இன்னும் 5 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? சர்வதேச நிறுவனம் கணிப்பு
ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2030ஆம் ஆண்டுவாக்கில் 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இடைக்காலத்தில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31.1 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 4,000 முதல் 5,000 டாலராகவும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது 8,900 டாலராகவும் உயரும் என சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கணித்திருக்கிறது. அதாவது, ஒரு அமெரிக்க டாலர் 83 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,751 ரூபாயை எட்டும். அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1.80 லட்சம் வரை உயரலாம் என்று அந்த அறிக்கை கணிக்கிறது.
லீக்கின்ஸ்டைனை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமென்டம், சமீபத்தில் "Gold We Trust Report 2025" என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணங்களையும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வெகுவாக உயரும் என்ற கணிப்பிற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
முக்கியமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.
பல நாடுகள், தங்கள் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உதாரணமாக ரஷ்யாவின் நிதிக் கையிருப்பில் தங்கத்தின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் 8லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா ஒவ்வொரு மாதமும் 40 டன் தங்கத்தை வாங்கும் என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த தசாப்தத்தின் இறுதியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 8,900 டாலர் என்ற விலையைத் தொடும். இது ஆண்டுக்கு 19 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டின் இறுதியிலேயே ஒரு அவுன்சின் விலை 4,080 டாலர்களைத் தொடும் என்கிறது இந்த அறிக்கை. அதாவது ஒரு கிராம் 10,895 ரூபாயாக உயரும்.
தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்கிறது இன்க்ரிமென்டம் நிறுவன அறிக்கை. அதாவது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் அளவைக் குறைக்க வேண்டும்.
அடுத்ததாக, யுக்ரேன் யுத்தம் முடிவுக்கு வரும் வகையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாவது, மத்திய கிழக்கில் உள்ள பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பது, அமெரிக்காவின் வர்த்தகப் போர் முடிவு வருவது போன்றவை நடந்தால் புவிசார் அரசியலில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். இது தங்கத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்ற கேள்வியும் இருக்கிறது.
நிரந்தர வைப்புத் தொகை, பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் என முதலீட்டாளர்கள் முன்பாகப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மிகச் சிறந்த முதலீடுகள் என எடுத்துக் கொண்டாலும் 10-12 சதவிகித வருவாயே கிடைக்கும் என்ற நிலையில், தங்கம் 19 சதவிகித வளர்ச்சியைக் கொடுக்கும் என்கிறது இந்தக் கணிப்பு.
"எல்லா நாணயங்களுக்கும் எதிராக நிலையாக இருக்கக்கூடியது தங்கம் மட்டும்தான். ஒருவர் தனது முதலீட்டில் குறிப்பிட்ட அளவை தங்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன்" என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
தங்கத்தின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு இருந்தாலும், தங்கத்தை வாங்குபவர்கள் பல்வேறு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் முதலீட்டு ஆலோசகரான நாகப்பன் புகழேந்தி.
"தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் விலை கடந்த ஓர் ஆண்டில் 75 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆகவே எதிர்கால விலை உயர்வுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் தங்கத்தைப் பொறுத்தவரை வேறு பல விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய வங்கிகள் வாங்குவதால் விலை உயரும் எனக் கணிக்கிறார்கள். ஆனால், பிரச்னைகள் தீர்ந்து மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை நிறுத்தினாலோ, விற்றாலோ என்ன ஆகும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்" என்கிறார் நாகப்பன்.
கடந்த 2012இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை தங்கத்திற்கு என்ன நேர்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் அவர். அதாவது, 2012இல் 10 கிராம் தங்கம் 31,050 ரூபாயாக இருந்த நிலையில், 2015இல் சுமார் 26,300 ஆகக் குறைந்தது. பிறகு 2018ஆம் ஆண்டில்தான் மீண்டும் பத்து கிராமுக்கு 31 ஆயிரம் என்ற விலையை தங்கம் எட்டியது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? முழு விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



