ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன்; யார் சிறந்தவர்? - அறிவியல் சொல்வது என்ன?

    • எழுதியவர், ரெடாசியான்
    • பதவி, பிபிசி முண்டோ

"ஒரு ரயிலை விட வலிமையானவர்! தோட்டாவை விட வேகமானவர்! ஒரே பாய்ச்சலில் உயரமான கட்டிடங்களைத் தாண்டுபவர்!"

திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் காமிக் புத்தகங்கள், மனிதகுலத்தைப் பாதுகாக்கும் தங்களது முடிவில்லா பணியில் பல்வேறு சூப்பர்ஹீரோக்களின் நம்பமுடியாத சாதனைகளை நமக்குக் காட்டுகின்றன.

பார்வையாளர்களாகவும், வாசகர்களாகவும், சூப்பர்மேன், ஃபிளாஷ் அல்லது பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் ஆற்றல்களின் சாத்தியக்கூறுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், அவை அறிவியலின் ஆய்வுக்கு உட்படுமா? அப்படி உட்பட்டால், யாருக்கு சிறந்த ஆற்றல்கள் உள்ளன?

அறிவியல் கோட்பாடுகளின் பயன்பாடு

மத்திய இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகம், அதன் இயற்பியல் மற்றும் பல்துறை அறிவியல் திட்டத்தில் ஒரு பிரிவை இணைத்துள்ளது. இதன் மூலம், மாணவர்கள் பிரபலமான கலாசாரத்திலும் அன்றாட வாழ்விலும் காணப்படும் நிகழ்வுகளுக்கு அறிவியல் கோட்பாடுகளைப் பொருத்தி தங்கள் சொந்த ஆய்வுகளை வழங்குகிறார்கள்.

பரந்த அளவிலான தலைப்புகளில், சூப்பர்ஹீரோக்களின் ஆற்றல்கள் குறித்த பகுப்பாய்வுகளும் அடங்கும். இதில், குண்டுகளைத் தடுக்க சூப்பர்மேனின் தோலுக்குத் தேவையான தடிமன் முதல், ஒரு கட்டடத்திலிருந்து மற்றொன்றுக்கு தாவ ஸ்பைடர்மேனின் வலைக்குத் தேவையான வலிமை வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மேலோட்டமாகத் தோன்றினாலும், இதற்கு ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் விளக்கமளித்தது.

அறிவியல் கோட்பாடுகளை வாழ்க்கையின் பல அம்சங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுவதன் மூலம், அறிவியலின் மதிப்பு மற்றும் ஈர்ப்பை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

"மாணவர்கள் பரந்த அளவிலான பார்வையாளர்களிடம் அறிவியலைப்பற்றி பேசும் அளவுக்கு திறனைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று பல்துறை அறிவியல் மையத்தின் (the Center for Interdisciplinary Science) இயற்பியல் பேராசிரியர் டாக்டர் செரில் ஹர்கெட் கூறினார்.

இந்த அமைப்பு குழுவாக பணியாற்றுவதை ஊக்குவிக்கிறது, மேலும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் வாழ்க்கையைத் தொடரத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சிகளின் தாக்கத்தை அளவிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய மதிப்புமிக்க கண்ணோட்டத்தை இந்த பிரிவு வழங்குகிறது. இது நிதி பெறுவதில் ஒரு முக்கிய காரணியாகும்.

இந்த புதிய ஆய்வுகளில் நம் அன்புக்குரிய சூப்பர்ஹீரோக்கள் பற்றி என்ன முடிவு கிடைத்தது? இங்கே ஐந்து முடிவுகள் உள்ளன:

சூப்பர்மேன்

சூப்பர்மேனின் செல்கள், நமது "மஞ்சள்" சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சால் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், அவர் ஒரு புதுப்பிக்கத்தக்க சூரிய மின்கலன். எனவே, அவரது சக்தி, சூரிய ஒளி கிடைப்பதைப் பொறுத்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

அவரது ஆற்றல் வெளிப்பாடுகள், ஆற்றல் பாதுகாப்பு விதிக்கு(law of conservation of energy ) உட்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்தது. விதிக்கு உட்படாவிட்டால், ஆற்றல் வெளிப்பாடு ஒரு அணுகுண்டை விட அதிக தீவிரமாக இருக்கும்.

காமிக் புத்தகங்களில், சூப்பர்மேனால் ஒரு நிலையான உயரத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்க முடியும். ஆனால், அவர் ஒரு மின்கலன் போல ஆற்றலை உறிஞ்சுவதாக எடுத்துக்கொண்டால், சீராக பறப்பதற்கு போதுமான ஆற்றலை சூரியனிடமிருந்து அவரால் சேகரிக்க முடியாது. எனவே, அவர் ஆற்றல் பாதுகாப்பு விதிக்கு உட்பட்டவர் இல்லை என்ற முடிவு வருகிறது. 8

மற்றொரு நேர்மறையான அம்சம், அவரது மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உடலால் குண்டுகளைத் தடுக்கும் திறன் ஆகும். கோட்பாட்டின்படி, இது சாதாரண தசை அடர்த்தியை விட அதிகமாக இருப்பதால் (1.48 கிராம்/கன சென்டிமீட்டர்) சாத்தியமாகும்.

ஆயினும், ஒரு சாதாரண துப்பாக்கியில் இருந்து வரும் 50% குண்டுகளைத் தடுக்க, அவருக்கு 296 கிராம்/கன சென்டிமீட்டர் என்ற நம்ப முடியாத தசை அடர்த்தி தேவைப்படும். இது ஒரு வேற்று கிரகவாசிக்கு கூட மிகவும் அதிகம் என்று அறிவியல் பகுப்பாய்வு முடிவு செய்கிறது.

ஃபிளாஷ்

அவரது நேர்மறையான அம்சங்கள் அவரது அதிக வேகம், முடுக்கிவிடப்பட்ட வளர்சிதை மாற்றம் மற்றும் அதிக மீளுருவாக்கத் திறன் ஆகும்.

மனித செல்களை விட மிக வேகமாகப் பிரியக்கூடிய பாக்டீரியா செல்களின் அடிப்படையில் அவர் அமைந்திருந்தால் இவை அனைத்தும் சாத்தியமாக இருக்கும்.

இருப்பினும், மனித பிறழ்வு விகிதத்தின்படி கணக்கிட்டால், ஒரு ஆண்டில் ஃபிளாஷ் 72 வருட பிறழ்வுகளுக்குச் சமமான பிறழ்வுகளை எதிர்கொள்வார், இது 25 வயதுடைய ஒருவருக்கு மிக அதிகமாகும்.

இதில் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது, ஆனால் அவரது அதிக மீளுருவாக்கத் திறன் அதை எதிர்கொள்ள உதவும்.

ஃபிளாஷின் உடனடி வேகத்தில் உள்ள ஒரு பிரச்சனை, அவர் காப்பாற்றும் நபர்கள் அந்த வேகத்தில் அவரைத் தொட்டால், அவர்கள் அபாயத்தை எதிர்கொள்வார்கள் என்பதுதான்.

அயர்ன் மேன்

திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், இந்த சூப்பர்ஹீரோ, பெரும் தாக்கத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கக் கூடிய ஒரு கவச உடையை அணிந்த ஒரு மனிதர்

குண்டின் தாக்கத்தால் வெளியாகும் ஆற்றலை இந்த கவசம், ஒரு காரின் பம்பரைப் போல் உறிஞ்சிக்கொள்கிறது.

ஆனால் அவரை தாக்கும் ஆயுதம் ஒரு பெரிய, வெடிக்கும் அல்லது ஊடுருவும் எறிகணையாக இருக்க முடியாது.

அறிவியல் பகுப்பாய்வின்படி, அத்தகைய தாக்குதல்களைத் தாங்க கவசம் 3 மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும்.

அயர்ன் மேன், ஹசியோவைப் (hassio) போன்ற ஒரு கற்பனை ஐசோடோப்பான "விப்ரானியத்தால்" (vibranium) இயங்கும் அணு உலை மூலம் உயிரோடு இருக்கிறார். இது நிலையானது, ஆனால் அதன் செல்லுபடியாகும் திறன் மற்றும் செயல்பாட்டுக்கு எந்த உத்தரவாதம் இல்லை.

ஸ்பைடர்மேன்

அவரது பெரிய திறன் அதிக வேகத்தில் ஊசலாடுவது ஆகும். 2013ஆம் ஆண்டு ஆய்வின்படி, அது மணிக்கு 109.91 கிமீ ஆகும்.

அவரது வலையின் வலிமை, டார்வினின் கருப்பு சிலந்தியின் வலையின் வலிமைக்கு ஒத்திருக்கிறது. அது வலுவானது மற்றும் பாதுகாப்பானது.

1 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த வலையின் ஒரு லூப் 88 கிலோ எடையைத் தாங்க முடியும். எனவே, ஸ்பைடர்மேன் மற்றவர்களையும் தன்னுடன் சுமந்து செல்ல முடியும். 23

ஆனால், இந்த வலை 40% வரை நீளக்கூடியது. எனவே, நியூயார்க் நகரின் போக்குவரத்துக்கும், உயரமான கட்டிடங்களுக்கும் இடையே ஊசலாடும்போது இதைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அவர் தரையில் மோதி விழவும் வாய்ப்புள்ளது.

பேட்மேன்

விமானத்தில் நழுவிச் செல்லும் பேட்மேனின் பயணப்பாதையைப் பற்றிய பகுப்பாய்வுகளின்படி, அவர் சூப்பர்ஹீரோக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்.

குறிப்பாக "பேட்மேன் பிகின்ஸ்" (Batman Begins) திரைப்படத்தில் காட்டப்பட்ட வேகத்தை அடைந்தால், பறக்க ஒரு போர்வையைப் பயன்படுத்துவது பாதுகாப்பான போக்குவரத்து முறையாக இருக்காது.

மணிக்கு 110 கிமீ ஆரம்ப வேகத்திலிருந்து, அது 80 கிமீ வேகத்திற்கு குறைந்துவிடும். ஆனாலும், தரையிறங்கும்போது இது கிட்டத்தட்ட மரணத்தை ஏற்படுத்தும்.

லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு, ஜோக்கரின் தீய செயல்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் நிலையில் பேட்மேன் இருக்க மாட்டார் என்று கூறியது.

சூப்பர்ஹீரோக்களின் ஆற்றல்களை அறிவியல்ரீதியாக ஒப்பிடும்போது, சூப்பர்மேன்தான் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெறுகிறார்.

மிக முக்கியமான ஆற்றல்

மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும், "சூப்பர்ஹீரோக்களின் இயற்பியல்" (The Physics of Superheroes) என்ற நூலின் ஆசிரியருமான ஜேம்ஸ் ககலியோஸ், பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், லெய்செஸ்டர் மாணவர்களை அவர்களின் "சிறந்த ஆராய்ச்சிக்காக"ப் பாராட்டினார்.

அப்படியிருந்தும், பேட்மேனின் ஒரு பெரிய திறமையை அவர்கள் குறைத்து மதிப்பிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்: அது அவரது மனதின் ஆற்றல். அதன் மூலம், மற்றவர்களை எப்படி தோற்கடிப்பது என்பதற்கான திட்டங்களை அவரால் வகுக்க முடியும். "நமது பெரிய சூப்பர் பவர் நமது புத்திசாலித்தனம்தான்," என்று ககலியோஸ் கூறினார்.

சூப்பர்மேனைப் பற்றிய மாணவர்களின் பகுப்பாய்வை கல்வியாளர் ஒப்புக்கொண்டார். தனித்துவமான ஆற்றல்களின் கலவை, அவரை சூப்பர்ஹீரோக்களின் கூட்டத்தில் முதலிடத்தில் வைக்கிறது.

ஆனால், அவர்கள் அவரது முக்கிய ஆற்றலை மீண்டும் ஒருமுறை புறக்கணித்துவிட்டனர், அதை அவர் "மகா பொறுப்பு" என்று அழைத்தார். "சூப்பர்மேன் இந்த உலகத்தை கைப்பற்ற முடியும்... ஆனால் அவர் சுயநல நோக்கங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ தனது ஆற்றல்களைப் பயன்படுத்தியதே இல்லை. இந்த வகையில், அவர் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணம்," என்று ககலியோஸ் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு