You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நித்யானந்தாவின் 'கைலாசா' உடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அதிகாரிக்கு நேர்ந்த சோகம்
தமிழ்நாட்டு மக்களுக்கு நித்யானந்தா பற்றிய அறிமுகம் தேவையில்லை.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தா தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட தேடியும் கிடைக்காத ஒரு நாடான 'கைலாசா'வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக பாராகுவே நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பராகுவே விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சின் தலைமைப் பணியாளர் அர்னால்டோ சாமோரோ இந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த அறிக்கையில், கைலாசாவுடன் வெளியுறவை மேற்கொள்ள பாராகுவே அரசாங்கம் மிகவும் விருப்பத்தோடு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளில் கைலாசாவை ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக அனுமதிப்பதை பாராகுவேஆதரிக்கிறது," என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 16, 2023 தேதியிட்ட அந்த அறிக்கையில், “இரண்டு கோடி இந்துக்களின் மத மற்றும் ஆன்மீகத் தேவைகளுக்கு சேவை செய்ய நிறுவப்பட்ட அறிவொளி பெற்ற இந்து நாகரிகத்தின் தேசம்தான் கைலாசா," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராகுவேவின் உள்ளூர் வானொலியான ஏபிசி கார்டினல் இந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரி சமோரோவை நேர்காணல் செய்தபோது, கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்றே தனக்கு தெரியாது என அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், "கைலாசாவைச் சேர்ந்தவர்கள் பராகுவேக்கு உதவ தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் விவசாயத்துறைக்கு பல உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கள் உதவியை வழங்க வந்தனர். நாங்கள் அவர்களுக்குச் செவிசாய்த்தோம் அவ்வளவுதான் நடந்தது," என்று அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியைக் கேட்டதும், வேளாண்மை மற்றும் கால்நடை அமைச்சகம் கூறுகையில், "சம்பந்தப்பட்ட அறிக்கையை அதிகாரப்பூர்வ ஆவணமாகக் கருத முடியாது. ஏனெனில் அதற்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை,” என தெரிவிக்கப்பட்டது.
சாமோரோ 'எந்த அனுமதியும் இல்லாமல்' செயல்பட்டதாகவும், அவ்வாறு செய்வதற்கான 'அதிகாரம்' அவரிடம் இல்லை என்றும் அமைச்சகம் கூறியது.
ஐ.நா.விற்குள் கைலாசாவின் பிரதிநிதிகள் ஊடுருவியது எப்படி?
கைலாசாவின் பிரதிநிதிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஐ.நா. அமைப்பின் இரண்டு விவாத அமர்வுகளில் பங்கேற்றனர்.
ஐ.நா.வின் இரண்டு அமைப்புகளில் ஒரு கற்பனை நாடான கைலாசா பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தங்களது கூட்டங்களில் கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியதை நீக்க வேண்டிய சூழலுக்கு ஐ.நா தள்ளப்பட்டது.
ஐ.நா.வில் கைலாசா பங்கேற்றது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பிப்ரவரி 22 அன்று ஏற்பாடு செய்திருந்த ஐ.நா நிகழ்வுதான் கைலாசாவின் பிரதிநிதிகள் ஊடுருவிய முதல் சம்பவம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவால் (CESCR) ஏற்பாடு செய்யப்பட்ட நிலையான வளர்ச்சி பற்றிய விவாதத்தில் கைலாசாவின் தூதர்களாகக் கூறப்படும் நபர்கள் பங்கேற்றனர்.
இரண்டாவது அமர்வு பற்றிய ஐ.நா இணையதளத்தில் உள்ள காணொளியில், பங்கேற்பாளர்கள் கேள்விகளைக் கேட்க அழைக்கும் போது, விஜயப்ரியா நித்யானந்தா என்ற பெண் 'கைலாசத்தின் நிரந்தர அமெரிக்கத் தூதர்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பூர்வீக உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி பற்றி கேட்க விரும்புவதாக அந்தக் கூட்டத்தில் அவர் கூறினார்.
அந்தப் பெண் கைலாசவை 'இந்து மதத்தின் உச்சபட்ச தலைவரான' நித்யானந்தா நிறுவிய 'இந்துக்களுக்கான முதல் இறையாண்மை அரசு' என்று விவரித்தார். அதன் குடிமக்கள் அனைவருக்கும் உணவு, வீடு மற்றும் சுகாதாரம் போன்ற தேவைகளை இலவசமாக வழங்கியதால், கைலாசா நாடு 'நிலையான வளர்ச்சியில் வெற்றியடைந்துள்ளது' என்றும் அவர் கூறினார்.
கைலாசாவின் தூதுவர் என்று அழைக்கப்படும் அந்தப் பெண் நித்யானந்தா மற்றும் கைலாச மக்களுக்கு எதிரான 'துன்புறுத்தலை நிறுத்த' நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் ஊடக அதிகாரியான விவியன் குவோக் கூறுகையில், இந்த வகையான கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் என்றும் ஆர்வமுள்ள எந்த நபரும் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஐ.நா 193 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இருந்தாலும், சில நேரங்களில் சொந்தமாக தங்களுக்கென நாடு இல்லாத சிலரையும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் ஐ.நா அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு பாலத்தீனத்தின் சில பகுதியைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது போல.
எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் நெறிமுறைகளின் கண்டிப்புத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வாக கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்வு பார்க்கப்படுகிறது.
கைலாசத்தை வழிநடத்தும் இந்த நித்யானந்தா யார்?
பரமஹம்ச நித்யானந்தா அல்லது வெறுமனே நித்யானந்தா என்றும் அழைக்கப்படும் நித்யானந்த பரமசிவத்திற்கு 45 வயதாகிறது.
அவர் தனது ஆசிரமத்தை 2003-இல் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு அருகிலுள்ள பிடதி என்ற நகரத்தில் நிறுவினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, அது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் லைஃப் ப்லிஸ் (Life Bliss) அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு கிளையைத் திறந்தது.
2010-ஆம் ஆண்டு இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்ததாக நித்யானந்தா மீது அவரது சீடர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 2018-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளைக் கடத்தி அடைத்து வைத்ததாக மற்றொரு புகார் போலீஸில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் 2019-இல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். அவர் எப்படி அல்லது எங்கு தப்பினார் என்பது அப்போது தெளிவாகத் தெரியவில்லை.
அதே ஆண்டில் அவர் ஈக்வடார் கடற்கரையில் ஒரு தீவை வாங்கியதாகவும், இந்துக் கடவுளான சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் இமயமலையில் உள்ள ஒரு மலையின் பெயரான கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை நிறுவியதாகவும் நித்யானந்தாவே கூறினார்.
ஆனால், அப்போது நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்தது. மேலும், நித்யானந்தாவிற்கு தாங்கள் அடைக்கலம் தரவில்லை என்றும் தங்களது அரசு அவருக்கு உதவவில்லை என்றும் ஈக்வடார் அரசு தெரிவித்தது.
தங்களுக்கென்று ஒரு கொடி, அரசியலமைப்பு, மத்திய வங்கி, பாஸ்போர்ட் மற்றும் தேசிய சின்னம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கைலாசா கூறுகிறது.
நித்யானந்தா 2019 முதல் பொது வெளியில் தோன்றவில்லை, இருப்பினும் அவரது பிரசங்கங்களின் வீடியோக்கள் அவ்வப்போது அவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
இரண்டு கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் நித்யானந்தாவின் இங்கிலாந்து பிரதிநிதி 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடந்த ஒரு கவர்ச்சியான தீபாவளி விருந்தில்' கலந்துகொண்டதாக கார்டியன் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)