You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாகிஸ்தான் சபாநாயகருடன் கைகுலுக்கிய ஜெய்சங்கர் - ஊடகங்கள் கூறுவது என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மறைவுக்கு அஞ்சலி செலுத்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டாக்கா சென்றது, தெற்காசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இறுதிச் சடங்கின்போது, பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் மற்றும் ஜெய்சங்கர் ஒருவரையொருவர் சந்தித்து கைகுலுக்கிய புகைப்படங்கள் வெளியாகின. பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு, இந்தியாவின் முதல் உயர்மட்டத் தொடர்பு முயற்சி என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளியின் பதிவில், ஜெய்சங்கர் தன்னை சாதிக்கிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அவரை தமக்குத் தெரியும் என்றும் கூறினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பு பல நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவுகளில் எதையும் குறிப்பிடவில்லை. காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து முடங்கியுள்ளன, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச மற்றும் பிராந்திய நிகழ்வுகளில் இரு தரப்பினரும் ஒன்றாக தோன்றினாலும், இந்த சுருக்கமான மற்றும் முறைசாரா சந்திப்பு, முறையான ஈடுபாடு இன்னும் இல்லாததையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன" என தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி குறிப்பிட்டுள்ளது.
"மே மாதம் இரு அணுஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே நடந்த 87 மணி நேர மோதலுக்குப் பிறகு நடந்த முதல் உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும்" என தி நியூஸ் செய்தி எழுதியுள்ளது.
பாகிஸ்தானின் மற்றொரு முன்னணி நாளிதழான 'டான்'-ம் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதவிர வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான புரோதோம் அலோ மற்றும் நியூ ஏஜ் ஆகியவையும் இருவரின் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.
"இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்வந்து சர்தார் அயாஸ் சாதிக்குடன் கைகுலுக்கினார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்" என்று 'புரோதோம் அலோ' எழுதியுள்ளது.
இவர்களின் சந்திப்பை வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு