ஒடிஷாவின் பிணவறைகளில் அன்புக்குரியவர்களை தேடும் விளிம்புநிலை மக்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, ஒடிஷாவின் பிணவறைகள் முன்பு காத்திருக்கும் எளிய மக்கள்
ஒடிஷாவின் பிணவறைகளில் அன்புக்குரியவர்களை தேடும் விளிம்புநிலை மக்கள் - காணொளி

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. சடலங்களைத் தேடி வருவோரின் கதறல்களால் நிறைந்திருக்கின்றன அந்த மருத்துவமனைகள்.

ஒதிஷா ரயில் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக புவனேஸ்வருக்கு வந்துகொண்டிருக்கின்றன. சடலங்களை அடையாளம் காண வருவோருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டரில் திடீரென ஒரு கதறல் சத்தம். கணிப்பொறியின் திரையில் காட்டப்பட்ட சடலங்களில் தன் மகனின் சடலத்தை அடையாளம் கண்ட தந்தையின் கதறல் அது.

50களில் உள்ள சிவசங்கர் ஜானாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் சிறுவன். இன்னொரு மகனான டெவிட் ஜானாவுக்கு 27 வயது. தந்தை, மகன் இருவருக்குமே சரியான வேலை இல்லாத நிலையில், சென்னையில் வேலை தேடலாம் என கோரமண்டல் எக்ஸ்பிரசில் புறப்பட்டார் டெவிட் ஜானா.

டெவிட் ஜானாவுடன் தானும் வருவதாகச் சொன்னார் சிவசங்கர். ஆனால், சென்னைக்குச் சென்று வேலைதேடி, ஒரு சிறிய வீட்டையாவது வாடகைக்கு எடுத்துவிட்டு, தன் தந்தையை அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டார் டெவிட் ஜானா.

இப்போது, அந்த மகனின் உடலை வாங்க வெயில் கொளுத்தும் ஒரு நாளில், பரிச்சயமில்லாத ஒரு ஊரில், பிணவறை முன்பாக அமர்ந்திருக்கிறார் சிவசங்கர் ஜானா.

இதுபோன்ற கதைகளுடன் இன்னும் பலரும் தங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் புவனேஸ்வரின் வீதிகள் அலைந்து சோர்ந்திருக்கின்றனர்.

செய்தியாளர் - முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு - மதன்

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: