உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி?

காணொளிக் குறிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென் ஆப்ரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி?

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது. இதற்கு முன்னதாக தென் ஆப்ரிக்கா கடந்த 1998ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிரோபி வென்றிருந்தது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் சுமார் 27 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஐசிசி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இடையிலான பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது.

டெம்பா பவுமா 2023ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான பின் 10 போட்டிகளில் அணியை வழிநடத்தி 9 போட்டிகளை வென்று, ஒரு போட்டியை ட்ரா செய்துள்ளார். இதில் இந்த இறுதிப் போட்டியும் அடங்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அதில் 8 போட்டிகளை வென்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதில் நியூசிலாந்து அணியுடன் 0-2 என்ற கணக்கில் ஒரு தொடரிலே தென் ஆப்ரிக்கா இரண்டு தோல்வியைச் சந்தித்து.

மறுபுறம் 19 போட்டிகளை விளையாடிய ஆஸ்திரேலியா அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பிறகு அவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இது அவர் தலைமையிலான அணி ஐசிசி இறுதிப்போட்டியில் சந்தித்த முதல் தோல்வி.

அதேபோல வேகப் பந்து வீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் பங்குபெறும் ஒரு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியைச் சந்திருக்கிறது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றை இவர்கள் இருந்த அணி வென்றிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு