You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழைய எதிரி, புதிய நண்பன்; தாலிபன்களுடனான இந்தியாவின் நட்பு புதிய உறவுக்கான அடையாளமா?
- எழுதியவர், தாவுத் ஆஸ்மி
- பதவி, பிபிசி
இந்தியாவின் மோதி அரசுக்கும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய ஆப்கான் தாலிபன் அரசுக்குமான உறவு தற்போது வளர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த கால அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இதுவொரு பெரும் முரணாகத் தெரிகிறது.
ஆனால் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கம், அதன் தலைவர்களின் நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் தன்மையை காட்டுகிறது.
இவ்விரு நாடுகளும் அரசியல், வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை பலப்படுத்த விரும்புவதை சமீபத்திய அறிக்கைகள் உணர்த்துகின்றன.
சுமார் ஒரு வார காலம் நீடித்த தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தக்கியின் இந்தியப் பயணம், ஆப்கானிஸ்தான் தொடர்பான தங்கள் கொள்கைளை இந்தியா மாற்றிக்கொண்டிருப்பதற்கான தெளிவான அறிகுறி.
அக்டோபர் 9 முதல் 14 வரை இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த முத்தக்கிக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு முக்கிய சந்திப்பு முடிந்த 10 நாள்களுக்குப் பிறகே ஆப்கானிஸ்தான் அமைச்சரின் இந்த இந்தியப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமாபாத்தில் இரண்டு நாட்கள் நடந்த அந்த சந்திப்பு 'பிராந்திய உரையாடல்' என்று அழைக்கப்பட்டது. அதில் தாலிபன் எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முந்தைய கானி அரசாங்கத்தின் தலைவர்களும், அதிகாரிகளும்கூட இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைத் தகராறு நடந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த சந்திப்புகளும் பயணங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கூட ராணுவ மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு புதிய தொடக்கம்
தாலிபன் வெளியுறவு அமைச்சரின் இந்த இந்திய வருகை இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், போர் தந்திரங்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை கொடுப்பதையும் இது பிரதிபலிக்கிறது.
அதேசமயம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் இருந்த இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு இப்போது வளர்ந்துகொண்டிருப்பது பாகிஸ்தானுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாரம்பரியமாகவே தாலிபன் ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருக்கும் பாகிஸ்தான், காபூலை தாலிபன் கைப்பற்றியபோது அதை வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் ஆப்கான் தாலிபன்களுக்கும் இடையிலான இந்த நல்லிணக்கம், கடந்த இரண்டு தசாப்தங்களாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே இருந்த கசப்பான உறவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு 'தெரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' தொடங்கப்பட்டதிலிருந்து, அதை ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கைக் குலைக்கும் ஒரு பாகிஸ்தானின் பிரதிநிதியாகவே இந்தியா பார்த்திருக்கிறது.
அதன் அடிப்படையில், ரஷ்யா மற்றும் இரான் நாடுகளுடன் இணைந்து தாலிபன்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் குழுக்களுக்கு ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார உதவிகளை இந்தியா செய்துவந்தது.
2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, தாலிபன்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றியது.
அதன்பின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு அடுத்த 20 ஆண்டுகள் இந்தியாவும் முக்கிய ஆதரவாளராக இருந்தது. இருந்தாலும் இந்தியாவுக்கும் ஆப்கான் தாலிபன்களுக்கும் இடையிலான வேற்றுமைகள் இத்தனை ஆண்டுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன.
இதற்கிடையில், பெரும்பாலான கடும்போக்காளர்களின் கவனம் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது. பல கடும்போக்கு அமைப்புகளுக்கு முக்கிய மையமாக மாறியது ஆப்கானிஸ்தான்.
ஆனால் அமெரிக்காவும் தாலிபனும் கத்தாரில் சந்தித்து '2021ம் ஆண்டு மத்தியில் அனைத்து வெளிநாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்' என்று காலக்கெடுவை நிர்ணயித்தது இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பிப்ரவரி 15, 2021 அன்று தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்திருந்த தங்கள் தூதரகத்தை இந்தியா மூடியது. மேலும் காந்தஹர், ஹெராத், மஸார்-இ-ஷரிஃப் மற்றும் ஜலதாபாத்தில் இருந்த 4 இணைத்தூதரங்களும் மூடப்பட்டன.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆப்கானிஸ்தான் மாணவர்கள், நோயாளிகள், வணிகர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கான விசாக்கள் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விசாக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன்.
பல ஆப்கானிஸ்தான் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்தியாவின் இந்த முடிவை துரோகம் என்றனர்.
ஆனால், இவை அனைத்துக்கும் இடையே, ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக, இவ்வுறவை மேம்படுத்துவதில் இந்தியாவும் தாலிபன்களும் ஆர்வம் காட்டுகின்றன. இது இரு தரப்புக்குமே வெற்றிகரமாக அமையும் என்று கருதுகின்றனர்.
அன்று எதிராளிகள், இன்று நண்பர்கள்
அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே பிராந்திய நாடுகளோடு நல்லுறவை ஏற்படுத்தத் தொடங்கியது தாலிபன். இந்தியாவுடனான உறவும் சுமுகமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
அப்போது வெளியிட்ட செய்திக்குறிப்புகள் தவிர்த்து, தங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து தனிப்பட்ட முறையில் செய்திகள் அனுப்பி இந்தியாவைத் தொடர்புகொண்டது தாலிபன் .
அந்தச் செய்திகளில், தங்கள் வெளியுறவுக் கொள்கைகள் முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் என்றும், அவர்களது அரசியில் நோக்கங்கள் வேறு எந்த மூன்றாவது நாட்டின் தேவைகளுக்கும், முன்னுரிமைகளுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். இந்தச் செய்திகளில் மூன்றாவது நாடு என்று பாகிஸ்தானையே அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
2012ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையொன்றில், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பங்களிப்பைக் கொடுக்கச் சொன்ன அமெரிக்காவின் வேண்டுகோளை இந்தியா ஏற்காததை தாலிபன்கள் பாராட்டியிருந்தார்கள்.
2014ம் ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் தங்கள் இருப்பைக் குறைத்துக்கொள்ளவும், அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகளின் பங்களிப்பை குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்தது அமெரிக்கா. அதனால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்கவேண்டும் என்று விரும்பியது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவின் மறுப்பும், தாலிபன்களின் அந்த செய்திக்குறிப்பும் வெளியாகின.
அந்தச் செய்திக்குறிப்பில் 'இந்தப் பகுதியில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு' என்று குறிப்பிட்டிருந்த தாலிபன்கள், அப்படியிருக்கும்போது அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக இந்தியா அழிவில் ஈடுபடுவது அர்த்தமற்றது என்றும் கூறியிருந்தார்கள்.
உத்திகளில் மாற்றம்
ஆகஸ்ட் 2021ல் தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்ததும், இந்த செய்திகள் மற்றும் தொடர்புகள் மூலம் தாலிபன்களுடனான உறவை மெல்ல பலப்படுத்தத் தொடங்கியது இந்தியா.
தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா அவர்களின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கொண்ட ஒரு பெரும் மாற்றத்தை இது குறிக்கிறது.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளாகவே ஆப்கானிஸ்தானில் தங்களின் தூதரக இருப்பை மீண்டும் தொடங்கியது இந்தியா.
2022 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜே.பி.சிங் தலைமையில் இந்திய வெளியுறவு அமைச்சரகத்திலிருந்து ஒரு குழு காபூல் சென்றது.
இதுதான் இந்தியாவுக்கும் தாலிபன் அரசுகளுக்கும் இடையே நடந்த முதல் அதிகாரபூர்வ சந்திப்பு. "இது இவ்விரு நாடுகளின் உறவுகளையும் மேம்படுத்த நல்ல தொடக்கம்" என்று தாலிபன் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
பின்னர் அதே மாதம் காபூலுக்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்புவதாக அறிவித்தது இந்தியா. இந்திய தூதரகத்தின் வாயிலாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை இந்தக் குழு விநியோகிக்கும் என்று கூறப்பட்டது.
இதன்பிறகு இந்தியா மற்றும் தாலிபன் அதிகாரமளிக்கும் தூதர்களுக்கும் இடையே பல உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானிலும், அதற்கு வெளியேவும் நடந்தன.
2025 ஜனவரி மாதம் துபையில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் முத்தக்கி மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பு அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
நான்கு மாதங்கள் கழித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் முத்தக்கி தொலைபேசி வாயிலாக உரையாடினார்கள். அப்போதைய காலகட்டத்தில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த உயர்மட்ட தொடர்பு இதுதான்.
அதேசமயம் சில முக்கியமான தாலிபன் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு அதிகாரபூர்வ சந்திப்புகளுக்கோ, பயிற்சிகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ இந்தியா வருவதற்கு விசாக்கள் கொடுக்கத் தொடங்கியது இந்தியா.
தாலிபன் உறுப்பினர்களின் இந்த இந்திய வருகைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தாலும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தியது.
மற்றொரு முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால், தங்கள் தூதர்களை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்கான தாலிபன் அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா இறுதியாக ஏற்றுக்கொண்டது.
2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் இணைத்தூதரகத்தின் பொறுப்புகளை தாலிபன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தூதரிடம் ஒப்படைத்தது இந்தியா. சில மாதங்கள் கழித்து தாலிபன் அரசு நியமித்த இன்னொரு தூதரிடம் ஹைதராபாத்தில் இருக்கும் இணைத்தூதரகத்தின் பொறுப்புகளையும் இந்தியா ஒப்படைத்தது.
முத்தக்கி டெல்லி வந்திருந்தபோது இந்திய வெளியுறவு அமைச்சர் காபூலிலுள்ள அவரது தொழில்நுட்ப திட்டத்தை தூதரக நிலைக்கு மேம்படுத்துவதாக அறிவித்தார். இது இவ்விரு நாடுகளின் தூதரக உறவை மேலும் மேம்படுத்தியது
இந்தியா இன்னும் அதிகாரபூர்வமாக தாலிபன் அரசை அங்கீகரிக்கவில்லையென்றாலும், தாலிபன் அரசு நியமித்திருக்கும் தூதர்களை டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்காக ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறது.
தாலிபன் அரசின் கொள்கைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள்
இந்தியாவுடனான உறவை சுமுகமாக்குவது பல்வேறு காரணங்களுக்காக தாலிபன் ஆட்சிக்கு முக்கியமாகிறது. இந்த பிராந்தியத்தில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது. மேலும், கடந்த காலத்தில் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடாகவே விளங்கியிருக்கிறது. அதனால் இந்தியாவுடனான நல்லுறவு தாலிபன் ஆட்சியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையையும் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தும்.
இந்தியாவுடனா நல்லுறவு தங்களின் பிம்பத்தை பலப்படுத்தும் என்றும், தாங்கள் இன்னொரு நாட்டின் மூலம் ஆட்டுவிக்கப்படாமல் சுயமாக இயங்கும் அரசு என்பதை நிறுவ உதவும் என்றும் எதிர்பார்க்கிறது தாலிபன் . ஒருவேளை இந்தியாவுடனான உறவு மேம்படாத பட்சத்தில் பாகிஸ்தானின் தாக்கமே அதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் கருதக்கூடும்.
இந்த தாலிபன் ஆட்சி அங்கீகாரம் பெறுவதிலும், தூதரக உறவுகளை விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டுடன் அந்த உறவை நிலைநாட்டி, மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள், தடைகளின்போது தாங்கள் தனியாக இல்லையென்றும், பலமான நட்பு நாடுகளைக் கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை அனுப்பவேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
இந்தியாவுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், தங்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பதாக தங்களின் பிராந்திய எதிரிகளுக்கு காட்ட விரும்புகிறது தாலிபன்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம், வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தப் பகுதியிலுள்ள நாடுகளுடனும், பிற நாடுகளுடனும் பொருளாதார மற்றும் வணிக உறவை பலப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது.
அதனால், ஆப்கானிஸ்தானின் உலர்ந்த மற்றும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளுக்கு மிகப் பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவுடனான உறவு மிகவும் அவசியமாகிறது.
வணிகம் பற்றிப் பேசும்போது, பல ஆப்கானிஸ்தான் அரசுகள் சிலபல தசாப்தங்களாகவே பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானுடனோ இந்தியாவுடனோ ஏதேனும் பிரச்னை வரும்போது கராச்சி துறைமுகத்திலும் வாகா எல்லையிலும் பாகிஸ்தான் முட்டுக்கட்டைகள் போடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்தியாவுடன் வணிகம் செய்ய எளிதான மற்றும் மலிவான வழிகள் இவைதான்.
அதனால் இந்தியாவுடனான வணிகம் ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியம்.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் நிலைப்படுத்தப்பட்டிருந்தபோது இந்தப் பிராந்தியத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு அதிகம் நன்கொடை கொடுத்த நாடு இந்தியா தான். அதனால் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதுள்ள வளர்ச்சித் திட்டங்களை இந்தியா முடிக்க வேண்டும் என்றும் புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் தாலிபன் அரசாங்கம் விரும்புகிறது.
அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, குறிப்பாக வணிகர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்தியா விசாக்கள் வழங்கத் தொடங்கவேண்டும் என்று தாலிபன் அரசு விரும்புகிறது.
இந்தியாவின் கடந்த கால அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு அவர்கள் தங்கள் மக்களுக்கு கணினி பயிற்சி, தொழிற்பயிற்சி கொடுப்பார்கள் என்றும் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் உதவி செய்வார்கள் என்றும் தாலிபன் நம்புகிறது.
இவை போக, இரு நாடுகளுக்கு இடையிலான வணிகத்துக்காக சீரானதொரு விமான வழிதடத்தை ஏற்படுத்தவும் இருதரப்பும் செயல்பட்டு வருகின்றன. மறுபக்கம், சபாஹர் மற்றும் பந்தர் அப்பாஸ் போன்ற இரானிய துறைமுகங்களை சரியாகப் பயன்படுத்தி இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் சந்தைகளோடு இணைப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானில் பரஸ்பர செல்வாக்கை அகற்றுவதற்கும் அதன் அரசியல் விவகாரங்களில் தாக்கம் ஏற்படுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் நீண்ட காலமாக போட்டியிட்டு வருகின்றன.
1994 முதல் 2001 வரையிலான முதல் தாலிபன் ஆட்சியின்போது பாகிஸ்தானுடனான உறவு சிறப்பாகவே இருந்தது. ஆனால், இரண்டாவது ஆட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே அது பாழானது.
செப்டம்பர் 2025ல், சில மூத்த பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இப்போது பதற்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வாரம் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டுவந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆப்கானிஸ்தானை எதிரி நாடு என்று குறிப்பிட்டார்.
தெரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்திக்கொள்ள தாலிபன் அரசு அனுமதித்திருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் மூலமாக பாகிஸ்தானில் தாலிபன்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு நிறுத்தாமல், பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்திலுள்ள பலோச் தீவிரவாதிகளுக்கும் இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை தாலிபன் அரசும் இந்தியாவும் தொடர்ந்து மறுத்திருக்கின்றன.
தாலிபன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானில் பல தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொண்டிருக்கிறது . பாகிஸ்தான் தாலிபன் போராளிகளையும் அவர்கள் தளங்களையும் அழிக்கும் நோக்கத்துடனேயே அதைச் செய்ததாக அதற்குக் காரணம் சொல்லியிருக்கிறது.
இருந்தாலும், இந்த பாகிஸ்தான் தாக்குதல்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தாலிபன் அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது.
மேலும், பாகிஸ்தானில் உள்ள சில சக்திகள் ஆப்கானிஸ்தானையும் தாலிபன் அரசாங்கத்தையும் சீர்குலைப்பதாகவும், அதன் எதிரிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுடனான தாலிபன் அரசின் உறவு பலவீனமடைந்துவந்த நிலையில், இந்தியாவுடனான உறவு பல பரிமாணங்களில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. இதை இந்திய, பாகிஸ்தான் அரசுகளோ தாலிபன்களோ கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
பிராந்திய சவால்களும் தேசிய நலனும்
இந்தியாவின் பிரதான கவலை பாதுகாப்பு குறித்ததே. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா சார்ந்தும், அவர்களைக் குறிவைக்கும் பிராந்திய தீவிரவாத அமைப்புகள் சார்ந்ததாகவுமே அந்த கவலை இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு, தங்கள் மண்ணை யாரும் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறது.
மேலும் இவ்விரு தரப்பும் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கின்றன. ஏனெனில், இஸ்லாமிய அரசு (IS) என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அந்த அமைப்பு தாலிபன்களுக்கும் எதிரிகள்தான்.
காபூலில் ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் அவர்களோடு நல்லுறவு வைத்திருக்கவேண்டும் என்ற இந்தியாவுடைய முதன்மைக் கொள்கையின் நீட்சி தான் இது.
இருந்தாலும், இவையனைத்தையும் தாண்டி தாலிபன் அரசுடனான உறவு முக்கியமாக இந்தியாவின் தேசிய நலன் சார்ந்தது.
ஆப்கானிஸ்தான் எல்லையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அரசாங்கத்தை நடத்திவரும் தாலிபன்கள் தான் ஆப்கானிஸ்தானை ஆட்சிபுரிகின்றனர்.
அதனால் பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்பு, முதலீடு, வணிகம் மற்றும் பிராந்திய உறவு போன்ற விஷயங்களில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைக்கவேண்டியிருக்கிறது.
மறுபக்கம், ஒரு வளர்ந்துவரும் சக்தியான இந்தியாவுக்கு இந்தப் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் தங்களின் தாக்கத்தை விரிவுபடுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது.
இந்தியாவின் பிராந்திய போட்டியாளர்களான பாகிஸ்தான், சீனா, மற்ற பெரும் சக்திகளான ரஷ்யா, இரான் என அனைவருமே ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்கத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்தியா இந்த விஷயத்தில் பின்தங்கிவிட விரும்பவில்லை.
இருந்தாலும் முந்தைய நிகழ்வுகளின் காரணமாக ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கும் இந்தியாவுக்குமான உறவு தற்போது மிகவும் எச்சரிக்கையுடனேயே கையாளப்படுகிறது.
அதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்னதான் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் இரு தரப்புமே மிகவும் எச்சரிக்கையுடனேயே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு