பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை பற்றி கூறியது என்ன?

திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படவில்லை என கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடைய திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், கோவில் நிர்வாகம் நீதிமன்றம் கூறிய தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கையும் விசாரித்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற 10 பேருக்கு அனுமதி அளித்ததுடன், அவர்களுக்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார். எனினும் தமிழகக் காவல்துறை அவர்களை அனுமதிக்கவில்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியது என்ன?

பாஜக கூறியது என்ன?

''திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டப் பிறகும், அதனை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததோடு, திரண்டிருந்த முருக பக்தர்கள் மீது திமுக அரசு தாக்கியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது'' என தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் .

பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பக்கத்தில், "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாக கடந்த பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்த உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றாமல் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயலும் மதவாத சக்திகள் திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத் தலத்தை வன்முறை களமாக மாற்றத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்." என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் அரசியல் ஆதாயம் அடைவதற்கு திருப்பரங்குன்றத்தில் சமூக அமைதியை கெடுக்க முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டு மக்களும் அதற்கு இடம் தர மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார் வைகோ.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், "கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில், அங்கு தீபம் ஏற்றுவதற்கு அனுமதித்தது மட்டுமின்றி நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை பாதுகாப்புக்கு நீதிபதி அனுப்பியுள்ளார். இது அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும்." என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன் எக்ஸ் பக்கத்தில், "திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றும் ஆன்மீக நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற சம்பவம் தமிழகத்தின் அமைதி, ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கு சூழலுக்கு சவாலாகும்.

ஆன்மீகத்தில் எப்போதும் அரசியல் கலக்கக்கூடாது, ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்ய நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், தன் எக்ஸ் பக்கத்தில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு கண்டனத்துக்குரியது." என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் அதிகாரபூர்வ கருத்தை தெரிவிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு