பிரசாந்த் கிஷோரின் அரசியல் "ஸ்டார்ட் அப்"; பிகாரில் பிரகாசிக்கத் தவறியதா?

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பத்து வருடங்களுக்கும் மேலாக, தேர்தல் உத்தியாளராக அரசியல் வட்டாரங்களில் கோலோச்சிய பிரசாந்த் கிஷோர் - பிரதமர் நரேந்திர மோடி முதல் மாநில அரசியல் தலைவர்களான நிதிஷ் குமார், மமதா பானர்ஜி என சக்திவாய்ந்த தலைவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற வியூக வகுப்பாளர் ஆவார்.

48 வயதான அவர், அரசியல் அரங்கிற்குள் நுழைந்தபோது, அவருடைய மந்திரம் பலிக்கவில்லை.

இந்தியாவின் ஏழ்மையான மற்றும் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிகாரில், தரவு சார்ந்த அரசியல் தொடக்கத்தின் பெருமையுடனும், தேக்கநிலை சுழற்சியை உடைக்கும் வாக்குறுதியுடனும் கிஷோர் ஜன் சுராஜ் (People's Good Governance) தொடங்கினார்.

அவர் இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு நேர்த்தியான அமைப்பை உருவாக்கி, கிட்டத்தட்ட 243 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அரசியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் அதிகமாக வெளியானது. இருப்பினும், ஜன் சுராஜ் கட்சியால் ஒரேயொரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பிகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த ஆதரவு பெரும் தலைவர்களுக்கு கிடைத்த ஆதரவைப்போல இருந்தாலும், அவரால் அதை வாக்குகளாக அறுவடை செய்யமுடியவில்லை. இந்தியாவின் ஆழமாக பிளவுபட்ட அரசியல் சந்தையில், அவரது அறிமுகம் எச்சரிக்கைக் கதையாக நிற்பதாக பலர் நம்புகிறார்கள். ஓர் அமைப்பைப் பற்றி வெளியில் இருந்து பார்ப்பதையும் கணிப்பதையும்விட, அதற்குள் நுழைந்து நேரிடையாக எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று.

இந்திய அரசியலின் நவீன வரலாறு இதை நிரூபிக்கிறது.

1983-ஆம் ஆண்டு பிராந்திய கட்சியான தெலுங்கு தேசக் கட்சியின் (TDP) எழுச்சிக்குப் பிறகு, மிகச் சில புதிய கட்சிகள் மட்டுமே அரசியலில் ஒத்த சித்தாந்த பொருத்தத்தை தாண்டி வெற்றி பெற்றுள்ளன. மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் முதல் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் வரையிலான பல கட்சிகள், பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட அடித்தளங்களின் பிரிவுகளாகவே உருவாகின.

1985-ஆம் ஆண்டு அசாமின் அசோம் கன பரிஷத் (AGP), அதற்கு பல தசாப்தங்களுக்குப் பிறகு டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி (AAP) போன்றவை வெகுஜன மக்களை இணைப்பது மற்றும் அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் தாக்குபிடித்தன.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியால் மக்களை இணைக்கவோ அல்லது அரசியல் நெருக்கடியை சமாளிக்கவோ முடியவில்லை. ஏனெனில், ஜன் சுராஜ், தெருவிலிருந்தோ மக்கள் இயக்கத்திலிருந்தோ பிறந்தது அல்ல, ஆட்சிக்கு எதிரான கோபத்தின் உச்சமாக வெளிப்பட்ட கட்சியும் இல்லை.

மாநிலத்தில் பல பிரச்னைகள் இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டில் பிகார் மக்கள் தற்போதைய நிலையிலேயே திருப்தி அடைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

"ஆட்சிக்கு எதிரான அலை எதுவும் இல்லை - வாக்காளர்கள் பெரும்பாலும் நிறுவப்பட்ட அரசியல் மற்றும் தங்களது சாதியின் மீதான பற்றிலேயே திருப்தியடைந்துவிட்டனர். வெளிப்படையான நெருக்கடி அல்லது பரவலான அதிருப்தி இல்லாமல், கடின உழைப்பு மற்றும் அணிதிரட்டல் இருந்தபோதிலும், கிஷோரின் கட்சி ஒருபோதும் நம்பகமான மாற்றாகத் தோன்றவில்லை" என்று அரசியல் நிபுணர் ராகுல் வர்மா கூறுகிறார்.

பிகாரில் ஜன் சுராஜின் அறிமுகமும் பெரும்பாலான புதிய இந்தியக் கட்சிகளுடன் வேறுபட்டது.

ஏஜிபி, தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் "ஏற்கனவே ஆழமான உணர்ச்சி மற்றும் அடிமட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சமூக-அரசியல் இயக்கங்களிலிருந்து" வளர்ந்தவை. அதிலும், ஆம் ஆத்மி கட்சி வெகுஜன ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றிலிருந்து பிறந்தது.

ஆனால், ஜன் சுராஜ் "அறிவுசார் மற்றும் மூலோபாயத் திட்டமாக" கருதப்பட்டது. பிரசாந்த் கிஷோர் "அரசியல் வெற்றிடம்" என்று அழைத்ததை நிரப்புவதற்கான மூலோபாயம் சார்ந்த முயற்சி இது என, டெல்லியை தளமாகக் கொண்ட இந்திய ஜனநாயகப் பள்ளியின் செளரப் ராஜ் கூறுகிறார்.

"அடுத்தடுத்த பாதயாத்திரைகள் [மக்களைச் சந்திக்க மாநிலம் முழுவதும் நீண்ட நடைப்பயணங்கள்], அறிவுசார் கருத்தை மக்கள் பிரசாரமாக மாற்ற முயன்றது. ஆனால் புதிய கட்சிகளை பொதுவான ஏற்றதாக கருதச் செய்யும் இயல்பான, இயக்கம் சார்ந்த ஆற்றல் அதில் இன்னும் உண்டாகவில்லை. அந்த வகையில், ஜன் சுராஜ் என்பது கிளர்ச்சி அல்லது எழுச்சியால் பிறந்த ஒரு கட்சியை விட 'வடிவமைக்கப்பட்ட அரசியலின் தொடக்கமாக' உணர்கிறது," என்று செளரப் ராஜ் மேலும் கூறுகிறார்.

மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த அரசியல் திட்டம் சிறந்த மாற்றாக இருக்கும் என்று கிஷோர் உறுதிபட நம்பினார்.

சாதி மற்றும் அனுசரித்துச் செல்லும் அரசியலால் நீண்ட காலமாக சிக்கித் தவிக்கும் ஒரு மாநிலத்தில் ஆட்சி, வேலைவாய்ப்புகள், வேலைகள் மற்றும் கல்விக்காக கட்டாய இடம்பெயர்வு பற்றி அவர் பேசினார்.

பிகாரின் 130 மில்லியன் மக்களை, பெரும்பாலும் இளைஞர்களை சென்றடைந்த கிஷோர், பரபரப்பு, அணுகுமுறைகள், கவர்ச்சி, மீம்ஸ் என பலவிதங்களில் உத்திரீதியில் செயல்பட்டார்.

ஆனால், அரசியல் அமைப்புகளுக்கு எரிபொருளாக செயல்படும் 'உணர்வுபூர்வமான சக்தி' அவரது கட்சியிடம் இல்லை என்று பலர் நம்புகிறார்கள். பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிட மறுத்தது, அவர் பரிசோதனையை நடத்துகிறாரா அல்லது ஒரு மாற்றத்தை முன்னிறுத்துகிறாரா என்ற சந்தேகத்தை ஆழப்படுத்தியிருக்கலாம்.

பிகார் தீர்ப்பு இந்திய அரசியலின் முக்கியமான உண்மை ஒன்றை வெளிப்படுத்தியது, அது - கவனம் பெறுவதால் அமைப்பு வெற்றி பெறாது, மேலும் தளம் வலுவாக இல்லாமல் ஊடக விளம்பரம் மட்டும் செய்வது எதிர் விளைவை ஏற்படுத்தும்.

செளரப் ராஜ் குறிப்பிடுவது போல, ஜன் சுராஜ் "எந்த இடத்திலும் தீவிர போட்டியாளராக மாறத் தவறிவிட்டது", மேலும் அதற்கு கிடைத்திருக்கும் வாக்குகளின் பங்கு, "தெரிவுநிலைக்கும் வலிமைக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது".

கட்சிக்கு அங்கீகாரம் இல்லை, இயற்கையான சமூக அடித்தளம் இல்லை - அதன் போட்டியாளர்களைப் போல சாதி, மதம், பாலினம் அல்லது நகர்ப்புற தொகுதிகள் இல்லை என்று அவர் பட்டியலிடுகிறார்.

இதை மேலும் வெளிப்படையாகக் கூறும் செளரப் ராஜ், வணிகத்திலும் அரசியலிலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றி பெறுவதை விட பெரும்பாலும் தோல்வியடைகின்றன என்கிறார்.

"நாம் வெற்றிகளை மட்டுமே நினைவில் கொள்கிறோம், ஆனால் பெரும்பாலான புதிய கட்சிகள் தோல்விகளையே சந்திக்கின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.

கட்சியைக் கட்டமைப்பதற்குத் தெளிவு, அமைப்பு, அணிதிரட்டல் மற்றும் சரியான வேட்பாளர்கள் தேவை - ஒவ்வொன்றும் பிரத்யேகமான தனித்தனி சவால்கள் என்று சொல்லலாம், அதிலும் குறிப்பாக வாக்காளர்களின் நம்பிக்கையின் பதிவு இல்லாமல் என்று அவர் விளக்குகிறார். ஜன் சுராஜ் 238 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது, அவர்களில் பெரும்பாலோர் முதல் முறையாக போட்டியிடுபவர்கள்.

பிரசாந்த் கிஷோரின் கட்சி என்பதால் பரவலாக கவனம் பெற்ற ஜன் சுராஜ் கட்சியின் தோல்வி இந்திய வாக்காளர்களைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?

பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம், பிரசாந்த் கிஷோர் கூட்டத்தை ஈர்த்தார், அவர் வெளிப்படையாகப் பேசினார், ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினார் - ஆனாலும், ஒருபோதும் "இவர் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்" என்று பிரசாந்த் கிஷோர் கணித்த 74 வயதான மூத்த தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியிடம் அவரது கட்சி தோற்றது.

"இன்றைய இந்திய வாக்காளர்கள் முன்பை விட அரசியல் ரீதியாக விழிப்புணர்வும், பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் உள்ளனர், அதேபோல் அவர்கள் ஆழ்ந்த நடைமுறைச் சிந்தனையுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புதிய விஷயங்களை ஊக்குவிக்கிறார்கள், ஆனால் ஒரு கட்சியின் நம்பகத்தன்மையை நம்பாவிட்டால் 'பாதுகாப்பாக' வாக்களிக்க முனைகிறார்கள்," என்கிறார் ராஜ்.

நிர்வாகம், வேலைவாய்ப்புகள், இடம்பெயர்வு ஆகியவற்றில் ஜன் சுராஜ் கவனம் செலுத்தியது ஏற்புடையதாகவும், மக்களை ஈர்ப்பதாகவும் இருந்தது என்று கூறும் ராஜ், ஆனால் கவர்ச்சிகரமான தேர்தல் முகம் எதுவும் இல்லாமல், வாக்காளர்களால் ஜன் சுராஜ் கட்சியை வெற்றிகரமான மாற்றாகக் காண முடியவில்லை என்கிறார்.

இதற்கு நேர்மாறாக, ஊழல் எதிர்ப்பு பிரசாரகர் அரவிந்த் கெஜ்ரிவால், அப்போதைய டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு எதிராக தனிப்பட்ட முறையில் போட்டியிட்டதைச் சார்ந்தே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பகால வெற்றி அமைந்தது. அது தன்னார்வலர்களை வாக்காளர்களாக மாற்றிய அடையாளச் செயலாகும்.

"தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி இருக்கும் பிரசாந்த் கிஷோரின் முடிவு, மக்களிடையே உணர்ச்சிபூர்வமான தொடர்பையும் நம்பகத்தன்மையையும் மட்டுப்படுத்தியது. புதிய கட்சிகளுக்கு, கவர்ச்சிகரமான அம்சங்கள் உடைய திட்டம் முக்கியமானது, ஆனால், அதனுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற, சவாலை எதிர்கொள்ளும் தலைவராக அவர் தேர்தலில் போட்டியிருந்தால் அது திருப்புமுனையாக இருந்திருக்கும்" என்கிறார் ராஜ்.

எது எப்படியிருந்தாலும், பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு இந்தத் தேர்தல் தோல்வி முடிவாக இருக்காது. தேர்தலில் தோல்வியடைந்தால் பிகாரிலேயே தங்கி கட்சியின் அடிமட்ட இருப்பையும் நோக்கத்தையும் வலுப்படுத்துவதாக அவர் முன்னரே உறுதியளித்துள்ளார்.

ஜன் சுராஜ் நிலையான கள இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளூர் நிலையில் தலைமையை வளர்க்கவும், பல புதிய கட்சிகளைப் போல் "தேர்தலுக்குப் பிந்தைய செயலற்ற நிலையை" தவிர்க்கவும் முடிந்தால், அந்தக் கட்சி, படிப்படியாக தாங்கள் பெற்ற கவனத்தை செல்வாக்காக மாற்றும் என்று ராஜ் நம்புகிறார்.

"பிகாரின் அரசியல் சூழல் நிலையற்றது, பாரம்பரிய சாதிப் பற்று தொடரும் நிலையில், நம்பகமான மாற்றுகளுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. பிரசாந்த் கிஷோர் உத்தி ரீதியாக அல்லாமல் அரசியல் ரீதியாக முன்னணியில் இருந்து வழிநடத்தத் தேர்வுசெய்து, தேர்தலையும் தாண்டி அடிமட்ட ஈடுபாட்டைத் தொடர்ந்தால், ஜன் சுராஜ் 2030 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் அர்த்தமுள்ள தேர்தல் சக்தியாக மாறக்கூடும்" என்று அவர் கணிக்கிறார்.

பிகாரின் கிராமம் ஒன்றில் நிருபர் ஒருவரிடம் உள்ளூர் வாக்காளர் ஒருவர் கூறியது போல்: "அடுத்த தேர்தலில் மக்கள் [கிஷோருக்கு] ஆதரவளிக்கக் கூடும். இந்த முறை, அவர் தனது கால்களை ஊன்றியிருக்கிறார் - அவர் உடனடியாக உயரே பறக்கக்கூடிய சூப்பர் ஹீரோ அல்ல..."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு