You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லை: ரயிலில் திருடு போன செல்போன் 'கூகுள் மேப்' உதவியால் மூன்றே மணி நேரத்தில் மீட்பு - எப்படி தெரியுமா?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
நெல்லை அருகே ரயில் பயணத்தில் தனது தந்தையிடம் திருடப்பட்ட செல்போனை 3 மணி நேரத்தில் கூகுள் மேப் உதவியுடன் அவரது மகன் மீட்டுள்ளார். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திருடனை பிடித்து செல்போனை அவர்கள் மீட்டுள்ளனர்.
இது எப்படி சாத்தியமானது? செல்போன் தொலைந்தால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதில் மீட்டுவிட முடியுமா?
என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் பழனிசாமி இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 4) நாகர்கோவிலில் இருந்து அதிகாலை திருச்சி செல்வதற்காக காஞ்சிபுரம் ரயிலில் ஏறியிருக்கிறார். ரயில் நெல்லை ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற போது தூக்கத்தில் இருந்து எழுந்த தனது கைப்பையும், மொபைல் போனும் திருடு போயிருப்பது அவருக்கு தெரியவந்தது. இதை தனது மகன் ராஜ் பகத்திடம் கூறியிருக்கிறார்.
அவரது மகன் கூகுள் மேப் டிராக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடனை பிடித்து அவர் திருடிய செல்போன் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தது எப்படி? திருடனை பிடித்த சுவாரசியமான நிகழ்வு குறித்து ராஜ் பகத் தனது (X Social media) எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தப் பதிவு அதிகம் பேரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
இந்தச் சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய ராஜ் பகத், தனது தந்தையை சொந்த வேலையாக கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அதிகாலை 1:43 மணிக்கு திருச்சி செல்வதற்காக காஞ்சிபுரம் விரைவு ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றிவிட்டு வீடு திரும்பியதாகக் கூறினார்.
“அதிகாலை நேரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் பெரிதாக இல்லை. எனது தந்தையிடமிருந்து அதிகாலை 03:51 மணிக்கு வேறு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அப்போது தனது செல்போனும் கைப்பையுடம் திருடு போய் விட்டதாகவும், ரயிலில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தன்னுடன் ஏறிய நபரும் ரயிலில் இல்லை எனவும் குறிப்பிட்டார்,” என்றார்.
மொபைல் போனில் வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டு இருப்பதால் பணம் திருடு போக வாய்ப்பு உள்ளது என்று தந்தை தனது அச்சத்தை வெளிப்படுத்தியதாக, அவர் கூறினார்.
கூகுள் மேப் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள்
மேலும் பேசிய அவர், "எங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும் கூகுள் மேப் செயலியில் தங்களது இடத்தை பகிர்ந்து இருப்போம். ( Google map permanent location sharing) இதன் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும். அப்பா செல்போன் தொலைந்தது என்றுக் கூறியதுமே கூகுள் மேப் செயலிக்குச் சென்று பார்த்தேன்,” என்றார்.
“அப்போது, எனது தந்தையின் செல்போன் திருநெல்வேலி மேலப்பாளையம் ரயில் பாதையில் இருப்பதாகக் காட்டியது. போன் கீழே விழுந்து இருக்க வாய்ப்பு உள்ளதா என யோசித்தேன் ஆனால், சிறிது நேரத்தில் செல்போன் சிக்னல் ரயில் பாதையிலேயே மீண்டும் நாகர் கோவிலை நோக்கி நகரத் தொடங்கியது,” என்றார்.
“செல்போனை திருடிய நபர் வேறு ஒரு ரயிலில் ஏறி மீண்டும் நாகர்கோவிலுக்கு வருவதை உணர்ந்து நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவலை கூறினோம்.
கன்னியாகுமரி செல்லும் ரயில் வந்து கொண்டு இருப்பதாக ரயில்வே போலீசார் எங்களிடம் கூறினர். நானும் எனது நண்பர் ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலுக்காக காத்திருந்தோம். கன்னியாகுமரி விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்த போது அதிக அளவிலான பயணிகள் ரயிலிருந்து இறங்கிச் சென்றனர். நான் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில் நின்று அப்பா கூறிய அடையாளம், கைப்பையைத் தேடினேன். அதேநேரம் கூகுள் மேப் காட்டும் இடத்தையும் பார்த்தேன்," என்றார்.
ரயிலில் இருந்து இறங்கி அரசு பேருந்தில் சென்ற திருடன் பிடிபட்டது எப்படி?
ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியில் சென்றாலும், தன்னால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் ராஜ்பகவத்.
“மீண்டும் கூகுள் மேப் மூலம் அப்பாவின் செல்போன் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் கிடத்தது. அதில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வழியை காண்பித்தது. ரயில் வந்த நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அதில் திருடன் ஏறி பயணம் செய்து கொண்டு இருப்பதை உறுதி செய்து பேருந்தை பின் தொடர்ந்து சென்றோம்,” என்றார்.
“நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தை அதிகாலை 5:00 மணியளவில் அடைந்தது. அப்போது 200 பேர் பேருந்து நிலையத்தில் இருந்ததால் கண்டுபிடிப்பது மீண்டும் கடினமான வேலையாக மாறியது. நானும் எனது நண்பரும் ஒவ்வொரு பக்கமாகத் தேடினோம்,” என்றார் ராஜ் பகவத்.
மேலும் பேசிய அவர், "எனது அப்பா செல்போன் இருக்குமிடம் நான் இருக்கும் இடத்தில் இருந்து 2மீ தொலைவில் இருப்பதாக கூகுள் மேப் காண்பித்தது. அங்கே ஒரு கடையின் வாசலில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் நின்று கொண்டு இருந்தனர். அதன் அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் இருந்தார். அவரின் அருகில் சென்று பார்த்த போது அப்பாவின் பை அவரது கையில் இருந்தது.
திருடனை நானும் எமது நண்பரும் பிடித்துக் கொள்ள திருடிய நபரே ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார். பின்னர் மக்கள் கூடியவுடன் எனது அப்பாவின் செல்போனை அவரது பையில் இருந்து மீட்டு எடுத்தோம். மற்ற பொருட்கள் அவரிடம் இல்லை,"என்றார் அவர்.
போலீஸ் விசாரணையில் கிடைத்த பொருட்கள்
தொடர்ந்து பேசிய அவர் "போலீசாரி டம் திருடன் பிடிபட்டதை கூறியிருந்ததால் அவர்களும் பேருந்துநிலையம் வந்து அவரை விசாரித்து, அவர் மறைத்து வைத்திருந்த மொபைல் போன், 1,000 ரூபாய் ரொக்கம், வண்டிச் சாவி, புளுடூத் ஹெட்போன் ஆகிய பொருட்களை கொடுத்தார். திருடனை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்,” என்றார்.
ராஜ்பகத், தான் ஒரு தனியார் நிறுவனத்தில் புவியியல் பகுப்பாய்வு நிபுணராக இருப்பதால், கூகுள் மேப் செயலியில் காண்பிக்கும் வரைபடத்தை எளிதில் புரிந்து கொண்டுச் செல்போன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது என்றார். “சாதாரண மக்களுக்கு இதை பயன்படுத்துவது ஆரம்பத்தில் சற்று கடினமானதாக இருக்கக் கூடும். ஆனால், பழகிவிட்டால் இது மாதிரியான நேரங்களில் உங்களுக்கு உதவும்," என்றார்.
செல்போன் தொலைந்தால் மீட்க வழி உண்டா?
செல்போன்கள் காணானமல் போனால் கண்டுபிடிக்க வழிகள் உள்ளதா என சைபர் சமூக ஆர்வலர் வினோத் ஆறுமுகத்திடம் கேள்வியை முன்வைத்தோம்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர் "செல்போன் திருடு போனால் அதனை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியுமா என்றால் முடியாது என்பதுதான் எனது பதில். ஆனால், சில வழிகளை பின்பற்றினால் அது இருக்கும் இடத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்,” என்றார்.
“கூகுள் மேப் ( Google Map) என்ற செயலியில் உங்களது நகர்வை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு பகிந்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களது செல்போன் தொலைந்து போனால் அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம்,” என்றார்.
மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் ( Google Play Store) கூகுள் பைண்ட் மை டிவைஸ் ( Google Find My Device) என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது மின் அஞ்சல் தகவல்களை கொடுத்து வைத்தும் உங்களது செல்போன் எங்கே உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம், என்றார்.
அதேபோல், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை சார்பில் செல்போன் திருட்டை கண்டுபிடிக்க இணைய வசதியை உருவாக்கி இருக்கிறது. https://www.ceir.gov.in என்கிற இணையதளத்திற்கு சென்று உங்களது திருடு போன செல்போன் குறித்த தகவல் நேரம், தேதி, செலொன் மாடல், திருடு போன இடம், ஐ.எம்.இ.ஐ எண், காவல்துறை புகார் எண்ணை அளித்தால் புகாராக பெற்று செல்போனை ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு தேடி கண்டுபிடித்து கொடுப்பார்கள், என்றார் அவர்.
செல்போனை திருடும் நபர் உங்களது செல்போனை எடுத்தவுடம் ஆஃப் செய்துவிட்டால் 100% கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை. மீண்டும் அந்த செல்போனில் வேறு சிம்கார்டு போட்டு பயன்படுத்தினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும், என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)