You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு - முழு பின்னணி என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் புதன்கிழமையன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் இந்த வழக்குகளை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வழக்குகளின் பின்னணி
தற்போது தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துவருகிறார் தங்கம் தென்னரசு. 2006 - 2011 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.74.58 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் அதே ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்கை முதலில் மதுரையில் இருந்த ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வசாரித்துவந்தது. பிறகு, 2014ல் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, 2019ல் அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்குப் பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி மீண்டும் வழக்கின் விசாரணையைத் துவங்கி, 2022 அக்டோபரில் துணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த துணை அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 71 லட்ச ரூபாய் என்றும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல ஒரு கோடியே 81 லட்ச ரூபாய் அல்ல எனக் கூறப்பட்டது.
அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது வருவாய், 1.62 கோடி என குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவரது உண்மையான வருவாய் 2.39 கோடி ரூபாய் என்றும் துணை அறிக்கை கூறியது.
ஆகவே, இவர்களிடம் வருமானத்தைவிட 1.54 லட்ச ரூபாய்தான் கூடுதலாக இருக்கிறது என்றும் குற்றப்பத்திரிகையில் இருப்பதைப் போல ரூ. 74.85 லட்சம் அல்ல என்றும் துணை அறிக்கை கூறியது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு நீதிபதி எம். கிறிஸ்டோஃபர், அமைச்சரையும் அவரது மனைவியையும் 2022 டிசம்பர் 12ஆம் தேதி வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தார்.
சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு
அதேபோல, தற்போது வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார்.
அந்த காலகட்டத்தில் ரூ. 44.59 லட்சம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன் மீதும் அவருடைய மனைவி ஆர். ஆதிலட்சுமி, அவருடைய நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
இந்த வழக்கில் விசாரணை எட்டு மாதங்களில் முடிந்து, மதுரையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2012 செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு 2014ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரலில் அங்கிருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
2019ல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 2021 செப்டம்பரில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையின் முடிவில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியானதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
அமைச்சரிடமும் அவரது மனைவியிடமும் வருமானத்திற்கு அதிகமாக 1.49 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் 44.59 லட்ச ரூபாய் இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சரியானதல்ல என்றும் அந்த அறிக்கை கூறியது.
இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி வி. திலகம், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு 2023 ஜூலை 28ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுவித்தார்.
தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்த நீதிபதி
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.
இந்த வழக்கில் விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கியது. அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், ஒத்திவைக்கப்பட்டு அந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்தது.
2023 ஆகஸ்டிலிருந்து செப்டம்பருக்குள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, கே. பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பி. வளர்மதி ஆகிய ஆறு பேர் மீது தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் இந்த வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே முடிவுசெய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்த ஆறு வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என சென்னை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவெடுத்தார். அதன்படி அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 11ஆம் தேதி அமைச்சர்கள் இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)