You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுவானில் திடீரென குலுங்கிய விமானம், தூக்கி வீசப்பட்ட பயணிகள் - சிங்கப்பூர் விமானத்திற்குள் என்ன நடந்தது?
- எழுதியவர், ஜோயல் கிண்டோ, சைமன் ஃப்ரேசர்
- பதவி, பிபிசி செய்திகள்
லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப் கிச்சன் என்ற 73 வயது நபர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று பாங்காக்கில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து தகவல்கள் இல்லை.
பயணிகள் சொல்வது என்ன?
பிபிசி-யிடம் பேசிய, அந்த விமானத்தில் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, "காபி என்மீது முழுவதும் கொட்டிவிட்டது" என்று கூறினார். "விமானத்தின் நிலை தாழ்ந்த சில வினாடிகளில், ஒரு பயங்கரமான அலறல் போன்ற ஒரு சத்தம் கேட்டது," என்றார்.
இந்தக் கொந்தளிப்பு நிலையடைந்தவுடன், 'தலையில் காயம்' ஏற்பட்டு 'வேதனையால் அலறிய' ஒரு பெண்ணுக்குத் தன்னால் உதவ முடிந்தது என்று ஆண்ட்ரூ கூறினார்.
பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தின் ஒரு சிறப்புப் பகுதியில் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஆண்ட்ரூ. "எனக்கு வேறொரு விமானம் கிடைக்கும். இவை மிகவும் அரிதான நிகழ்வுகள்," என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய மற்றொரு பயணி, விமானம் திடீரென "மேல்நோக்கிச் சாய்ந்து, நடுங்கியது," என்றார்.
"நான் அடுத்து நடக்கப் போவதற்காக மனதளவில் தயாராகத் துவங்கினேன். திடீரென்று விமானத்தின் நிலை பயங்கரமாகத் தாழ்ந்தது. அதனால் அமர்ந்திருந்த மற்றும் சீட்பெல்ட் அணியாத அனைவரும் உடனடியாக விமானத்தின் மேற்கூரையில் சென்று மோதினர்," என்று 28 வயதான மாணவர் ஸஃபரான் ஆஜ்மீர் கூறினார்.
"சிலரது தலை பேக்கேஜ் கேபின்களின் மேல் இடித்து, அதைக் குழியாக்கி, விளக்குகள் மற்றும் முகமூடிகள் இருக்கும் இடங்களில் மோதி அவ்விடங்கள் உடைந்தன," என்றார்.
விமானத்திற்குள் என்ன நடந்தது?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321 இல் பயணித்த ஒரு பயணி, பிபிசி 5 லைவ்விடம் பேசியபோது, "மிகவும் இயல்பான" பயணம் திடீரென மோசமானதாக மாறியது என்று கூறினார்.
லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, தனது பல ஆண்டு விமான பயண அனுபவத்தில் அந்த கொந்தளிப்பை "நம்ப முடியாத அளவிற்கு கடுமையானது" என்று விவரித்தார்.
விமானத்தின் இந்த மோசமான நிலை சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகத் தோன்றினாலும், அதன் பிறகு நடந்த காட்சி "பயங்கரமானது" என்று ஆண்ட்ரூ கூறினார்.
"தலையில் பயங்கர காயத்துடன் இரத்தம் தோய்ந்த ஒரு வயதான பெண்மணி" இருப்பதைப் பார்த்ததை அவர் நினைவு கூர்ந்தார், மற்றொரு பெண் "முதுகில் ஏற்பட்ட வலியால் கத்தினார்".
மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபரின் அருகில் அமர்ந்திருப்பதாகவும், விமானத்தின் எஞ்சிய பயண நேரம் முழுமையும் தரையில் படுத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் மோசமாக காயமடைந்த மற்றொரு நபரைப் பார்த்ததாகவும் ஆண்ட்ரூ கூறினார்.
பாங்காக்கில் சிகிச்சை
விமானத்தில் இருந்த 31 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பயணிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாகவும், கூடுதல் உதவி அளிக்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகாலக் குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்றார்.
"லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
143 பயணிகள் சிங்கப்பூர் சென்றடைந்தனர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் காயமின்றி தப்பிய 143 பேர், பாங்காக்கில் இருந்து மற்றொரு விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 131 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் சிங்கப்பூரை சென்றடைந்துவிட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய விமானத்தில் இருந்த 79 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதால் பாங்காக்கிலேயே தொடர்ந்து இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரணம் என்ன?
இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொந்தளிப்பு (Turbulence) பொதுவாக விமானம் மேகத்தின் வழியாகப் பறக்கும்போது ஏற்படுகிறது. ஆனால் ரேடாரில் தெரியாத 'தெளிவான காற்றுக் கொந்தளிப்பும்' உள்ளது.
"பல லட்சம் விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான கொந்தளிப்பால் ஏற்படும் காயங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. இருப்பினும், கடுமையான கொந்தளிப்பு கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும், அல்லது துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தைப்போல உயிரிழப்புக்கு வழிவகுக்கும்," என்று விமான நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் பிபிசியிடம் கூறினார்.
கொந்தளிப்புகளைச் சமாளிப்பது எப்படி என்று விமானக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார் அவர்.
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் கடுமையான கொந்தளிப்பை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன காட்டுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)