You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவரானதற்கு காரணமான 'அந்த சம்பவம்' என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் கு. செல்வப்பெருந்தகை. நீண்ட நாட்களுக்குப் பிறகு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பின்னணி என்ன, சவால்கள் என்ன?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக 2019ஆம் ஆண்டிலிருந்து கே.எஸ். அழகிரியே செயல்பட்டு வந்திருக்கிறார். பொதுவாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் நிலையில், கே.எஸ். அழகிரியின் பதவிக் காலம் நீடித்துக்கொண்டே வந்தது.
1989லிருந்து 1995வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்திக்குப் பிறகு, வேறு தலைவர்கள் யாரும் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவியில் இருந்ததில்லை. ஒரு கட்டத்தில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை, அழகிரி மாற்றப்பட மாட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். இந்த எதிர்பாராத மாற்றத்திற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், காங்கிரஸ் வட்டாரங்களில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமா?
அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கே.எஸ். அழகிரி, தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் தமிழகப் பொறுப்பாளர் அஜய்குமாரும் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவருக்கும் சில எம்.பிக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் கட்சித் தலைமைக்கு எட்டியது.
மேலும், காரைக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியிலும் கே.எஸ். அழகிரி இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.
இதை அடுத்தே கே.எஸ். அழகிரியை மாற்ற கட்சித் தேசியத் தலைமை முடிவுசெய்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்கள் பரவலாகப் பேசப்பட்டாலும் இது தொடர்பாக வெளிப்படையாகப் பேச கட்சியினர் தயங்குகிறார்கள்.
கு. செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
தலைவரை மாற்ற முடிவெடுக்கப்பட்டவுடன், கரூர் தொகுதியின் எம்.பி. ஜோதிமணி, விருதுநகர் தொகுதியின் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், இவர்கள் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதால், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக்கப்பட்டிருக்கிறார்.
பிப்ரவரி 17ஆம் தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டாலும், 21ஆம் தேதி புதன்கிழமையன்று தான் பதவியேற்றுக்கொண்டார் செல்வப்பெருந்தகை. இந்த பதவியேற்பு விழா காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜரின் வீட்டை பின்னணியாக வைத்து பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கட்சிக்குள் மோதல் ஏதும் இல்லை என்பதைக் காட்டும்விதமாக முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதில் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டனர். செல்வப்பெருந்தகைக்கு முன்பு தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய பலரும் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கே.எஸ். அழகிரி என்ன பேசுவார் என்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அஜய் குமாருக்கும் செல்வப்பெருந்தகைக்கும் முன்பாக பேச வந்த அழகிரி, செல்வப்பெருந்தகை தலைவரானதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.
"காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனைகள் இருந்தால் அதை நமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளியில், ஊடகங்களிடம் பேசக்கூடாது. செல்வப்பெருந்தகை தலைவரானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் தலைவர் பதவியில் கூடுதலான காலகட்டத்திற்கே இருந்துவிட்டேன்"
"ஆகவே பதவியை விட்டுச் செல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. திருநாவுக்கரசரிடமிருந்து பதவியைப் பெறும்போது எப்படி மகிழ்ச்சியோடு இருந்தேனோ, அதே மகிழ்ச்சியுடன் செல்வப்பெருந்தகையிடம் பதவியை ஒப்படைக்கிறேன்" என்றார் அழகிரி.
தி.மு.கவுடன் மிகுந்த சுமுகமான உறவைப் பேணிவருபவர்
அடுத்து பேசவந்த அஜய்குமாரும், கட்சிக்குள் உள்ள பிரச்னைகளை கட்சிக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதுதவிர, பேசிய பலரும், கட்சியை தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள்.
கு. செல்வப்பெருந்தகையைப் பொறுத்தவரை, ஆளும்கட்சியான தி.மு.கவுடன் மிகுந்த சுமுகமான உறவைப் பேணிவருபவர். குறிப்பாக சட்டமன்றத்தில் மிகத் தீவிரமாகவே ஆளும்கட்சியை ஆதரித்துப் பேசுவார். ஆகவே, இந்தத் தலைவர் மாற்றத்தில் தி.மு.கவுக்கு எந்தச் சங்கடமும் இருக்காது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறியவர் என்பதால், அந்தக் கட்சிக்கு சங்கடங்கள் ஏதும் இருக்குமா?
"அப்படி எந்த சங்கடமும் கிடையாது. அவர் வி.சி.க. மூலம் எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், கட்சியைவிட்டு விலகிய பிறகும் அந்தப் பதவியில் தொடர்ந்தார். காங்கிரசிற்குச் சென்ற பிறகும் அந்தப் பதவியில் நீடித்தார். ஆகவே அவரை கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் நாங்கள் பார்க்கிறோம்" என்கிறார் வி.சி.கவின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
'பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிலர் முரண்டுபிடிக்கலாம்'
கு. செல்வப்பெருந்தகையைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியோடு நல்ல உறவு இருந்தாலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன.
"காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கோஷ்டிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது தான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். ஒருவர் கட்சியின் மாநிலத் தலைவரானவுடனேயே அவருக்கென தனியாக ஒரு கோஷ்டி உருவாகிவிடும்."
"மற்ற முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களையெல்லாம் எப்படி அரவணைத்துச் செல்லப்போகிறார் என்பதெல்லாம் சவால்தான். தவிர, பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால், கூடுதலாகச் சிலர் முரண்டுபிடிக்கலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கோலப்பன்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாக வேறு சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
"பட்டியலின மக்களைப் பொறுத்தவரை, புதிதாக யாரும் திராவிடக் கட்சிகளில் சேர்வதில்லை. பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக எல். முருகன் வந்த பிறகு, அவர் பல இடங்களில் பட்டியலின மக்களிடம் சென்று பேசினார். அவர்களில் பலர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்தார்கள்."
"தற்போது வெளிவரும் சில கருத்துக் கணிப்புகளில், சில தொகுதிகளில் அ.தி.மு.கவைவிட கூடுதலான வாக்குகளை பா.ஜ.க. பெறும் என்கிறார்கள். இதை நான் நம்பவில்லை. ஆனால், அப்படி நடந்தால் அது அ.தி.மு.கவை விட காங்கிரஸுக்குத் தான் பெரிய சிக்கல். ஆகவே, பா.ஜ.க. தமிழ்நாட்டில் இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகளைப் பெறக்கூடாது. பெற்றுவிட்டால், அந்தக் கட்சியோடு கூட்டணிவைக்கவே பிற கட்சிகள் முயலும். அப்போது காங்கிரசின் நிலை மிகச் சிக்கலாகிவிடும். அது நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இவரது பொறுப்பு" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
கு. செல்வப்பெருந்தகையின் அரசியல் பயணம்
மணிமங்கலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கு. செல்வப்பெருந்தகை தனது படிப்பை முடித்த பிறகு ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிவந்தார். அந்தத் தருணத்தில் பூவை மூர்த்தியால் துவக்கப்பட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியில் (APLF) இணைந்து செயல்பட்டுவந்தார். அந்த அமைப்பு பிறகு புதிய பாரதம் கட்சியாக மாறியபோது அதில் தொடர்ந்தார்.
இதற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி புதிய தமிழகம் கட்சியில் சில காலம் செயல்பட்டார். அந்தத் தருணத்தில் ஒரு விபத்தில் அவருக்கு கால் முறிந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருந்த தொல். திருமாவளவன் அவரைச் சென்று பார்த்தார். அதற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார் செல்வப்பெருந்தகை. கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்றார். ஆனால் இதற்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வி.சி.கவிலிருந்து விலகினார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2010ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பட்டியலினப் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செங்கம் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பழனியைவிட சுமார் பத்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கு. செல்வப்பெருந்தகையின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாகவே சொல்லவேண்டும்.
2021இல் கு. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தருணத்தில் அவருக்கு சட்டமன்றக் கட்சிக்குள் சீனியராக விஜயதரணி, ராஜேஷ் குமார் போன்றவர்கள் இருந்தார்கள். இருந்தபோதும் சட்டமன்றக் கட்சித் தலைவர் வாய்ப்பு செல்வப்பெருந்தகைக்குக் கிடைத்தது. தமிழக சட்டசபையின் பொதுக் கணக்கு குழு தலைவராகவும் கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாவது தலைவர் இவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)