காணொளி: ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறிய யுஏஇ - இந்தியாவுக்கு என்ன லாபம்?

காணொளிக் குறிப்பு, காணொளி: ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறிய யுஏஇ - இந்தியாவுக்கு என்ன லாபம்?
காணொளி: ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறிய யுஏஇ - இந்தியாவுக்கு என்ன லாபம்?

இரான் போர் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தது.

ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும், உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.

ஒபெக்-இல் இருந்து விலகுவதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இனி அது உற்பத்தி செய்யக்கூடிய எண்ணெயின் அளவு குறித்த இந்த அமைப்பின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. நாட்டின் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறி உள்ளது.

அதே நேரம் இந்த முடிவு இந்தியாவுக்கு பலனளிக்க கூடும் என சில வல்லுநர்கள் கூறுகின்றனர். உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த முடிவு இந்தியாவுக்கு பலனளிக்குமா?

இரான் போர் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ள சூழலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த முடிவு வந்துள்ளது. மேலும், ஒபெக்கின் முக்கியத் தலைமையாக கருதப்படும் சௌதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் காலகட்டத்தில் இது நிகழ்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுன் முடிவு குறித்து கூறும் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் வியூக ஆய்வுகள் திட்ட துணை இயக்குநர் விவேக் மிஸ்ரா, அதிகளவு எரிசக்தி தேவைப்படும் இந்தியாவை போன்ற ஒரு நாட்டிற்கு, இந்த முடிவு நல்ல செய்தியாக இருக்கலாம், இருப்பினும் அதை இப்போதே உறுதியாக கூறுவது முன்கூட்டியே கணிப்பதாக இருக்கும் என்கிறார்.

தொடர்ந்து விளக்கிய அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் ஒரு வலுவான கூட்டாளி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5 முதல் 6 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கச்சா எண்ணெய் நுகர்வோராகவும் வியூகக் கூட்டாளிகளாகவும் இருக்கும் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தி என்றார்.

பிப்ரவரி 2026 நிலவரப்படி, இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 91 சதவிகிதத்தை இறக்குமதி செய்தது. இதில், சுமார் 54% எண்ணெய் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீண்ட காலமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 10 சதவிகிதத்தை அது வழங்குகிறது.

இது பற்றி கூறும் டெல்லியில் உள்ள மத்திய கிழக்கு இன்ஸிடியூட்டின் ஆய்வாளரான மீனா சிங் ராய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் வியூக ரீதியான கூட்டாளி. அவர்கள் தற்போது ஒபெக்கின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்பதால் தங்கள் சொந்த உற்பத்தியை அதிகரித்தால், கூடுதல் எண்ணெயை வழங்குவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும்" என்றார்.

எளிதாகக் கூறினால், ஒபெக்கில் இருந்து வெளியேறிய பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக எண்ணெயை சுதந்திரமாக உற்பத்தி செய்தால், அதிகளவு எண்ணெய் தேவைப்படும் இந்தியா போன்ற நாடுகள், சிறந்த விநியோகம் மற்றும் நிலையான விலைகள் மூலமாகப் பயனடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகுவதால் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் வரை எந்த உடனடித் தாக்கமும் ஏற்படாது என விவேக் மிஸ்ரா கூறுகிறார்.

உலகின் முக்கிய கடல்வழி வர்த்தக பாதையாக உள்ள ஹோர்மூஸை இரான் தற்போது கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் தற்போது அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளைமேட் டிரெண்ட்ஸ் அமைப்பின் நிறுவனரான ஆர்த்தி கோஸ்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்கில் இருந்து விலகுவது எண்ணெய் விலைகளைக் குறைக்க கூடும் என்கிறார்.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இந்தியா பரந்த அளவிலான வர்த்தக கூட்டணியை கொண்டுள்ளதால், இந்த மாற்றம் இந்தியாவிற்கு நிவாரணம் அளிக்கக்கூடும். நிலையான விநியோகம், விலை குறைவு மட்டுமின்றி, தற்போதைக்கு இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் இது தணிக்கவல்லது'' என்கிறார் ஆர்த்தி கோஸ்லா.

ஒபெக் அமைப்பு, இரான், இராக், குவைத், சௌதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளால் 1960ஆம் ஆண்டு செப்டம்பரில் இராக்கின் பாக்தாத்தில் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், மேலும் பல நாடுகள் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 12 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக மாறியது.

இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின்படி, OPEC நாடுகள் உலகின் கச்சா எண்ணெயில் 35 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு