இலங்கை: ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாலியல் இணையதளத்தின் பெயர் வந்தது எப்படி? புதிய சர்ச்சை

இலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையின் கீழ், ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முறைப்பாடொன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

English Language First Term Module Grade 6 புத்தகத்தில் இவ்வாறு ஓரிடத்தில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொண்டமையின் ஊடாக இவ்வாறான சர்ச்சையொன்று எழுந்துள்ளமை குறித்து பிபிசி சிங்கள சேவை ஆராய்ந்துள்ளது.

'மாதிரி தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு முடிவுற்றுள்ளன'

இந்த விடயம் தொடர்பில் தான் நாட்டிற்கு வெளிகொணரும் வரை, இந்த விவகாரம் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை என கல்வி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் உலபன்னே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரியளவிலான நிதியை செலவிட்டு, கல்வி நிலையங்களில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மாதிரி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு முடிவுற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

''இந்தப் புத்தகம் தொடர்பில் இலங்கையிலுள்ள நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விடயத்திற்கு பாரியளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உணவு உள்ளிட்ட விடயங்களுக்குச் செலவிட்டுள்ளனர்.

புத்தகத்தை அச்சிடுவதற்கு பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது, சுமார் 5 லட்சம் மாணவர்கள் இருக்கின்றார்கள். அப்படியென்றால், 5 லட்சம் மாணவர்களுக்குப் புத்தகத்தை அச்சிடுவதற்கு எந்தளவு நிதி செலவிடப்பட்டு இருக்கும் என்பது குறித்து எமக்குத் தெரியாது'' என அவர் குறிப்பிடுகின்றார்.

'இதுவொரு சூழ்ச்சி'

நாடு மற்றும் எதிர்கால சமூகத்தை சீரழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என்று குற்றம் சுமத்தியுள்ள சுமங்கல தேரர், சூழ்ச்சியாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

''இது நாட்டிற்கு எதிரான சூழ்ச்சி என நாங்கள் கூறுகின்றோம். எதிர்கால சமூகத்தைச் சீரழிப்பதற்குச் செய்த சூழ்ச்சி. புத்தகத்தின் கண்காணிப்பாளர், ஆலோசகர், எழுத்தாளர்கள், மீளாய்வு செய்தவர்கள் அனைவரின் பெயரும் புத்தகத்தில் இருக்கின்றது. அப்படியென்றால், அந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்" என அவர் கூறுகின்றார்.

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை

புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கையுடன் தொடர்புடைய மாதிரி கல்வி குறித்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சங்கங்கள் கல்வி அமைச்சுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கேட்டிருந்த போதிலும், விஞ்ஞான பாடத்தின் மாதிரி மாத்திரமே தமக்கு வழங்கப்பட்டதாகவும் கல்வி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிடுகின்றார்.

''அனைத்து மாதிரிகளையும் ஆராய்ந்து பாருங்கள். ஓர் ஆண்டு ஒத்தி வையுங்கள். எதிர்வரும் ஆண்டில் இருந்து சிறந்ததான கல்வியை மறுசீரமைப்பை மேற்கொள்ளுங்கள்'' என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

'தேசிய கல்வி நிறுவனமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்'

தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்துவதுடன், இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

''இந்த விடயத்திற்கான பொறுப்பை தேசிய கல்வி நிறுவனமே ஏற்க வேண்டும். கல்வி வெளியீட்டு திணைக்களமும் உள்ளது. அதன் நடவடிக்கைகளையும் தேசிய கல்வி நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தேசிய கல்வி ஆணைக்குழுவாகும். அந்த நடவடிக்கைகளையும் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களால் தலையிட முடியாது என கல்வி அமைச்சருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், தேசிய கல்வி நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கல்வி மறுசீரமைப்புக்கு தகுதியற்றவர்கள் என சுட்டிக்காட்டியிருந்த சந்தர்ப்பத்திலும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மாதிரி புத்தகங்கள் அச்சிடுவதற்கு '7 கோடி ரூபா செலவு'

கோட்டாபய ராஜபக்ஸவினால் கொண்டு வரப்பட்ட கல்வி மறுசீரமைப்பை, தற்போதைய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முயன்று வருவதாகத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், அப்போதைய கல்வி அமைச்சர்கூட அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

''கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட, அப்போதைய கல்வி ராஜாங்க செயலாளர் கலாநிதி உபாலி சேதரவினால் கொண்டு வரப்பட்ட கல்வி மறுசீரமைப்பையே இவர்களும் முன்னோக்கிக் கொண்டு செல்கின்றனர். அப்போதைய கல்வி ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் அந்த மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தவில்லை.

இவர்கள் ஏ.டீ.பி கடன் உதவிக்காக இதைச் செய்து வருகின்றனர். ஐ.எம்.எஃப் கடனுக்காக அரசாங்கம் அனைத்தையும் செய்து வருகின்றது. ஏ.டி.பி கடனுக்காக செய்கின்றது. இது பிள்ளைகள் தொடர்பில் சிந்தித்து எடுக்கும் நடவடிக்கை அல்ல'' என்று அவர் குறிப்பிடுகின்றார்.

புதிய மாதிரியுடனான புத்தகத்தை அச்சிடுவதற்காக 7 கோடி ரூபா செலவிடப்பட்டு இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இதனூடாக என்ன தெரிகின்றது?

இந்த விவகாரத்தின் ஊடாக கல்வி மறுசீரமைப்பு கவனக் குறைவாக முன்னெடுக்கப்பட்டு உள்ளமையை உணர முடிவதாக பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஷாருதந்த இலங்கசிங்க தெரிவிக்கின்றார்.

''இதனூடாக எதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இந்த மறுசீரமைப்பு எந்தளவிற்கு கவனக் குறைவான முன்னெடுக்கப்பட்டு உள்ளது என்ற விடயம். இதற்கான முழுமையாகப் பொறுப்பை தேசிய கல்வி நிறுவனம் ஏற்க வேண்டும். நாட்டின் கல்வித் துறைக்குள், குறிப்பாக இந்தப் பாடத்திட்டத்தின் சீர்த்திருத்தம் மற்றும் மறுசீர்திருத்தம் தேசிய கல்வி நிறுவனத்தின் பொறுப்பாகும்.

கல்வி மறுசீரமைப்புக்காக கடந்த சில ஆண்டுகளில் பல கோடி ரூபாவை தேசிய கல்வி நிறுவனம் செலவிட்டுள்ளது. எனினும், எதைச் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது'' என்று அவர் கூறுகின்றார்.

இந்த விடயத்தை இலகுவான விடயமாகப் பார்க்க முடியாமையால், உரிய தரப்பிலுள்ள அனைவரும் பதவியில் இருந்து நீக்கி, அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு

புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையின் கீழ், ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையத்தளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பில் உயர்கல்வி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவௌ, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தும் வருகின்ற விதமாக, இந்த விடயத்தில் சூழ்ச்சியொன்று காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி ஆராயுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

''கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் எமக்கு நியாயமான சந்தேகம் ஒன்று எழுகின்றது.

இந்த பொருத்தமற்ற இணையத்தளம், இந்த வார்த்தை அல்லது அறிமுகம், கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சில தரப்பினர் சூழ்ச்சி செய்த ஒன்று என்பதில் எங்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் உள்ளது."

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு, உள்ளக விசாரணை ஒன்றை நடத்தி வருவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.

'மீண்டும் அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாது'

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவௌவை, பிபிசி சிங்கள சேவை தொடர்புக் கொண்டு வினவியது.

அச்சிடப்பட்ட மாதிரி புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், அந்த மாதிரிகளை மீள அச்சிடுவதற்குத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த மாதிரிகளை மீளத் தயார்ப்படுத்தி பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

''மீண்டும் அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாது. இந்த மாதிரியிலுள்ள தவறுகளைச் சரிசெய்து, அதே மாதிரியையே நாங்கள் பயன்படுத்த போகின்றோம்'' என அவர் கூறுகின்றார்.

உள்ளக விசாரணைக் குழுவில் இருப்பது யார்?

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற உள்ளக விசாரணைக் குழுவில் மூன்று மேலதிக செயலாளர்கள் தலைமை தாங்குவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலதிக செயலாளர் தேவீகா லியனகே தலைமை வகிக்கும் இந்த விசாரணைக் குழுவில் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திலக் வத்துஹேவா, உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அப்சரா கல்தெரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இணையதளத்தின் பெயர் உள்வாங்கப்படும்போது, அதை கண்காணிக்காமைக்கான பொறுப்பைத் தானே ஏற்க வேண்டுமென தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மஞ்சுளா விதானபத்திரன, பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

''அந்தப் பெயரை போடும் போது, தேசிய கல்வி நிறுவனமாக அந்தப் பெயரை பயன்படுத்தும் போது அதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும் என்ற பொறுப்பை நான் நினைக்கின்றேன், நானே ஏற்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கருத்துகள்

இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் ஊடாகப் பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த மாதிரி புத்தகங்களின் பல்வேறு இடங்களில் இணையதளங்களின் பெயர்கள், யூட்யூப் இணைப்புகள் மற்றும் கியூ.ஆர். கோட் உள்வாங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஹிரான் அமரசேகர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவை அரசின் சொந்தமான இணையதளங்கள் இல்லை என்பது பிரச்னைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

''இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரையும் பணிநீக்கம் செய்தால்கூடப் பரவாயில்லை என்ற கருத்தை நான் தனிப்பட்ட ரீதியில் கொண்டுள்ளேன்" என ஆசிரியரான திலினி ஷெல்வின் பதிலிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு