You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?
- எழுதியவர், சுவோஜித் பாக்சி
- பதவி, பிபிசிக்காக
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் தீவிரமானது. அதனால் ஏற்பட்ட வன்முறையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மாணவர் இஜாஸ் அகமது (17), ஹர்கோவிந்த தாஸ் (65) மற்றும் சந்தன் தாஸ் (35) ஆகிய மூவரும் இதில் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
ஹர்கோவிந்த தாஸ் என்பவரின் மகன்தான் சந்தன் தாஸ். இருவரும் சொற்ப வருமானத்துடன் ஆடுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அவர்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
இந்த வன்முறையில் இன்னும் பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இதுதொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
"அரசியல் லாபத்துக்காக வன்முறைகளை தூண்டாதீர்கள்," என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சில கட்சிகள் "அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன" என, மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், "தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவும், பள்ளி ஆசிரியர்கள் 26,000 பேர் வேலை இழப்பதை திசைதிருப்பவும் வன்முறையை தூண்டுவதாக" திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மாநிலத்தில் வக்ஃப் சட்டம் அமல்படுத்தப்படாது என, முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புப் படைகளை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
மாநிலத்தின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் பேசியுள்ளதாகவும் அனைத்துவித உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது. எல்லை பாதுகாப்புப் படையினர் சுமார் 300 பேர் முர்ஷிதாபாத்தில் பணியில் உள்ளதாகவும் மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ஐந்து படைப்பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
முர்ஷிதாபாத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்ற நிலையில், சஜூர் மோர் மற்றும் டுலியன் நகராட்சியில் உள்ள ஜஃபராபாத் ஆகிய இரண்டு பகுதிகளில் மரண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த இரண்டு இடங்களும், வடக்கு முர்ஷிதாபாத்தில் வங்கதேச எல்லைக்கு அருகே உள்ளன.
'' 17 வயதான இஜாஸ் அகமது மீது வெள்ளிக்கிழமை துப்பாக்கிசூடு நடந்தது. சனிக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்'' என முக்கிய வங்க பத்திரிக்கையில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் தனது பெயரை குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.
'' சனிக்கிழமை காலை ஜஃபராபாத்தில் தந்தை மகன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் வெட்டி கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் அவர்களின் உடலில் இருந்தன'' என்கிறார் அவர்.
அகமதை யார் கொன்றார்கள் என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. தந்தை மகன் மரணம் குறித்து முரண்பாடான தகவல்கள் வந்துள்ளன.
ஜாஃபராபாத்தை ஒட்டியுள்ள திக்ரியில் இனிப்பு தயாரிப்பாளர் ஹேமந்தா தாஸ் வசிக்கிறார். சனிக்கிழமை ஹர்கோவிந்த தாஸ் வீட்டுக்கு சென்றதாக கூறும் அவர், தந்தை மற்றும் மகன் ஏன் குறிவைக்கப்பட்டனர் என்பது தனக்குத் தெரியவில்லை என கூறுகிறார்.
"அவர்கள் சிறு ஆடு வியாபாரிகள். அவர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்பது எனக்குத் தெரியவில்லை," என்று ஹேமந்தா கூறினார்.
"முதலில் கற்கள் வீசப்பட்டன, ஒரு குழு வீட்டைத் தாக்கியது. அவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கியதும், குடும்பத்தினர் எதிர்த்தனர். அவர்கள் அடித்து, பின்னர் வெட்டி கொன்றனர்" என்று ஹேமந்தா கூறினார்.
மற்றொரு உள்ளூர் பத்திரிகையாளர், தந்தையும் மகனும் "இரு குழுக்களுக்கு இடையேயான மோதல்களில்" கொல்லப்பட்டதாகக் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் குறித்து காவல்துறையினர் ''அமைதியாக'' உள்ளனர். அவர்களை " குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்" என விவரித்துள்ளனர்.
தனது பெயரை குறிப்பிட விரும்பாத துலியன் நகரத்தைச் சேர்ந்த ஒரு வங்க மொழி ஆசிரியர், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வக்ஃப் எதிர்ப்பு பேரணிகள் அமைதியான முறையில் நடந்தது என கூறினார்.
"முதலில், பேரணிகளில் ஒன்று இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோஷ் பாரா பகுதியைக் கடக்கும்போது ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. எதிர்தரப்பினர் கல் வீசத் தொடங்கியதாக இரு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தத் தகவல் நெடுஞ்சாலையில் இருந்த போராட்டக்காரர்களை அடைந்ததும், ஒரு பரபரப்பு ஏற்பட்டது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கடைகள் சேதப்படுத்தப்பட்டன, "என்று அவர் கூறினார்.
இருப்பினும், மாலைக்குள் போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வெள்ளிக்கிழமை டாக் பங்களா மோரிலிருந்து ஏழு கிலோமீட்டர் கிழக்கே உள்ள சஜூர் மோரில் மற்றொரு கூட்டம் நடந்தது.
"நான் அங்கு இல்லை. ஆனால் போலீசார் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். இதன் காரணமாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம். இதனால் மாணவர் படுகாயமடைந்தார்," என்று ஆசிரியர் கூறினார். மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் இன்னும் பதிலளிக்கவில்லை.
பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடு மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன. அதே நேரத்தில் ரத்தன்பூர் மற்றும் ஷிப்மந்திர் ஆகிய இரண்டு இடங்களில் ஒரு கோயில் மற்றும் மசூதியும் குறிவைக்கப்பட்டன.
"ஜஃபராபாத்தில் ஏற்பட்ட கலவரம் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த குழப்பத்தின் மத்தியில், இரு சமூகங்களின் பிரதிநிதிகளும் ரத்தன்பூரில் ஒரு அமைதிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்" என்று ஆசிரியர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு ஏன்?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முர்ஷிதாபாத்தில் 66 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் இங்கு சமீபத்திய அனைத்து தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
முர்ஷிதாபாத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் மாநில சட்டமன்றத்தின் 22 உறுப்பினர்களில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்த சம்பவங்கள் நடந்த வடக்கு முர்ஷிதாபாத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்கள். அதே போல் நகராட்சிகளும் இந்த கட்சியிடம்தான் உள்ளது.
"இங்கு திரிணாமுல் காங்கிரஸுக்கு இவ்வளவு ஆதரவு உள்ளது. பாஜகவின் தடமே இல்லாமல்.இவ்வாறு இருக்கும்போது நிலைமை எவ்வாறு கட்டுப்பாட்டை மீறியது என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி" என்று மூத்த பத்திரிகையாளர் கூறினார்.
இது குறித்து பேசுவதற்காக ஜாங்கிபூர் நாடாளுமன்ற உறுப்பினர் கலிலுர் ரஹ்மான் மற்றும் ஜாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினர் ஜாகிர் ஹொசைன் ஆகியோரை சனிக்கிழமை இரவு தொடர்புகொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
"வெள்ளிக்கிழமை இரவு அனைத்தும் அமைதியாகிவிட்டது. பின்னர் சனிக்கிழமை காலை வன்முறை வெடித்தது ஏன்?'' என்கிறார் துலியானை சேர்ந்த சமூக ஆர்வலரான ஜிம் நவாஸ். மிக சமீப காலம்வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறார்.
"கடைகள் எரிக்கப்பட்டபோது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள்''
முஸ்லிம் சமூக வாசகர்களை மையமாக கொண்ட 'அபோன்சன்' எனும் வங்க செய்தித்தாளின் ஆசிரியர் ஜைதுல் ஹக், சமீப காலங்களில் இவ்வளவு பெரிய வன்முறைச் செயலை மாநிலம் கண்டதில்லை என்று கூறினார்.
''மக்களை அமைதி காக்க வேண்டும் என அரசு கோரவில்லை. மக்கள் ஆத்திரமூட்டலில் இருந்து விலகி இருக்குமாறு கூறப்பட்டது. நமது புனித நூல்கள் பிற மதங்களைச் சேர்ந்தவர்களை மதிக்கச் சொல்கின்றன. இருந்தபோதிலும் இது நடந்துள்ளது'' என்று ஹக் கூறினார்.
அரசியல் கணக்கு
மேற்கு வங்கத்தில் பாஜகவால் ஆட்சி அமைக்கவோ அல்லது பிகாரைப் போல வெற்றி பெறவோ ஒரு கூட்டணியை கண்டுபிடிக்கவோ முடியவில்லை. பிரதமர் மோதி உட்பட பல உயர் நிலை தலைவர்கள் இங்கு தொடர் பிரசாரம் செய்தனர்.
2019 முதல் தொடர்ந்து 35-40 சதவீத வாக்குகளை பாஜக பெற்றபோதும் ஆட்சி கைகூடவில்லை.
2019 ஆம் ஆண்டைப் போல சமூகங்களை தீவிரமாக துருவப்படுத்துதல், பாஜகவுக்கு சாதமாக மாறலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாஜகவின் இந்து வாக்குப் பங்கு 2014-ல் 21 சதவீதத்திலிருந்து 2019-ல் 57 சதவீதமாக உயர்ந்து.
2019ல் மாநிலத்தில் உள்ள 42 நாடாளுமன்ற இடங்களில் 18 இடங்களைப் பெற்றது. இதுதான் மாநிலத்தில் பாஜக பெற்ற சிறந்த வெற்றியாகும்.
"மாநில அரசு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அரசியல் மற்றும் சமூக பின்புலத்தை பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், மாநிலத்தில் இதுபோன்ற குறைந்த அளவிலான வகுப்புவாத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று சமூக அறிவியல் ஆய்வு மையத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் மைதுல் இஸ்லாம் கூறினார்.
"முஸ்லீம் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் நடக்கும் வகுப்புவாத வன்முறை எப்போதும் பாஜகவுக்கு தேர்தல் பலன்களை அளித்துள்ளது'' என்று பேராசிரியர் இஸ்லாம் கூறினார்.
மற்றொரு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோன்ற வகுப்புவாதம் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டிற்கும் தேர்தல் ரீதியாக உதவுகிறது என கூறுகிறது.
"கடந்த 10 ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் வகுப்புவாத வன்முறைம சீராக வளர்ந்துள்ளது, இருப்பினும் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திலிருந்து எங்களிடம் எந்த தரவும் இல்லை," என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் பிரதிச்சி நிறுவனத்தின் தேசிய ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளரான அரசியல் ஆய்வாளர் சபீர் அகமது கூறினார்.
"ஆயினும்கூட, நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்கள் வரை வகுப்புவாத வன்முறையில் கணிசமான அதிகரித்துள்ளதை அனுபவபூர்வமாக நிறுவ முடியும்.இது சமூகங்களை துருவப்படுத்துதலுக்கு வழிவகுத்தது. இது ஆளும் கட்சி மற்றும் பாஜக இரண்டிற்கும் தேர்தல் ரீதியாக உதவியதாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.
நிலைமை மோசமடையக்கூடும் என்று அகமது எச்சரிக்கிறார்.
நிலைமை மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, முதலமைச்சர் மமதா பானர்ஜி ஏப்ரல் 16 ஆம் தேதி முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
"அவர் சட்டம் ஒழுங்கு நிலைமையை நேரடியாகக் கண்காணித்து வருகிறார், மேலும் காவல்துறைத் தலைவர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளையும் சனிக்கிழமை இரவு முர்ஷிதாபாத்திற்கு அனுப்பினார்," என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாஜக தனது உயர்நிலை தலைவர்களை முர்ஷிதாபாத்திற்கு அனுப்பி, திங்கட்கிழமை முதல் ஒரு தீவிர பிரசாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு