You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றில் வீசும் சடலங்களின் துர்நாற்றம் - எப்படி இருக்கிறது மியான்மர்?
நிலநடுக்கம் தாக்கிய மியான்மரில் மீட்புப்பணிகளில் முன்னேற்றமில்லை. தொடரும் அதிர்வுகளால் தூங்க முடியாமல் தவிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் இடிபாடுகளுக்கிடையே இடையே மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். தமது அன்புக்குரியோர்களை இழந்தவர்கள் மற்றும் தமது உறவுகளின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில் உள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது. பெயரைச் சொல்லவிரும்பாத ஒரு பெண், அங்கே உணவுக்கும், பாதுகாப்பான தங்குமிடங்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகச் சொல்கிறார்.
சேதமடைந்த கட்டடங்களைச் சுற்றி சடலங்களின் துர்நாற்றம் காற்றில் வீசுகிறது. இடிபாடுகளில் இருந்து இன்னமும் பல உடல்கள் மீட்கப்படவில்லை.
இந்த கூடாரங்களில், சுமார் 50 மருத்துவ ஊழியர்கள், 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அருகிலேயே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இருந்தாலும், அதன் அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதுமாக நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளது. இதனால், மக்களை அங்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது.
மீட்புப் பணிகளில் ஈடுபட சர்வதேச குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு கிளர்ச்சிக் குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக ஐ.நா. மியான்மர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளது.
இந்த பேரழிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்கு இன்னும் பல நாட்கள் ஆகக்கூடும்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு