கரூரில் விசாரிக்கும் அருணா ஜெகதீசனின் 'ஸ்டெர்லைட்' விசாரணை அறிக்கை என்ன ஆனது?

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

அவர் ஞாயிற்றுக்கிழமை கரூரில் தனது விசாரணையை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அருணா ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அவர் 2015-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதிருந்த அதிமுக அரசு நியமித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ள எந்தவொரு அதிகாரி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சிலருக்கு பதவி உயர்வு கூட வழங்கப்பட்டதாகவும் செயற்பாட்டாளர் கூறுகின்றனர்.

''அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆணையம் குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கவில்லை'' என்கிறார் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் சார்பாக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் ரஜினி.

விசாரணை ஆணையம் என்ன கூறியது?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை, துப்பாக்கிச் சூடு நடந்த போது, மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.

இதில் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு டி.எஸ்.பி, மூன்று ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், எட்டு காவலர்கள், மூன்று தாசில்தார்கள் அடங்குவர்.

இவர்களே துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்று ஆணையத்தின் அறிக்கை கூறியது.

காவல்துறையினர் சார்பில் அத்துமீறல் நடைபெற்றிருப்பதாகவும், எனவே அதில் ஈடுபட்ட 17 காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் தவிர்த்து, அரசு மேலும் தலா ஒருவருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது.

அதிகாரிகள் மீது ஆணையம் சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன?

மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் வேண்டுமென்றே கலந்து கொள்ளவில்லை என்று ஆணைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம், "செயலின்மை, மெத்தனப்போக்கு, கடமையை புறக்கணிக்கும் போக்கு" இருந்ததாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியது.

காவல் ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் ஐபிஎஸ், அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்புண்டு என்று தகவல் தெரிந்த பின்னரும், தகுந்த உத்திகளை வகுக்கவில்லை என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்த மகேந்திரன், திருநெல்வேலி எஸ்.பி.யுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற முக்கியமான தருணத்தில் (மதியம் 1.15 மணி) அங்கிருந்து புறப்பட்டு, வேறு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும், அந்த நேரத்தில் தமிழர்கள் அல்லாத, சுற்றுவட்டாரப் பகுதிகளை நன்கு அறிந்திராத ஐஜி மற்றும் டிஐஜி-யை தனியே விட்டுச் சென்றனர் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் மீதான நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதில் அறிக்கையில் குறிப்பிட்ட 21 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்திருந்தது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, ஐஏஎஸ் அதிகாரி என்.வெங்கடேஷுக்கு எதிராக இந்தியக் குடிமைப் பணிகள் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) விதிகள் 10-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விளக்கம் அளித்திருந்த நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி தீரஜ் குமாரை விரிவான விசாரணை நடத்தும் அதிகாரியாக அரசு நியமித்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காவல் ஐஜி சைலேஷ் குமார், டிஐஜி கபில் குமார் சி சரட்கர், தூத்துக்குட்டி எஸ்.பி. பி.மகேந்திரன், டி.எஸ்.பி ஆர்.லிங்கதிருமாறன் ஆகியோரிடமிருந்தும் அறிக்கை வெளியான பிறகு, விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதங்களுக்கு இடையில் தங்கள் விளக்கங்களை சமர்ப்பித்துள்ளனர். அந்த விளக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், சிபிஐ விசாரணையை நடத்தியது.

காவல் ஆய்வாளர் திருமலை மீது மட்டும் இறுதி அறிக்கையில் சிபிஐ குற்றஞ்சாட்டியது.

துப்பாக்கிச் சூட்டில் பிரதானமாக ஈடுபட்ட கிரேட்-1 காவலர் அ. சுடலைக்கண்ணு, மற்றும் காவலர்கள் எம். சங்கர், சதீஷ்குமார் ஆகியோரும் அக்டோபர் 20-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் இவர்கள் மூவர் மீதும் தமிழ்நாடு காவல் பணி விதிகள் 1955-ன் (Tamil Nadu Police Subordinate Service (Discipline and Appeal) Rules, 1955) கீழ் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பணியிடை நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள், ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் என்.வெங்கடேஷ் உட்பட 21 பேர் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் என்.ஹரிஹரன் மற்றும் டி.பார்த்திபன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் உதவி ஆய்வாளர்கள் சொர்ணா மணி, எம்.ரென்னிஸ், காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, மதிவாணன், எம்.கண்ணன், அ.ராஜா ஆகியோர் மீது 1955 விதிகள் படி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

இவர்களை தவிர உதவி தாசில்தார்கள் இரண்டு பேர் உட்பட மூன்று வருவாய் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிரிமினல் நடவடிக்கை இல்லை

எனினும் ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ள எந்தவொரு அதிகாரி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், "அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்தவொரு காவல் அதிகாரி மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு எந்த உத்தரவும் வழங்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதமும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வழக்கு விசாரணையின் போது கொண்டுவரப்பட்டது.

இவை மனித உரிமை செயற்பாட்டாளர், பீபிள்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன் இந்த சம்பவம் தொடர்பாக தொடுத்த வழக்கின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டன.

"சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது தான் அரசு எடுத்த துறை ரீதியான நடவடிக்கை. ஒருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என்றார் ஹென்றி திபேன்.

"துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு கூறியது. ஆனால் யார் யார் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதன் நிலவரம் என்னவென்று அரசு எந்த விவரங்களையும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் அதில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டன" என்கிறார் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் சார்பாக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் ரஜினி.

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

என்.வெங்கடேஷ் ஐஏஎஸ் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் நிதித் துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஐ பி எஸ் அதிகாரிகளில் ஒருவரான சைலேஷ் குமார் தூத்துக்குடி சம்பவம் நடைபெறும் போது, தெற்கு மண்டல ஐஜியாக இருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார்.

2023-ஆம் ஆண்டு அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார், பிறகு அதே ஆண்டில், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த சைலேஷ் குமார் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே சிபிஐ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட திருமலையும் பிறகு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த பதவி உயர்வுகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் ரஜினி, "அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆணையம் குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நீதிமன்றத்தில் நிராகரித்து விட்டது. ஆணையம் குறிப்பிட்ட எந்தவொரு அதிகாரி மீதும்கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து பெயர் கூற விரும்பாத மூத்த அரசு அதிகாரி ஒருவர், ''விசாரணை ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அரசு ஏற்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே நடவடிக்கை எடுக்கவே இல்லை என்று கூற முடியாது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு