டொனால்ட் டிரம்பை அரபு மற்றும் முஸ்லிம் மக்கள் உண்மையில் விரும்புகிறார்களா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
டிரம்புக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதேநேரம், அரபுகள் மற்றும் முஸ்லிம்கள் டிரம்பை உண்மையில் விரும்புகிறார்களா? டிரம்பின் வெற்றியால் காஸா போர் முடிவுக்கு வருமா? போன்ற கேள்விகள் அவரது வெற்றிக்குப் பின் எழுப்பப்படுகின்றன.
சொல்லப்போனால், வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்பு, "கமலா ஹாரிஸ் மற்றும் போரை விரும்பும் அவரது அமைச்சரவை, மத்திய கிழக்கைத் தாக்கி லட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொல்வார்கள் என்பது முஸ்லிம் சமூகத்திற்குத் தெரியும், இது மூன்றாம் உலகப் போரைத் தொடங்கும். அமைதியை மீட்டெடுக்க எனக்கு வாக்களியுங்கள்," என்று டிரம்ப் பேசியிருந்தார்.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளரான முனைவர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் இதுதொடர்பாக கூறும்போது, "டொனால்ட் டிரம்ப் மீதான விருப்பம் முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்கள் மத்தியில் திடீரென எழவில்லை. கமலா ஹாரிஸ், டிர்ம்ப் என இரு தேர்வுகள் அவர்கள் முன் இருந்தன. கமலா ஹாரிஸை எதிர்ப்பதும், டிரம்ப்பை வெற்றி பெறச் செய்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்,” என்றார்.
டிரம்பால் இஸ்ரேல் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இதற்கு பதிலளித்த ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் இணை பேராசிரியர் ரேஷ்மி காஸி, "டிரம்பின் வெற்றிக்குப் பின் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பங்கு இதில் அதிகம். மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம் போன்றவற்றை தனது முந்தைய ஆட்சியில் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அவர் போருக்கு ஆதரவாக இல்லை என மக்கள் நம்புவதற்கு இவைதான் காரணம்" என சுட்டிக்காட்டுகிறார்.
ஃபஸ்ஸுர் ரஹ்மான் இதுபற்றி பேசுகையில், "டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பில்லை, எனினும் தீர்வு எட்ட முயற்சிப்பார். அமெரிக்கா மிகவும் வலிமை வாய்ந்தது என்பது டிரம்புக்கு தெரியும். டிரம்பிடம் ராஜ்தந்திரம், சூழ்ச்சி போன்றவைக்கு இடமில்லை. அவர் ஆக்ரோஷமான, துல்லியமான அரசியல்வாதி, விஷயங்களை இழுத்தடிப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை" என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



