்து பேசிய அவர், குறைவாக மது அருந்துபவர்கள் அல்லது மதுவே அருந்தாதவர்கள்கூட எம்.எஸ்.எல்.டி அல்லது நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலைக்குரிய விஷயம், ஏனெனில் இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு மிகவும் பொதுவான காரணமாக இது உள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களை இது பாதிக்கிறது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையேயும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது என்றார்.
நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் ஏன், எப்படி ஏற்படுகிறது?
"நகர்ப்புறங்களில் இந்த நோயின் ஆபத்து அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை. ஆரோக்கியமற்ற உணவுகளை (Junck foods) அதிக அளவில் உட்கொள்ளும் பழக்கமும் இதை மோசமாக்குகிறது" என்கிறார் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இரைப்பை குடல் துறை நிபுணர் டாக்டர் ஷாலிமார்.
வாந்தி, மலத்தில் ரத்தம், சுயநினைவின்மை, நீடித்த மஞ்சள் காமாலை போன்றவை நோய் முற்றிய நிலையின் அறிகுறிகளாகும்.
திடீரென எடை அல்லது சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற புதிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஃபேட்டி லிவர் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.
ஃபேட்டி லிவர் ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சில சமயங்களில் புற்றுநோய் அளவுக்குக் கூட வளரலாம். எனினும், இந்த ஆபத்தான கட்டம் படிப்படியாகவே ஏற்படும். சில ஆண்டுகள் கூட இதற்கு எடுக்கலாம்.
நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவரை தவிர்க்க, அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும், உடற்பயிற்சி செய்வது மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுவது முக்கியம்.
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன் கூடிய சமநிலையான உணவுப் பழக்கத்தை பராமரிப்பதும் மிக முக்கியம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மது அருந்துவது பாதுகாப்பானது அல்ல, எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.
மரபியல் ரீதியாக ஒருவருக்கு உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது கல்லீரல் பிரச்னைகள் இருந்தால், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் முக்கியம்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)