You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?
- எழுதியவர், மேக்ஸ் மட்சா
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார்.
டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது.
அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும் பணப்பதுக்கல் போன்ற காரணங்களால் கிரிப்டோ நாணயங்கள் மீது முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிர நடவடிக்கை எடுத்தார்.
இந்த புதிய கிரிப்டோ ரிசர்வ் எப்படி செயல்படும் என்பதில் தெளிவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் முதலாவது கிரிப்டோ உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார், அன்றைய தினம் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு அதிகரிப்பு
டிரம்ப், ஞாயிறன்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவை கொண்ட கிரிப்டோ ரிசர்வை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிபரின் பணிக்குழுவுக்கு உத்தரவிட்டிருப்பதாக" தெரிவித்தார்.
அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார், "மதிப்பு மிக்க பிற கிரிப்டோ நாணயங்கள் என்ற வகையில் பிட்காயின் மற்றும் ஈதேரியம் ஆகியவை இந்த ரிசர்வின் மையமாக இருக்கும்."
அவர் குறிப்பிட்ட முதல் மூன்று நாணயங்களின் விலை ஞாயிறன்று 62% அதிகரித்தது. பிட்காயின் மற்றும் ஈதேரியம் தலா பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தன.
டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்து வந்த கிரிப்டோ கரன்சிக்களின் விலை, இந்தப் பதிவுகளால் உயர்வை நோக்கித் திரும்பியது.
ஜனவரி மாதம் தான் பதவியேற்ற பின்னர், புதிய கிரிப்டோ சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைப்பதற்காக அதிபரின் பணிக் குழுவை உருவாக்க டிரம்ப் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
கிரிப்டோ தொடர்பான டிரம்பின் மனமாற்றம்
"சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் ஃபெடரல் அரசால் சட்டரீதியாக பறிமுதல் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி தேசிய டிஜிட்டல் சொத்துக்களுக்கான ரிசர்வ் ஒன்றை உருவாக்கி, பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை" ஆய்வு செய்ய இத்தகைய பணிக்குழு தேவை என டிரம்பின் உத்தரவு தெரிவித்தது.
இந்த புதிய தேசிய ரிசர்வை உருவாக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டுமா என்பதில் தெளிவு கிடைக்கவில்லை.
இதற்கு முன்னர் வரை, டிரம்ப் கிரிப்டோவை விமர்சிப்பவராகவே இருந்திருக்கிறார். 2021-ல் அவர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிட்காயின் என்பது ஒரு 'மோசடி' என கூறியிருந்தார்.
ஆனால் அண்மை வாரங்களில் அவரும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் அவர்களது சொந்த கிரிப்டோ நாணயங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் வெள்ளை மாளிகை கொள்கைகளின் மூலம் அவர்கள் லாபம் ஈட்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)