400 ஆண்டு தலைநகரை விட்டு, அடர்ந்த காட்டுக்குள் இந்த நாடு புதிய தலைநகரை நிர்மாணிப்பது ஏன்?

    • எழுதியவர், அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி
    • பதவி, பிபிசிக்காக ஜகார்த்தாவில் இருந்து

இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தா உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறியப்படுகிறது. எனவே அந்நாட்டு அரசாங்கம் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது.

புதிய தலைநகரம் ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் உருவாக்கப்பட்டு வருவதால் இது ஒரு துணிச்சலான திட்டமாக கருதப்படுகிறது.

அதிபர் ஜோகோ விடோடோவின் பதவி காலம் முடிவடையும் நிலையில் இந்த புதிய தலைநகரின் உருவாக்கம் அவரின் லட்சிய திட்டமாகவும் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாகவும் இருக்கும்.

முதலில் 2019 இல் அறிவிக்கப்பட்ட தலைநகர் கட்டமைக்கும் திட்டத்தின் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கியது. தற்போது கட்டுமானங்கள் நடந்து வருகிறது. விரைவில் அந்த தலைநகரம் அதன் குடியிருப்பாளர்களை வரவேற்க தயார் நிலையில் இருக்கும்.

"நுசந்தரா தலைநகரம் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு தளமாக பார்க்கப்படுகிறது. ​​ஒரு தலைநகரை புதிதாகக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் திறனும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்துவிடாது.” என்று கடந்த வாரம் புதிய நகரத்தில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதிபர் விடோடோ கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தோனீசீயாவில் 1600 களில் டச்சு காலனித்துவ காலத்திலிருந்து சுமார் 400 ஆண்டுகளாக நாட்டின் தலைநகராக இருந்த ஜகார்த்தா, தற்போது மக்கள் தொகை அதிகரித்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவிட்டது. உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் நகரமாகவும் மிகவும் மாசுபட்ட பகுதியாகவும் உருமாறி விட்டது. 10.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரத்தின் 40% இப்போது கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது.

நுசந்தரா ஒரு பசுமையான, உயர் தொழில்நுட்ப நகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இயற்கையான சூழல் நிறைந்த பகுதியில் நவீன பெருநகரத்தின் உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது. அதன் மொத்த பரப்பளவில் 60%, (நியூயார்க் நகரத்தின் இரு மடங்கு அளவு) நடைபாதைகள் மற்றும் பைக் டிராக்குகளுடன் கூடிய பசுமையான இடங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. பிபிசி சமீபத்தில் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பல மாதங்களாக இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் டிரக்குகளும் பெரிய ஜே.சி.பி. இயந்திரங்களும் சாலையில் தூசிகளைக் கிளறின.

தலைநகரைஉருவாக்கும் பணிகள் ஐந்து கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது, முதற்கட்ட பணிகள் இந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது முடிவடையும் என முன்னர் திட்டமிடப்பட்டது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த ஆண்டு இறுதியில் தான் முதல் கட்டம் முடிவடையும்.

"எல்லாம் சரியாக நடக்கிறது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்” என்று நுசந்தராவின் உள்கட்டமைப்பு மேலாளர் டேனிஸ் சுமதிலகா பிபிசியிடம் கூறினார். கிட்டத்தட்ட 90% முதற்கட்ட பணி முடிந்துவிட்டது என்று கூறினார்.

"நாங்கள் ஆகஸ்ட் மாதமே முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் செயல்படவில்லை. இது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும், நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் இதை செய்கிறோம்” என்று அவர் கூறினார்.

முழு நகரத்தையும் கட்டமைக்க 33 பில்லியன் டாலர் செலவாகும், அரசாங்கம் அந்த தொகையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே உறுதி செய்துள்ளது. மீதமுள்ள தொகையை தனியார் முதலீடு மூலம் திரட்ட போராடி வருகிறது.

முதலீட்டாளர்களை கவரும் வகையில், அதிபர் விடோடோ சமீபத்தில் 190 ஆண்டுகள் வரை நில உரிமை உள்ளிட்ட சலுகைகளை வழங்கினார்.

கடந்த ஆண்டில், அவர் நவம்பரில் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாடு உட்பட பல உலகத் தலைவர்களிடம் நுசந்தரா பற்றி குறிப்பிட்டு முதலீடுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்திடப்படவில்லை.

"நீங்கள் 80% தனியார் முதலீட்டை நம்பியிருப்பது பயமாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் பொருளாதார சாத்தியத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் கருத்தில் கொள்வார்கள். கட்டுமானங்களை நீங்கள் பாதியில் நிறுத்தும் சூழல் உருவாக கூடாது ” என்று மோனாஷ் பல்கலைக் கழகத்தின் நகர்ப்புற வடிவமைப்பில் இணைப் பேராசிரியரான ஏகா பெர்மனாசரி கூறினார்.

நுசந்தரா ஆணையத்தின் திட்டமிடல் மற்றும் முதலீட்டின் துணைத் தலைவரான அகுங் விகாக்சோனோ, பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகக் கூறினார். சிலர் தற்போது நகரின் பல்வேறு சூழல்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.

"முதலீட்டாளர்களை பொருத்தவரை நகரின் உள்கட்டமைப்பு தயாராக உள்ளது என்று நம்பிக்கையை பெற விரும்புகிறார்கள், மக்கள் தொகையை அவர்கள் லாப நோக்கத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் முதலீடு செய்ய யோசிக்கவில்லை. அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ” என்று விகாக்சோனோ கூறினார்.

அவரது குழு தற்போது ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எதிர்கால முதலீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து, சாத்தியமான முதலீட்டாளர்களுடன் அபாயத்தை பகிர்ந்து கொள்ளும்.

காட்டுப்பகுதியில் உயர் தொழில்நுட்பம்

புதிய தலைநகரம் ஜாவா தீவில் அமைந்துள்ள ஜகார்த்தாவிலிருந்து 12,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது போர்னியோவில் கிழக்கு கலிமந்தனில் உள்ள காட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்த பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வரைபடத்தில், நுசந்தரா இந்தோனீசியாவின் புவியியல் மையத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது. ஜகார்த்தா மற்றும் ஜாவாவிலிருந்து தொலைவில் உள்ள பெரிய தீவுக்கூட்டத்தில் (இந்தோனீசியா 17,500 தீவுகளால் ஆனது) செல்வம் மற்றும் வளங்களை மறுபங்கீடு செய்ய உதவும் நோக்கத்துடன் அதன் இருப்பிடம் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தோனீசியாவின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜாவா, தேசிய பொருளாதாரத்தில் சுமார் 60% வரை பங்களிக்கிறது.

"நாட்டின் பெரும்பாலான வளர்ச்சி ஜாவாவை சார்ந்துள்ளது. எனவே, தலைநகரை வேறு இடத்திற்கு மாற்றுவது மற்றும் ஜாவாவிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரே பகுதியை சார்ந்திருக்கும் சூழலை மாற்றும் . இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்." என்று நகர்ப்புற நிபுணர் ஏகா பெர்மனாசரி கூறினார்.

இந்த மெகா திட்டம் சுமார் 1,000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கியது. ஜகார்த்தாவை விட நான்கு மடங்கு மற்றும் நியூயார்க் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது.

புதிய நகரத்துக்கான திட்டம் முன்மொழியப்பட்டத்தில் இருந்தே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். நகரத்தை கட்டமைப்பது சுற்றுச்சூழலை சீர்குலைத்து, ஒராங்குட்டான்கள் மற்றும் நீண்ட மூக்கு குரங்குகள் போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளின் வாழ்விடத்தை மேலும் சுருக்கிவிடும் என்று அவர்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அரசாங்கம் இந்த கூற்றுகளை நிராகரித்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு தொழிற்துறை யூகலிப்டஸ் தோட்டமாக இருந்த நிலத்தில் தான் நுசந்தரா கட்டப்படுகிறது என்று வாதிட்டது. ஆனால் காட்டு பகுதியை அழிப்பது நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய நகரம் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் என்றும், `ஸ்மார்ட் கழிவு மேலாண்மை’ வசதியுடன் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மின்சார வாகனங்களை பிரத்யேகமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2045 இல் முழு கட்டுமானங்கள் நிறைவடைவதற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அடையப்பட்டால், இந்தோனீசியாவின் தேசிய இலக்கை விட 15 ஆண்டுகளுக்கு முன்னதாக சுற்றுச்சூழல் இலக்கை அடையும்.

புதிய நகரத்தில் குடியேறும் மக்களின் கருத்து

நுசந்தராவின் எதிர்கால குடியிருப்பாளர்கள் உட்பட இந்தோனீசியர்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த நிர்வாக தலைநகரமானது 2045 ஆம் ஆண்டுக்குள் 1.9 மில்லியன் மக்களைக் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினராக தான் இருப்பார்கள். முதல் குழு, சுமார் 10,000 அரசு ஊழியர்கள், செப்டம்பரில் நுசந்தராவுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில அரசு ஊழியர்கள், பெயர் குறிப்பிடாமல் பிபிசியுடன் பேச ஒப்புக்கொண்டனர், தங்கள் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

“நகரின் உள்கட்டமைப்பு இன்னும் தயாராகவில்லை. எனது குழந்தையை நான் எங்கே பள்ளிக்கு அனுப்புவேன்? அவர்களுக்கான வசதிகள் உள்ளனவா, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதா?” என்று ஒரு குழந்தையின் தந்தை பிபிசியிடம் கூறினார்.

மற்றொரு அரசு ஊழியர் தரை தளத்தில் வசிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். மற்ற தனி நபர்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறார். நுசந்தராவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டடங்களில் தற்போது மூன்று படுக்கையறைகள் மட்டுமே உள்ளன, எனவே குடும்பம் இல்லாதவர்கள் மற்ற தனி நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நுசந்தராவைச் சுற்றி வசிக்கும் பழங்குடியின மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். நகரின் வளர்ச்சிப் பணிக்காக ஏற்கனவே அரசாங்க மண்டலத்திற்கு அருகில் வசித்து வந்த கிட்டத்தட்ட 100 மக்களை வேறு இடத்தில் குடியமர்த்தி உள்ளனர். சுங்கச்சாவடிகள் மற்றும் புத்தம் புதிய விமான நிலையத்தின் கட்டுமானம் மேலும் பழங்குடிகள் இடம்பெயரும் சூழல் ஏற்படலாம் என்னும் அச்சத்தை எழுப்பியுள்ளது.

அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பாண்டி, நகரமயமாக்கல் தனது கலாசார அடையாளத்தை அழித்துவிடும் என்று கவலைப்படுகிறார். 2019 இல் தலைநகரின் இடமாற்றம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நுசந்தரா அமைந்துள்ள பெனாஜாம் பாசர் ரீஜென்சி, நிலையான மக்கள் தொகை அதிகரிப்பைக் கண்டுள்ளது.

“எங்கள் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதாகவும் அவர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால் இவை வெற்று வாக்குறுதிகளாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன், மேலும் நாங்கள் எங்கள் வீடுகளை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறோம்” என்று அவர் கூறினார்.

ஏகா பெர்மனாசாரியின் கூற்றுப்படி, இது மற்றொரு விமர்சனப் புள்ளியாக உள்ளது. உயர் தொழில்நுட்ப நுசந்தராவின் வடிவமைப்பு காட்டு பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களை புறக்கணிக்கும் அதே வேளையில் உயரடுக்கினருக்கான பிரத்யேக நகரத்தை உருவாக்கலாம்.

“அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மாறுவார்கள். அவர்கள் இந்த இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தொழில்நுட்ப கட்டிடங்களையும் மக்களையும் பார்க்கிறார்கள். நீங்கள் மிகவும் தனித்துவமான ஒரு நகரத்தை உருவாக்கும் போது, ​​​​அது ஜகார்த்தாவைப் போலவே ஒரு சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும்,”என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)