You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இறுதிப் போட்டியில் 'ஆட்ட நாயகி' ஆன ஷெஃபாலி, சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் ஆவார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, "சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினீர்கள். இன்று அவர் பால்கனியில் நின்று உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்று ஷெஃபாலியிடம் கேட்கப்பட்டது.
"இது எனக்கு மிகவும் மறக்க முடியாத தருணம். சச்சின் சாரை நான் பார்த்தபோது, எனக்குள் ஒரு வித்தியாசமான உற்சாகத்தை உணர்ந்தேன். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். அவர் எப்போதும் எனக்கு நம்பிக்கையை நிரப்புகிறார். அவர் ஒரு ஜாம்பவான், கிரிக்கெட்டின் மாஸ்டர். அவருடன் பேசுவது எனக்கு நிறைய உத்வேகத்தைத் தருகிறது. அவரைப் பார்ப்பது எனக்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது." என்று ஷெஃபாலி கூறினார்.
இறுதிப் போட்டியில் ஷெஃபாலி 87 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்ற உதவினார்.
இந்த உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் ஷெஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக, தொடருக்கு நடுவேதான் அவர் இந்திய அணியில் இணைந்தார்.
"கடவுள் என்னை இங்கு நல்லதைச் செய்ய அனுப்பினார் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன், இன்று அது உண்மையாகிவிட்டது. இறுதியாக உலகக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது."என்றார் ஷெஃபாலி.
உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து நேரடியாக உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளுக்கு மாறுவதில் என்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது.
"அது கடினமாக இருந்தது, ஆனால் நான் அமைதியாக இருந்தால், என்னால் எதையும் செய்ய முடியும் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், சகோதரர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இன்று என் சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது, என் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்தேன். அந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர்.
சச்சின், கோலி பாராட்டு
மகளிர் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய அணியை புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பாராட்டியுள்ளனர்.
1983 உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி பெற்ற வெற்றி ஒரு முழு தலைமுறையையும் பெரிய கனவுகளைக் காணவும் அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
"இன்று நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச் சாதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் மட்டை மற்றும் பந்தை கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களும் ஒரு நாள் கோப்பையை உயர்த்த முடியும் என்று நம்பவும் நமது மகளிர் கிரிக்கெட் அணியினர் ஊக்கமளித்துள்ளனர்."
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ், டீம் இந்தியா. நீங்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று சச்சின் கூறினார்.
இந்த வெற்றி வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் தரும் என்று விராட் கோலி கூறினார்.
"உங்கள் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால் நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள். இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் அணிக்கு வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்." என்று கோலி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்களும் பிரபலங்களும் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்று அவர்கள் வரலாறு படைத்துள்ளனர்" என்று முர்மு கூறியுள்ளார்.
"அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது, இன்று அவர்களின் திறமை மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு இந்த முடிவு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் பெண்கள் கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும். பெண்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியதற்கு நான் பாராட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அற்புதமான வெற்றி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வீராங்கனைகளின் செயல்திறன் சிறந்த திறமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோதி கூறினார்.
இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல்வாதிகள் தவிர, சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ.51 கோடி பரிசு
உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 51 கோடி பரிசளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்தார்.
உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.
தேவஜித் சைகியா பேசுகையில், "உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, பரிசுத் தொகையை 3.88 மில்லியன் டாலரிலிருந்து 14 மில்லியன் டாலராக (சுமார் ரூ.124 கோடி) உயர்த்தியதற்காக ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், இது அசல் பரிசுத் தொகையில் இருந்து 300 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்" என்றார்.
"வீராங்கனைகளின் சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ ரூ.51 கோடியை வெகுமதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு