காணொளி: ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வரும் 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

காணொளி: ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வரும் 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மோதி அரசு புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.

பல்வேறு மாற்றங்கள் உடன் 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்று பெயரிடப்பட்ட புதிய மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே இரண்டு அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமங்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஏன்? இந்த காணொளியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

2005 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் நாட்டில் கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு ஓர் ஆண்டில் நூறு நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் சிறப்புத் திறன்கள் இல்லாத தொழிலார்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட விதிகள்படி, திட்டத்தின் நிர்வாக பொறுப்பில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் ஊதியத்திற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. பொருட்கள் மற்றும் உபகரணங்கள் செலவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாநில அரசு பகிர்ந்து கொள்கிறது.

இந்தியாவில் இருந்து வந்த மிகப் புதுமையான திட்டம் இது என்றும், இது உலகம் முழுவதும் ஒரு பாடமாக விளங்குகிறது என பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 2016-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை பாராட்டியிருந்தார்.

இந்த திட்டம் திருப்புமுனை திட்டமாக மாறியது எப்படி?

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலைவாய்ப்பு என்பது பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் இந்த நெருக்கடி அதிகமாக இருந்தது. அத்தகைய சூழலில் பல அமைப்புகள் நீண்ட காலமாக கிராமங்களில் நிலவி வந்த வேலைவாய்ப்பு நெருக்கடி குறித்து குரல் எழுப்பி வந்தனர்.

அந்த காலகட்டத்தில் தான், இந்தச் சட்டம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியது. இந்த திட்டம் தனித்திறன் இல்லாத தொழிலாளர்களின் இடப்பெயர்வு, வேலையின்மை போன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பதில் முக்கியப் பங்காற்றியது.

இந்த திட்டத்தின் கீழ் 12 கோடிக்கு அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என இந்திய அரசு கூறுகிறது.

இந்திய கிராமங்களில் இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள, ராஜஸ்தானில் இருந்து ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார் விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலரான நிகில் டே.

ராஜஸ்தான் வறட்சி, வெள்ளம், பஞ்சம் என பல பிரச்சனைகளைச் சந்தித்திருந்த நிலையில் அம்மாநில மக்கள் வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால் 50 பேருக்கு மட்டுமே வேலை இருந்தது. மாறாக ஆயிரம் பேர் வேலை கேட்டு வந்து நின்றதாக குறிப்பிடுகிறார் சமூக ஆர்வலர் நிகில் டே.

ஒவ்வொரு நாள் காலையும் கிராமத் தலைவரின் வீட்டில் கூடும் மக்கள், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் கைகூப்பியும், காலில் விழுந்தும் வேலை கேட்டு நிற்பார்கள். அந்த காலகட்டத்தில் தான் நூறு நாள் வேலைத்திட்டம் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை அளித்து மக்களுக்கு அதிகாரமளித்தது என கூறுகிறார் நிகில் டே

நூறு நாள் வேலையின் கீழ் கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், நீர்ப்பாசன வசதிகள், நதி புனரமைப்பு, மற்றும் தேசிய ஊரக இயக்கத்துடன் தொடர்புடைய பிற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 262 வகையான வேலைகளை மேற்கொள்ள முடியும். அவற்றில் 164 வேலைகள் விவசாயம் தொடர்பானவை.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் நாடு முழுவதும் 56 சதவித பெண்கள் இதில் பங்கெடுத்துள்ளதாகக் குறிப்பிடும் மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் சிங், இந்த சதவீதம் பெண்கள் அதிகாரம் பெறுவதைக் காட்டுவதாகவும் கூறுகிறார்.

நாட்டின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை வழங்கும் இந்தத் திட்டம், ஊழல் போன்ற சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கியுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு வேலை வழங்கப்படாமல், வேலை வழங்கப்பட்டதாகக் கணக்கில் மட்டும் காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

"முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்த மக்களே வேலை செய்தனர். ஆனால், கணக்கில் அது அதிகமாகக் காட்டப்படும். அதற்கான பணமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தொடர் விழிப்புணர்வுகள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தப் பகுதியில் எத்தனை பேர் வேலை செய்துள்ளனர், என்ன வேலை செய்யப்பட்டுள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடுகிறார்." சமூக ஆர்வலர் நிகில் டே.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஏன்?

புதிய மசோதாவின்படி மொத்த செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசுகளும் ஏற்கும் என முன்மொழியப்பட்டுள்ளது. முன்னதாக, மாநிலங்களின் செலவு சுமார் 10% மட்டுமே என்றிருந்தது. அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்கள், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படும் செலவில் 90 சதவிகிதத்தை மத்திய அரசு ஏற்கும் என கூறப்பட்டுள்ளது.

"மத்திய அரசின் இந்த முன்மொழிவில், இந்தத் திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நீக்கும் பல விதிகள் உள்ளன. தற்போது இந்தத் திட்டம் நாடு முழுவதும் பொருந்தும். ஆனால், புதிய முன்மொழிவில், பிரிவு 5 (1)இன்படி, இது எங்கு செயல்படுத்தப்படும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும்." என்று கூறுகிறார் நிகில் டே.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் செய்யப்படும் மாற்றம் தொடர்பாகவும் அதன் பெயர் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது

"புதிய முன்மொழிவு இந்தத் திட்டத்தை நீராதாரங்கள், சாலைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், கிராமப்புற வீட்டு வசதி ஆகியவற்றுடன் இணைக்கிறது. இவற்றுக்கென ஏற்கெனவே அமைச்சகங்கள் உள்ளன. இது நூறு நாள் வேலை திட்டத்தின் நிதியை திசைதிருப்ப விரும்புவதாகத் தெரிகிறது. இது இந்தத் திட்டத்தை முழுமையாக பாதிக்கலாம்." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான அரவிந்த் சிங்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு