சமையல் அலுமினிய பாத்திரங்களை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்? மீறி உபயோகித்தால் என்ன பிரச்னை?

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

இன்ஸ்டாகிராமில், அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் "உடல்நலன் சீர்கெடும்" என எச்சரிக்கும் 'ரீல்ஸ்களை' ஆங்காங்கே காண முடிகிறது. ஆனால், அது முற்றிலும் உண்மையில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அலுமினிய பொருட்களை எவ்வளவு காலம் பயன்படுத்துகிறோம், அதன் தரம் என்ன என்பனவற்றைப் பொறுத்தே இது மாறுபடுவதாகக் கூறுகிறார், கௌஹாத்தியில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான முனைவர் பார்த்திபன்.

அலுமினிய பாத்திரங்களின் பயன்பாடு

சமையல் பொருட்களைப் பொறுத்தவரை, அலுமினியம், எவர்சில்வர், செம்பு எனப் பல்வேறு உலோகங்களில் தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளன.

அவற்றில் பெருவாரியானோர் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். "இது சிறந்த வெப்பக்கடத்துத் திறனைப் பெற்றிருப்பதாலும், விலை மலிவாக இருப்பதாலும்" எளிய மக்களின் விருப்பத்திற்கு உகந்த தேர்வாக இருக்கிறது என்று தெரிவித்தார் முனைவர் பார்த்திபன்.

அதுமட்டுமின்றி, செம்புப் பாத்திரங்களைவிட இது எடையும் குறைவு என்பதால் அன்றாடப் பயன்பாட்டிற்கும் எளிதான தேர்வாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"உதாரணமாக, செம்புப் பாத்திரத்தில் போடப்படும் சமையல் பொருட்கள் கொதிப்பதற்கு அரை மணிநேரம் எடுத்துக்கொள்கிறது என வைத்துக்கொள்வோம்.

ஆனால், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் அதே சமையலுக்கு ஆகும் நேரம் சுமார் பத்து நிமிடங்களைவிடக் குறைவுதான். இதுவே அதன் பயன்பாடு செம்புப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதற்குக் காரணம்."

அலுமினியம் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகமா?

பெருவாரி மக்களிடையே இந்த உலோகத்தில் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள் அதிகம் இருக்கின்றன, தொடர்ந்தும் பலர் அதை விரும்பித் தேர்வு செய்கின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக அதுகுறித்து எழும் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா எனக் கேட்டபோது, "அலுமினிய பாத்திரங்கள் பல ஆண்டுக் காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் ஒன்றுதான். எனவே, அதனால் அஞ்சத்தக்க ஆபத்துகள் நேரும் எனில் இத்தனை ஆண்டுகளாகத் தெரிய வராமல் இருந்திருக்காது," என்று கூறியதோடு, "அதற்காக அவற்றை கவனமின்றி அதீதமாகப் பயன்படுத்துவதும் ஆபத்து" என எச்சரித்தார்.

அவரது கூற்றுப்படி, அலுமினியம் என்பது அமிலம், காரம் என இரண்டு வகை வேதிமங்களுடனும் வினைபுரியக்கூடியது. எனவே, "தக்காளி அல்லது சிட்ரஸ் பழங்களைப் போன்ற அமிலம் இருக்கும் உணவுப் பொருட்களைச் சமைக்கும்போது அவற்றோடு அது வினைபுரியலாம். அப்போது சிறிதளவு அலுமினியம் உணவில் கசியக்கூடும்.

பொதுவாக அந்த அளவு பாதுகாப்பான அளவுகளுக்குக் கீழேதான் இருக்கும். இருப்பினும் இது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து நிகழ்ந்தால் உடலுக்குக் கேடான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது," என்று விளக்கினார்.

குக்கர் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும், அலுமினியத்தில் தயாரிக்கப்படும் பாத்திரங்களை எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கேட்டபோது, "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது" என்று தெரிவித்தார் பார்த்திபன்.

"அவற்றின் வெப்பக்கடத்துத் திறனும் அதிகம் என்பதால், அவற்றால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. தொடர்ச்சியாக வெப்பத்தில் சூடாக்கும்போது, சிறுகச் சிறுக பாத்திரத்தின் அலுமினியமும் கரையத் தொடங்கிவிடும்."

ஆகவே, அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும், அவற்றை எவ்வாறு, எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார் முனைவர் பார்த்திபன்.

அலுமினியம் தவிர வேறு எந்த உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம்?

அலுமினியத்திற்கு அமிலம், காரம் போன்ற வேதிமங்களுடன் வினைபுரியும் பண்பு உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அத்தகைய வினைபுரிதலால் சமையலின்போது அவை சிறிதளவு உணவில் கலந்தாலும் குறுகிய காலகட்டத்தில் அதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார் பார்த்திபன்.

இருப்பினும், "இத்தகைய வினைபுரியும் தன்மை தாமிரம் அல்லது எவர்சில்வர் பாத்திரங்களிடம் மிக மிகக் குறைவு" எனத் தெரிவித்த அவர், அவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் கூறினார்.

அதுமட்டுமின்றி "அலுமினிய பொருளை தொடர்ந்து பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது சிறிது சிறிதாகக் கரையத் தொடங்கும். அது செம்பிலும் நிகழும் என்றாலும் கரைவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஒப்பீட்டளவில் அலுமினியத்தைவிட அதிகம்.

மேலும், இருப்பதிலேயே எவர்சில்வர் பாத்திரங்கள்தான் மிக நீண்ட காலத்திற்கு, உணவுப் பொருட்களுடன் வினை புரியாமல், வெப்பத்தில் கரையாமல் தாக்குப்பிடிக்க ஏதுவானவை," என்று விளக்கினார் முனைவர் பார்த்திபன்.

அவரது கூற்றுப்படி, எவர்சில்வர் பாத்திரங்களைப் பொறுத்தவரை, சமையலுக்குப் பயன்படுத்தும் பிற உலோகப் பொருட்களைப் போலவே வெப்பத்தைக் கடத்தினாலும், அந்த வெப்பத்தை அது தனக்குள் கிரகித்துக்கொள்வது இல்லை.

ஆகையால், "எவர்சில்வர் பாத்திரங்கள் நீண்டகால பயன்பாட்டுக்குச் சிறந்தவை" என்றார்.

நச்சுத்தன்மை வாய்ந்த அலுமினிய உலோகம்

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உணவை பேக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய கவர்களில் கசிவு ஏற்படுகிறதா என்று ஆராயப்பட்டது. சுமார் 11 வகையான உணவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கசிவு நிகழ்வது கண்டறியப்பட்டது.

அதன்படி, சில உணவுகள் அலுமினிய கவர்களில் சுற்றப்பட்டு சூடேற்றப்படும் போது, உணவுப் பொருட்கள் அந்த உலோகத்தையும் சிறிதளவு உறிஞ்சிக் கொண்டன. இருப்பினும், அதில் கண்டறியப்பட்ட அலுமினிய கலப்பு ஆபத்தற்ற அளவுக்கே இருந்ததாகவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளையில், நச்சுத்தன்மை வாய்ந்த அலுமினியத்தை உடல் அதிகளவில் எடுத்துக்கொள்வதால் நரம்பியல் பாதிப்புகள் முதல் சிறுநீரக பாதிப்புகள், எலும்புகள் பலவீனமடைவது வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது அந்த உலோகம் எந்த அளவுக்கு கரைந்து உணவில் கலக்கும், அது எந்த அளவுக்கு மேல் உடலுக்குள் சென்றால் ஆபத்து என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் சில வரையறைகளை வகுத்துள்ளதாகக் கூறுகிறார் முனைவர் பார்த்திபன்.

சராசரியாக, "பால் காய வைக்கும்போது 0.8-1 மி.கி வரை என்ற விகிதத்தில் உலோகம் கரைந்து பாலுடன் கலக்கும். இது மிக மிகக் குறைவான அளவே. அதேபோல, தக்காளி போன்ற அமிலம், காரம் அடங்கிய உணவுகளைச் சமைக்கும்போது 30 முதல் 50 மில்லிகிராம் வரையிலான அலுமினியம் உணவில் கரைந்து, உடலில் கலக்கலாம்.

முன்பே கூறியதைப் போல் அது அதிக வெப்பத்தைக் கடத்தும் திறன் கொண்ட உலோகம் என்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக, நீண்டகாலத்திற்கு சூடாகிறதோ, அந்த அளவுக்கு அதிகமாகக் கரையத் தொடங்கும்," என்று விவரித்தார்.

இதுமட்டுமின்றி உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி, "ஒரு நபரின் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு மில்லிகிராம் என்ற அளவு வரை ஒரு வாரத்திற்கு அலுமினியம் உடலில் கலப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது" என்றும் அவர் விளக்கினார்.

அதாவது, "ஒருவர் 60 கிலோ உடல் எடையைக் கொண்டவரெனில், அவரது உடலில் வாரத்திற்கு 60மில்லிகிராம் வரையிலான அலுமினியத்தை தாங்கக்கூடியது. அதுவே, 100 அல்லது 200 என்ற அளவை எட்டினால், சிறுநீரக பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம்" என்று கூறினார்.

"அலுமினியம் உடலுக்குத் தேவையற்ற ஓர் உலோகம். அது நச்சுத்தன்மை வாய்ந்தது" என்றாலும், அதை நினைத்துப் பெரியளவில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து மருத்துவர் ரேஷ்மா அலீம். அவரது கூற்றுப்படி, அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது குறித்து சமீபத்தில் எழுந்துள்ள விவாதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

"அடிப்படையில் எந்தவொரு உலோகமாக இருந்தாலும் சமையலின்போது சிறிதளவு கசியக்கூடும். இது இயல்புதான். நான்-ஸ்டிக் பொருட்களை எப்படி நீண்டகாலத்திற்குப் பயன்படுத்தக் கூடாதோ, அதே போலத்தான் இதுவும்.

அதோடு, அலுமினிய பாத்திரங்களை அவற்றின் தரம் மற்றும் கால அளவுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் எவ்வித அஞ்சத்தக்க பாதிப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு