You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தியா–தாலிபன் உறவு; புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?
2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தாலிபன் நிர்வாக வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தக்கி இந்தியா வந்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார்.
வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பிராந்திய நிலைத்தன்மை, அமைதி, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாக அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவை நெருங்கிய நண்பர் என குறிப்பிட்ட முத்தக்கி இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
அதே போல, காபூலில் உள்ள இந்தியாவின் டெக்னிகல் மிஷன் தூதரகமாக மாற்றப்படும் என ஜெய்சங்கர் அறிவித்தார். 2021இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, காபூலில் இருந்த தனது தூதரகத்தை இந்தியா மூடியது.
தற்போது வரை இந்தியா தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே தாலிபன்களை அங்கீகரித்த ஒரே நாடாக உள்ளது.
1990களில் தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியா அவர்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. ஆனால் 2021-இல் தாலிபன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து, ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறிய பிறகு இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அளவான தொடர்பை மேற்கொண்டது.
இந்தியா மற்றும் தாலிபன் நலன்களை உள்ளடக்கிய பல விஷயங்கள் இன்று உள்ளன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் (School of International Studies) ஓய்வு பெற்ற பேராசிரியர் அனுராதா சினோய், முத்தக்கியின் வருகையை இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவின் எதிர்காலத்திற்கான நேர்மறையான முன்னேற்றமாக பார்க்கிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "அமீர் கான் முத்தக்கியை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நல்ல நகர்வை மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையென்றால் இந்தப் பிராந்தியத்தில் நிலையற்றத்தன்மை அதிகரிக்கும், ஏனென்றால் பாக்ரம் விமானப்படை தளத்தை திருப்பி எடுத்துக் கொள்ளப்போவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் இந்தியாவை ஆதரித்தது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் நலன்களும் உள்ளன" என்றார்.
அதே நேரம் தாலிபன் மற்றும் இந்தியா இடையே அதிகரித்து வரும் நெருக்கத்திற்கு ஆப்கானிஸ்தானில் அதிருப்தியும் எழுந்துள்ளது. ஆப்கன் செய்தியாளர் ஹபிப் கான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு ஆப்கனாக இந்தியா செய்துள்ள உதவிகளை நான் வியந்து பார்க்கிறேன். இந்தியா சல்மா அணை, நாடாளுமன்றம் மற்றும் சாலைகளைக் கட்டியுள்ளது. ஆனால் தாலிபன்களுடனான தொடர்பை இந்தியா சகஜமாக்கி வருவதை பார்க்கும் போது துரோகம் இழைக்கப்பட்டதை போல உணர்கிறேன். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள சட்டவிரோத அரசு. அவர்களை இயல்பாக்குவதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு