சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வர என்ன காரணம்? ஆய்வில் புதிய தகவல்

    • எழுதியவர், அவதார் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சிந்து சமவெளி நாகரிகம் எப்போது, எப்படி முடிவுக்கு வந்தது என்பது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆய்வு ஒன்று, 'ஹரப்பாவின் வீழ்ச்சி என்பது பேரழிவு ஏற்படுத்திய ஒரு நிகழ்வால் ஏற்படவில்லை, மாறாக தொடர்ச்சியான மற்றும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நீடித்த வறட்சியால் நிகழ்ந்தது," எனத் தெரிவித்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு தொடர்பாகப் பல்வேறு கோட்பாடுகள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், போரினால் ஏற்பட்ட அழிவு, இயற்கைப் பேரழிவுகளால் நகரம் உருக்குலைந்தது, சிந்து நதியில் வெள்ளம் ஏற்பட்டு அதன் போக்கை மாற்றியது எனப் பலவும் அடங்கும்.

அதேநேரத்தில் காக்கர் என்கிற நதி வற்றி அதன் அருகில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்கிற கோட்பாடும் உள்ளது.

சமீபத்தில் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மன்ட் என்கிற இயற்கை தொடர்பான ஆய்விதழில் ஓர் ஆய்வு வெளியானது. இந்த ஆய்வை ஐஐடி காந்திநகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு மேற்கொண்டுள்ளது. 'ஹரப்பாவின் உருமாற்றத்திற்கு வித்திட்ட நதி வறட்சி' என அந்த ஆய்வுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, வேளாண்மை, வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புக்கான நிலையான ஆதாரமாக விளங்கிய சிந்து நதி, இந்த நாகரிகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது. இந்த நாகரிகம், கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளைச் சுற்றி செழித்து வளர்ந்து பரிணமித்தது.

ஹரப்பா காலகட்டத்தில் (4500-3900 ஆண்டுகளுக்கு முன்பு), சிந்து சமவெளி நாகரிகம் நன்றாகத் திட்டமிடப்பட்ட நகரங்கள், சிறந்த நீர் மேலாண்மை அமைப்புகள், மேம்பட்ட எழுத்து ஆகியவற்றால் அறியப்பட்டது. ஆனால் 3,900 ஆண்டுகளுக்கு முன்பு சரிவைச் சந்திக்கத் தொடங்கிய ஹரப்பா நாகரிகம் இறுதியில் இல்லாமல் போய்விட்டது.

இந்த நாகரிகம், தற்போதைய பாகிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்தது.

ஆய்வு வெளிப்படுத்தியது என்ன?

ஹரப்பா காலத்தின் தொடக்கத்தில், சிந்து சமவெளி நாகரிகம் நான்கு முக்கிய வறட்சிகளைச் சந்தித்ததாக 11 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஹரப்பா காலகட்டத்தின் உச்சம் மற்றும் இறுதியில் ஏற்பட்ட நான்கு முக்கியமான வறட்சியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்," என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, "மூன்று முக்கியமான வறட்சி, 4445-4358 ஆண்டுகளுக்கு முன்பு, 4122-4021 ஆண்டுகளுக்கு முன்பு, 3826-3663 ஆண்டுகளுக்கு முன்பு ஆகிய காலகட்டங்களில் ஏற்பட்டுள்ளன. நான்காவது வறட்சி 3531-3418 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதில் மூன்று வறட்சிகள் 85 சதவிகித நாகரிகத்தைப் பாதித்தன" என்று ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.

இந்த நான்கு வறட்சிகளிலும் மிகவும் தீவிரமானவையாக இருந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வறட்சிகள், முறையே 102 மற்றும் 164 ஆண்டுகள் நீடித்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.

மேலும், "மூன்றாவது வறட்சியில் வருடாந்திர மழைப்பொழிவு 13% வரை குறைந்திருந்தது."

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக சுற்றுச்சூழல் பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பிற ஆய்வுகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என அதன் முதன்மை ஆசிரியரும் முனைவர் ஆய்வு மாணவருமான ஹிரேன் சோலங்கி விவரித்தார்.

"இதற்கு முன்னரும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் களத்திற்குச் சென்று மண் மற்றும் பழைய மரங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தனர். அந்தத் தரவுகள் மழைப்பொழிவு குறைவாக இருந்ததா அல்லது அதிகமாக இருந்ததா என்பதைக் காட்டியது. இந்த ஆய்வுகள் மழைப்பொழிவின் அளவைக் காட்டின. ஆனால் நாங்கள் மழைப்பொழிவு எத்தனை சதவிகிதம் குறைவாக இருந்தது, வறட்சி எப்போதெல்லாம் இருந்தது, அதன் காலகட்டம் என்ன என்பனவற்றைக் கண்டுபிடித்துள்ளோம்."

வறட்சி எவ்வாறு சிந்து சமவெளி நாகரிகத்தை மாற்றியது என்பதை விளக்கிய ஹிரேன் சோலங்கி, "தொடக்கத்தில் ஹரப்பா நாகரிகம் மேற்குப் பகுதியில் இருந்தது. வறட்சி ஏற்பட ஏற்பட அது மெல்ல நகர்ந்து சிந்து நதியின் பக்கமாக வந்தது" என்றார்.

"அதன் பின்னர் மத்திய பகுதி, அதாவது சிந்து சமவெளி பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் மக்கள் சௌராஷ்டிரா (குஜராத்) பக்கமும் நதிகள் கீழ்நோக்கிப் பாயும் கீழ் இமயமலை பக்கமும் சென்றனர்" எனக் கூறுகிறார் ஹிரேன்.

"சிந்து சமவெளி நாகரிகம் ஒரே அடியாகச் சரிந்தது எனப் பல கதைகள் கூறப்பட்டு வந்த நிலையில் அவ்வாறு நடக்கவில்லை என்பதையும் பல நூறு ஆண்டுகள் நீடித்த வறட்சியால்தான் அது நடந்தது என்பதையும் எங்கள் ஆய்வில் காண்பித்துள்ளோம்" என்கிறார் இணை ஆசிரியரான பேராசிரியர் விமல் மிஸ்ரா.

"இந்த வறட்சிகள் நீண்ட காலம் நீடித்தன. சராசரியாக ஒரு வறட்சி 85 ஆண்டுகள் நிலைத்தது. ஆனால் சில வறட்சிகள் 100 ஆண்டுகள், 120 ஆண்டுகள்கூட நீடித்தன," என்று விமல் மிஸ்ரா விளக்கினார்.

முதல் முறையாக நதியின் ஓட்டத்தை ஆராய்ந்துள்ளோம் எனக் கூறிய அவர், "பெரும்பாலான முந்தைய ஆய்வுகள் விரிவாக இல்லாத தரவுகள் மற்றும் குகை அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டன. எங்கள் ஆய்வில் நீர் பாய்ந்த இடங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை ஆராய்ந்தோம். இதனுடன் இடப்பெயர்வும் கணக்கில் கொள்ளப்பட்டது" என்றார்.

'அதிகரித்த வெப்பத்தால் தண்ணீர் பற்றாக்குறை'

இந்த ஆய்வில், சிந்து சமவெளி நாகரிகம் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் காலநிலை தரவுகள் மற்றும் நீரியல் மாதிரிகளை இணைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீடித்த வறட்சிக் காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் வெப்பநிலை 0.5 டிகிரி வரை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் விளைவாக தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் தீவிரமானது.

அதுகுறித்து விளக்கிய ஹிரேன் சோலங்கி, "அந்தக் காலகட்டத்தில் வெப்பம் அதிகரித்ததை நாங்கள் கண்டறிந்தோம். அதனால் நதிகளுக்கு நீராதாரமாக இருக்க வேண்டிய பனிப்பாறைகள் உருகின. நீரின் இருப்பு குறைந்ததால் மக்கள் இமயமலையை நோக்கி நகர்ந்தனர்.

மறுபுறம், பிற இடங்களைக் காட்டிலும் சௌராஷ்டிராவில் மழைப்பொழிவு சிறப்பாக இருந்ததே அங்கு மக்கள் இடம் பெயர்ந்ததற்கான காரணம். அதோடு அங்கு வர்த்தகத் தொடர்புகளும் இருந்தன" என்றார்.

"அந்த இடம் முற்றிலுமாகக் காணாமல் போனது என்று நாங்கள் கூறவில்லை. காலநிலை மாற்றத்திற்கு தகவமைத்துக் கொள்ள, மக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம் பெயரத் தொடங்கினார்கள்," என்கிறார் ஹிரேன் சோலங்கி.

வேளாண் பயிர்களை மாற்றிய மக்கள்

பருவமழை பொய்த்த காரணத்தாலும் நதியில் நீரோட்டம் குறைந்ததாலும் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வின்படி, 'மக்கள் கோதுமை, பார்லி பயிர்களில் இருந்து' மற்ற பயிர்களுக்கு மாறினர். தண்ணீர் குறைந்ததால் ஹரப்பாவில் வாழ்ந்த மக்கள் குறைவான தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாற வேண்டியதாயிற்று.

பேராசிரியர் விமல் மிஷ்ராவின் கூற்றுப்படி, குளிர்கால மழை வறட்சியின் பாதிப்பைப் பெரும்பாலும் குறைத்தது. ஆனால், "பிற்காலத்தில் அந்த மழையும் பொய்த்த காரணத்தால் மத்திய பகுதிகளில் வேளாண்மைக்கு இருந்த கடைசி ஆதரவும் முடிவுக்கு வந்தது" என்கிறார் அவர்.

"மக்கள் வேளாண்மை முறையை மாற்றத் தொடங்கினர். அவர்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்கும் சிறுதானியங்களை பயிரிடத் தொடங்கினர்," என்கிறார் ஹிரேன்.

வறட்சியின் தொடக்க காலத்தில் மக்கள் இந்த உத்தியைக் கையாண்டதாகக் குறிப்பிடுகிறார் அவர். "வறட்சி தீவிரமடைந்து தண்ணீர் குறையத் தொடங்கியபோது இந்த வேளாண்மை பெருநகரங்களில் இருந்து சிறு நகரங்களை நோக்கி நகர்ந்தது. அதாவது மக்கள் சிறிய ஊர்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர்."

சிந்து சமவெளி நாகரிகத்தில் நிர்வாகத்தின் பங்கு என்ன?

சிந்து சமவெளி நாகரிகம் சிறந்த திட்டமிடலுக்குப் பெயர் போனது. இந்தச் சூழலில் வறட்சிக் காலத்தில் நிர்வாகத்தின் பங்கு என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

இதை விளக்கிப் பேசிய ஹிரென், "வறட்சி அனைத்து இடங்களிலும் இருந்தாலும், நிர்வாக அமைப்பு சிறப்பாக இருந்த இடங்களில் மக்கள் இடம்பெயராமல் தங்க முடிந்தது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது வறட்சி தாக்கியபோது மக்கள் வேறு இடங்களை நோக்கி நகரத் தொடங்கினர்," என்றார்.

அவரது கூற்றுப்படி, "ஹரப்பா நாகரிகம் எவ்வாறு ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடம் நோக்கி நகர்ந்தது என்பதைப் பார்த்தோம். அது அழிவைச் சந்தித்ததன் காரணம் என்னவென்பதைப் பார்த்தோம். ஆனால் அவை அழிந்தமைக்கு சுற்றுச்சூழல் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. வறட்சி தவிர வேறு காரணங்களும் உள்ளன."

அணைகள், நதிகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய நெட்வொர்க் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஹிமான்ஷு தாக்கர், "இந்த ஆய்வு பல தசாப்தங்களாக நடைபெற்ற ஓர் இயற்கை நிகழ்வைப் பற்றி பேசுகிறது" என்றார்.

அதோடு அவர், "இன்று நமது நிலத்தடி நீர், நதிகள் மற்றும் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அப்போது நிகழ்ந்தவை இயற்கையானது, ஆனால் இன்று நடப்பவை அனைத்துக்கும் காரணம் மனிதர்களே. இது மிகவும் ஆபத்தானது," என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு