தாயைத் தேடி வட கொரியாவில் இருந்து தப்பித்த பெண்ணின் நெகிழ்ச்சி கதை

    • எழுதியவர், ஜீன் மெக்கன்ஸி
    • பதவி, பிபிசி

ஆற்றை கடக்க முயற்சி செய்த சோங்மி பார்க், கரையின் விளிம்பில் தனது கால் மூலம் குழியை தோண்டினார். அந்த ஆறு மிக ஆழமானது, நீரோட்டமும் வேகமாக இருந்தது. ஒருவேளை அவர் பிடிபட்டால் நிச்சயம் அவருக்கு தண்டனை விதிக்கப்படும். சொல்ல முடியாது, அவர் சுட்டுக் கொல்லப்படவும் வாய்ப்பு உள்ளது. அவரிடம் பயம் இருந்தது. ஆனால், பயத்தை போக்கும் வலிமையையும் அவர் தனக்குள் உணர்ந்தார். தன்னை சிறுவயதிலேயே விட்டுச் சென்ற தாயை தேடி வட கொரியாவை விட்டு செல்ல அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அந்தி சாயும் நேரத்தில் பனிக்கட்டி மீது சறுக்கிச் செல்வது அவருக்கு பறந்து செல்வதை போல் இருந்தது.

அது 31 மே 2019. “என் வாழ்க்கையின் சிறந்த நாளாகவும் மோசமான நாளாகவும் இருக்கும் அதை நான் எப்படி மறக்க முடியும்” என்று சோங்மி கூறுகிறார்.

வட கொரியாவை விட்டு வெளியேறுவது என்பது சவாலானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பவர்கள் மீது அண்மை காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா தொற்றுநோயின் தொடக்க காலத்தில், நாட்டின் எல்லைகளை அவர் சீல் வைத்தார். இந்த நடவடிக்கை, அப்போது 17 வயதில் இருந்த சோங்மியை, அந்நாட்டை விட்டு வெளியேறியவர்களில் கடைசியாக அறியப்பட்டவர்களில் ஒருவராக மாற்றியது.

வட கொரியாவை சீனாவில் இருந்து பிரிக்கும் யாலு நதியை சோங்மி இரண்டாவது முறையாக கடந்து சென்றார். வட கொரியாவில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எளிதான வழியாக இந்த நதி உள்ளது.

முதன்முதலாக அவர் வெளியேறும்போது குழந்தையாக இருந்தார். அப்போது தனது தாயின் முதுகில் அவர் கட்டப்பட்டிருந்தார். நேற்று நடந்ததைப் போன்று தற்போதும் அந்த நினைவுகள் அவர் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.

சீனாவில் உள்ள ஒரு உறவினரின் பன்றிப் பண்ணையில் பதுங்கியிருந்தபோது மாநில காவல்துறை அவர்களைத் தேடி வந்ததையும் தங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தன் தாயும் தந்தையும் கெஞ்சியதையும் அவர் நினைவுகூர்கிறார். “அவர்களுக்கு பதிலாக என்னை அனுப்புங்கள்” என்று உறவினர் அழுதார். முகத்தில் ரத்தம் வரும் வரை போலீசார் அவரை அடித்து உதைத்தனர்.

வட கொரியாவில், தன் தந்தையின் கைகள் முதுகுக்கு பின்னால் கட்டப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார். தனது பெற்றோர் இருவரும் வட கொரியாவின் வெளியே தெரியாத சிறை முகாம்களில் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்படுவதை ரயில் நிலைய நடைமேடையில் நின்று பார்த்ததாக அவர் கூறுகிறார். அப்போது அவருக்கு நான்கு வயது.

சீன எல்லையில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் உள்ள வட கொரிய நகரமான மூசானில் உள்ள அவர்களது பண்ணையில் தனது தந்தையின் பெற்றோருடன் வாழ சோங்மி அனுப்பப்பட்டார். பள்ளிக்குச் செல்ல அனுமதி இல்லை என்று அவளிடம் தெரிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவில் கல்வி இலவசம்தான். ஆனால் குடும்பங்கள் பெரும்பாலும் ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோங்மியின் தாத்தா- பாட்டியிடம் அதற்கு வசதியில்லை.

மாறாக அவர் தனது குழந்தைப் பருவத்தை கிராமப்புறங்களில் சுற்றித் திரிவது, பண்ணையில் உள்ள முயல்களுக்கு உணவளிக்க தாவரங்களை சேகரிப்பது போன்றவற்றில் கழித்தார். கோடையில் கூட அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். "நான் அதிகம் சாப்பிடவில்லை, அதனால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் நான் என் நோயிலிருந்து எழுந்தபோது, என் பாட்டி எப்போதும் எனக்கு ஒரு சிற்றுண்டியை ஜன்னலில் விட்டுச் செல்வார்."

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு மாலை வேளையில், சோங்மியின் தந்தை அவரை கைகளில் அணைத்துக்கொண்டிருந்தார். சிறுமியாக இருந்த சோங்மி மிக உற்சாகமாக இருந்தாள். மீண்டும் வாழ்க்கை தொடங்கியதாக அவள் நினைத்தாள். ஆனால், மூன்று நாட்கள் கழித்து அவளது தந்தை இறந்துவிட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

சோங்மியின் தாய் மியுங்- ஹுய், அடுத்த வாரம் வீட்டிற்கு வந்தபோது, தனது கணவர் இறந்த தகவலைக் கேட்டு கலக்கமடைந்தார். அப்போது, யோசிக்கமுடியாத ஒரு முடிவை அவர் எடுத்தார். அதாவது, வட கொரியாவில் இருந்து மீண்டும் தப்பிச் செல்ல அவர் முடிவு செய்தார். ஆனால், தனியாக.

தனது தாய் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அந்த நாளின் காலைப் பொழுதில், ஏதோவொன்று வித்தியாசமாக இருந்ததை சோங்மி உணர்ந்தார். பாட்டியின் உடைகளை தனது தாய் அணிந்திருப்பதை அவர் பார்த்தார். “என் அம்மா என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவர் என்னைவிட்டு சென்றுவிட்டால், நீண்ட நாட்களுக்கு அவரை பார்க்க முடியாது என்று எனக்கு தெரியும்” என்று அவர் நம்மிடம் கூறினார். தாய் வீட்டைவிட்டு செல்லும்போது, படுக்கையில் அழுதுக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகள் கடினமானதாக சோங்மிக்கு இருந்தது.

2 ஆண்டுகளில் அவரது தாத்தா மரணமடைந்தார். 10 வயதான அவர் தற்போது, படுக்கையில் விழுந்த தனது பாட்டியுடன் எவ்வித வருமானமும் இன்றி வாழும் சூழல் ஏற்பட்டது. “ஒருவர் பின் ஒருவராக என் குடும்பத்தினர் மறைந்துகொண்டிருந்தனர். இது மிகவும் அச்சமூட்டும் வகையில் இருந்தது” என்கிறார் அவர்.

விரக்தியின் போது, எதைத் தேடுவது என்று நீங்கள் அறிந்திருந்தால், வட கொரியாவின் அடர்ந்த மலைகள் அற்பமான வாழ்வாதாரத்தை அளிக்கும். ஒவ்வொரு காலையிலும் சோங்மி இரண்டு மணிநேர நடைப்பயணத்தைத் தொடங்கினார், சாப்பிடவும் விற்கவும் தாவரங்களை சேகரித்தார். சில மூலிகைகள் அவரது உள்ளூர் சந்தையில் மருந்தாக விற்கப்படலாம், ஆனால் முதலில் அவற்றைக் கழுவி, ஒழுங்கமைத்து, கையால் உலர்த்த வேண்டும். இதற்காக, அவர் இரவு வெகுநேரம் வரை வேலை செய்தார்.

"என்னால் வேலை செய்யவோ அல்லது நாளை திட்டமிடவோ முடியவில்லை. ஒவ்வொரு நாளும் நான் பட்டினி கிடக்காமல், அந்த நாளை உயிர்வாழ முயற்சித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வட கொரியாவில் இருந்து தப்பித்த அவரது தாயார் மியுங்- ஹுய் 300 மைல்கள் தொலைவில் உள்ள தென் கொரியாவை அடைந்திருந்தார்.

சீனா, அதன்பின்னர் லாவோஸ், தாய்லாந்து ஆகிய பகுதிகளில் ஓராண்டுக்கும் மேலாக பயணித்து இறுதியாக தென் கொரிய தூதரகத்தை அவர் அடைந்தார்.

வடகொரியாவில் இருந்து தப்பியோடியவர்களை மீண்டும் குடியமர்த்த ஒப்பந்தம் செய்துள்ள தென் கொரிய அரசாங்கம், மியுங்-ஹுய்வை சியோலுக்கு விமானத்தில் கொண்டு சென்றது. அவர் தெற்கு கடற்கரையில் உள்ள தொழில்துறை நகரமான உல்சானில் குடியேறினார். தன் மகள் வட கொரியாவில் இருந்து தப்பி வருவதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ஓய்வின்றி தினமும் கப்பல்களை அவர் சுத்தம் செய்தார். வட கொரியாவில் இருந்து தப்பிப்பது மிகவும் செலவு பிடித்தது. பயணத்தின்போது ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க உதவும் ஒரு இடைத்தரகர் தேவை. வழியில் யாராவது பிடித்துவிட்டால் அவர்களுக்கும் லஞ்சம் தர வேண்டும்.

வட கொரியாவில் தனது மகள் தற்போது என்ன செய்துகொண்டு இருப்பாள், அவள் பார்ப்பதற்கு எப்படி இருப்பாள் என்பது குறித்து ஒவ்வொரு நாளும் இரவு வேளையில், இருட்டில் தனியாக அமர்ந்துகொண்டு மியுங்- ஹுய் நினைத்துக்கொண்டு இருப்பார். சோங்மியின் பிறந்தநாளின்போது, ஒரு பொம்மையை தனது மகளான எண்ணிக்கொண்டு அதனுடன் பேசுவார்.

தங்கள் சமையலறையின் மேசையில் அமர்ந்துகொண்டு கடந்த காலத்தை நினைவுக்கூரும்போது சோங்மியின் தாய் அழத்தொடங்கினார். “ அழ வேண்டாம். உங்களின் அழகான மேப்-அப் கலைகிறது” என்று கூறி சோங்மி அவரை அசுவாசப்படுத்தினார்.

இறுதியாக இடைத்தரகருக்கு இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை கொடுத்து தனது மகள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மியுங்-ஹுய் செய்தார். இதனால், சோங்மியின் பல ஆண்டுகளாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

யாலு ஆற்றை கடந்து சீனாவுக்கு சென்ற பின்னர், அவர் யாருக்கும் தெரியாமல் மறைந்து இருக்க தொடங்கினார். பகலில் பயணம் செய்தால் பிடிபட்டு விடுவோமே என்ற அச்சத்தில் இரவு நேரத்திலேயே பயணத்தை மேற்கொண்டார். பேருந்தில் மலைகளை கடந்து பயணித்து லாவோஸ் நகரை அடந்த சோங்மி அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்தார். பின்னர் தென் கொரிய தூதரகத்தை அவர் அடைந்தார். தூதரகத்தில் மேலும் மூன்று மாதங்களை அவர் கழிக்க வேண்டியிருந்தது. பின்னர், தென் கொரியா வந்தடைந்த அவர், அங்குள்ள மறு குடியேற்ற முகாமில் சில காலம் இருந்தார். மொத்தமாக ஓராண்டுகள் அவர் இந்த பயணத்தில் செலவிட்டார். ஆனால், அவருக்கு இது 10 ஆண்டுகள் போன்று இருந்தது.

இறுதியாக தனது தாயை சோங்மி அடைந்தார். தற்போது, மியுங் சமைத்த நூடூல்ஸை இருவரும் சாப்பிட்டுகொண்டிருக்கின்றனர். வட கொரியாவின் இந்த கிளாசிக் உணவு சோங்மிக்கு மிகவும் பிடித்த ஒன்று.

தனது மகளை சிறு வயதிலேயே தவிக்கவிட்டு வந்துவிட்டோமே என்று மியுங் குற்றவுணர்ச்சியுடன் இருக்க, தனது சிரிப்பு, நகைச்சுவை மூலம் தாயை சோங்மி ஆறுதல்படுத்தினார்.

"நான் மீள்குடியேற்ற மையத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். என் அம்மாவிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறுகிறார். "நான் அவர் முன் அழகாக இருக்க விரும்பினேன், ஆனால் நான் அவரைவிட்டு பிரிந்தப் பின்னர் மிகவும் எடை அதிகரித்தேன், என் தலைமுடி சரியாக இல்லை."

"நான் மிகவும் பதற்றமாக இருந்தேன்," என்று மியுங்-ஹுய்வும் ஒப்புக்கொள்கிறார்.

உண்மையில் நீண்ட காலத்திற்கு பின்னர் பார்க்கும்போது மியுங்-ஹுய்வால் தனது மகளை அடையாளம் காண முடியவில்லை. கடைசியாக சோங்மியை 8 வயதில் அவர் பார்த்தது, தற்போது அவருக்கு 18 வயது ஆகிறது.

“ எனக்கு முன்னால் அவள் நின்றுகொண்டிருந்தாள், எனவே, அவள்தான் என் மகளாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சொல்வதற்கு நிறைய இருந்தது. ஆனால், மகிழ்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. நான் அவளை கட்டி அணைத்துக்கொண்டேன். இங்கு வருவதற்காக நீ நிறைய இன்னல்களை சந்தித்துவிட்டாய் என்று அவளிடம் கூறினேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மியுங்- ஹுய்.

அப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று தெரிவித்த சோங்மி, “ நாங்கள் 15 நிமிடத்துக்கு கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். அங்கு நடந்தது எல்லாம் கனவுபோல் இருந்தது” என குறிப்பிட்டார்.

பட்டுப்போன தங்களின் உறவை மீண்டும் துளிர்க்க வைக்கும் முயற்சியில் அவர்கள் இருவரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தனது தாயிடம் கேட்க தைரியம் இல்லாத கேள்வி ஒன்றும் சோங்மியின் மனதில் இருந்தது. 8 வயதில் இருந்து ஒவ்வொரு நாளும் தனக்குள்ளேயே அவர் கேட்டுக்கொண்டிருந்த கேள்வி அது.

தற்போது இருவரும் தங்கள் மதிய உணவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அந்த கேள்வியை தனது தாயிடம் சோங்மி கேட்டுவிட்டார்.

“என்னை ஏன் விட்டுச் சென்றீர்கள்”

இதற்கான பதிலை பதற்றத்துடன் மியுங்-ஹுய் விளக்கத் தொடங்கினார். கணவருடன் மியுங் முதலில் தப்பித்தது அவளின் திட்டம்தான். தற்போது, கணவர் உயிருடன் இல்லாத நிலையில், அவரது வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோருடன் வாழ்வது என்பது மியுங்கிற்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவரிடம் பணம் இல்லை, எனவே மகளுடன் தனியாக சென்று வாழ்வதற்கும் வழி தெரியவில்லை.

“நான் உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று விரும்பினேன். ஆனால், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று இடைத்தரகர் கூறிவிட்டார். மேலும், மீண்டும் நாம் மாட்டிக்கொண்டால் நாம் இருவருமே கஷ்டப்படுவோம். அதனால்தான், உன்னை ஒரு வருடம் மட்டும் பார்த்துக்கொள்ளும்படி உன் பாட்டியிடம் கூறிவிட்டு நான் மட்டுமே தப்பிச் சென்றேன்” என்று தெரிவித்தார்.

“ஆனால், ஒரு வருடம் என்பது 10 வருடங்களாக நீண்டு விட்டதே” என்று கண்களில் கண்ணீர்த் துளிகளுடன் சோங்மி கூறினார்.

“ஆம்” என்று அவரது வார்த்தை ஒப்புக்கொண்டு மயுங் தலையசைத்தார்.

“ அன்று காலை நான் செல்லும்போது, என் கால்கள் நகர மறுத்தன. ஆனால், உடனடியாக செல்ல வேண்டும் என்று உன் தாத்தா என்னை அவசரப்படுத்தினார். உன்னை நான் கைவிடவில்லை என்பதை உனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். உனக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன். அதற்கு இது சரியான தேர்வாகத் தோன்றியது ” என்று மியுங் மேலும் கூறினார்.

வட கொரியாவிற்கு வெளியே வாழும் எவருக்கும் இந்தத் தேர்வு நினைத்துப் பார்க்க முடியாததாகத் தோன்றலாம். ஆனால், அங்கிருந்து தப்பிக்க இத்தகைய கடினமான முடிவுகளையும் அபாயங்களையும் மக்கள் எடுக்கின்றனர். தற்போது அது மேலும் கடினமாகி வருகிறது. கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், தப்பியோட முயன்று பிடிபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதித்துள்ளது.

2020 க்கு முன், ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தென் கொரியாவுக்கு வருவார்கள். 2020 ஆம் ஆண்டில், சோங்மி வந்த ஆண்டில், எண்ணிக்கை 229 ஆகக் குறைந்தது.

அந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதும் வட கொரியா அதன் எல்லைகளை சீல் வைத்தது. மக்கள் பயணம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதித்தது. தப்பிச் செல்ல முயன்றவர்களைக் கண்டால் சுட்டுக் கொல்லுமாறு எல்லையில் உள்ள வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு 67 வட கொரியர்கள் தெற்கிற்கு வந்தனர், அவர்களில் பெரும்பாலோர் தொற்றுநோய்க்கு முன்பே வடக்கை விட்டு வெளியேறினர்.

எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு கடைசியாக வெளியேறியவர்களில் சோங்மியும் ஒருவர். அவருடைய நினைவுகள் மதிப்புமிக்கவை, ஏனெனில் அவை உலகின் மிக ரகசியமான நிலையில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய சமீபத்திய மற்றும் பெருகிய முறையில் அரிதான பார்வையை வழங்குகின்றன.

வட கொரியாவில் விவசாயிகள் தங்களின் விளைச்சலை அப்படியே அரசாங்கத்திடம் அளிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 2017 வாக்கில், பயிர்கள் காய்ந்து கருக ஆரம்பித்தன, இலையுதிர் மற்றும் வசந்த காலத்தில் சாப்பிட எதுவும் இல்லை. ஆனால் விவசாயிகள் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் அதே பயிர் விளைச்சலை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உணவுக்காக மலைகளில் தீவனம் தேடத் தொடங்கினர். சிலர் கடைசியில் விவசாயத்தை கைவிட முடிவு செய்தனர்.

அவளது சொந்த ஊரான மூசானில் உள்ள மற்ற முக்கிய வேலை ஆதாரமான சுரங்கத்தில் பணிபுரிந்தவர்கள் மோசமாக உள்ளனர் என்று அவர் கூறுகிறார். 2017ல் வடகொரியா அணு ஆயுதங்களை சோதனை செய்த பிறகு அதன் மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக சுரங்கத்தின் இரும்பு தாதுவை யாரும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. சுரங்கம் கிட்டத்தட்ட இயங்குவதை நிறுத்தியது, தொழிலாளர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டது . அவர்கள் இரவில் சுரங்கத்திற்குள் பதுங்கியிருப்பார்கள், அவர்கள் கசையடிக்கும் பாகங்களைத் திருடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் 2019 வாக்கில், உயிர்வாழ போதுமான உணவைக் கண்டுபிடிப்பதைத் தவிர, வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பதும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இவை நீண்ட காலமாக வட கொரியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, அந்நாட்டு மக்களுக்கு அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் கவர்ச்சியான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன. கவர்ச்சிகரமான நவீன கால தென் கொரியாவின் படங்கள், கே-நாடகங்களில் சித்தரிக்கப்படுபவை போன்றவை வட கொரிய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

"பொதுவாக, தென் கொரியப் படத்தைப் பார்ப்பது உங்களுக்கு அபராதம் அல்லது இரண்டு , மூன்று வருடங்கள் சிறை தண்டனை பெற வழிவகுக்கும், ஆனால் 2019க்கு பின் நீங்கள் திரைப்படங்களை பார்த்தால், அரசியல் வதைமுகாங்களுக்கு செல்ல நேரிடும்" என்று சாங்மி கூறுகிறார்.

ஒருமுறை, தனது USB கருவியில் இந்தியப் படத்துடன் அவர் மாட்டிக்கொண்டார். ஆனால், அதில் படம் இருப்பதே தனக்கு தெரியாது என்று பாதுகாப்பு அதிகாரியை நம்ப வைத்து அபராரத்துடன் அவர் தப்பினார். அவருடைய தோழி சோங்மி அவ்வளவு அதிர்ஷ்டசாலி அல்ல.

தென் கொரியாவுக்கு தப்பி வந்ததற்கு பின்னர் 2022ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தனது தோழியின் தாயிடம் இருந்து சோங்மிக்கு அழைப்பு வந்தது.

"ஸ்க்விட் கேமின் நகலுடன் என் தோழி பிடிபட்டாள் என்றும் அதனை அவள் விநியோகித்ததால், தூக்கிலிடப்பட்டாள் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்," என்று சோங்மி கூறுகிறார்.

வட கொரியாவில் வெளிநாட்டு நாடகங்கள் போன்றவற்றை விநியோகித்ததற்காக தூக்கிலிடப்பட்டவர்களின் சமீபத்திய அறிக்கைகளுடன் சோங்மியின் கணக்குகள் ஒத்துப்போகின்றன.

"நான் அங்கு இருந்தபோது நிலவியதை விட தற்போது நிலைமை இன்னும் பயங்கரமாக இருப்பதாகத் தெரிகிறது. தென் கொரிய ஊடகப் பொருட்களை வைத்திருப்பதற்காக தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் மக்கள் சுடப்படுகிறார்கள், முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

முதலாளித்துவ, சுதந்திரமான தென் கொரியாவில் வாழ்க்கையை சரிசெய்வது பெரும்பாலும் வட கொரியர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. அவர்கள் அனுபவித்த எதையும் விட இது அந்நியமாக வேறுபட்டது. ஆனால் சோங்மி அதை தனது முன்னேற்றத்தின் ஒருபகுதியாக எடுத்துக்கொள்கிறார்.

அவர் தன் நண்பர்களை தற்போது மிகவும் தேடுகிறார். நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு முன்பு இது குறித்து அவர்களிடம் சோங்மி எதுவும் கூறவில்லை. அவர்களுடன் நடனமாடுவதையும், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுகளையும் தவறவிடுவதாக அவர் கூறுகிறார்.

தென் கொரியர்களுக்கு தான் சற்றும் வேறுபட்டவர் இல்லை என்ற உறுதியான நம்பிக்கையே தன்னை ஒருங்கிணைக்க உதவியதாக அவர் தெரிவித்தார்.

"சீனா மற்றும் லாவோஸ் வழியாக பல மாதங்கள் பயணம் செய்த பிறகு, நான் ஒரு அனாதை போல் உணர்ந்தேன், வெளிநாட்டில் வாழ அனுப்பப்பட்டேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் சியோலில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கிருந்த ஊழியர்கள் அவரை மிகவும் பழக்கமான அன்-நியோங்-ஹா-சே-யோ (ஹலோ) என்ற வார்த்தையில் வரவேற்றனர்.

“ அதன் பின்னர், நாம் ஒரே நிலத்தின் ஒரே மக்கள் என்பதை நான் உணர்ந்தேன். நான் வேறு நாட்டிற்கு வரவில்லை. என் நிலத்தில் தெற்கு பகுதிக்கு வந்துள்ளேன்” என்று கூறிய அவர், விமான நிலையத்தில் அமர்ந்து 10 நிமிடத்துக்கு அழுததாகவும் குறிப்பிட்டார்.

வட கொரியாவும் தென் கொரியாவும் ஒன்றிணைவதற்கு குரல் கொடுப்பது என்ற தனது நோக்கத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறும் சோங்மி, தென் கொரிய மக்களுக்கு கற்பிக்கப்படும் கனவு இதுதான். நாடுகள் பிரிக்கப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. மீண்டும் கொரியா ஒன்றுபட வேண்டும் என்று இளைஞர்கள் நினைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தற்போது தென் கொரியாவின் பள்ளிகளுக்கு சென்று வட கொரியாவை பற்றி மாணவர்களுக்கு அவர் கற்பிக்கிறார். இரு நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்று யாரேல்லாம் விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ஒருசிலர் மட்டுமே கைகளை உயர்த்துவதாக கூறும் அவர், “ஆனால், கொரியாவின் வரைப்படத்தை வரைய சொல்லும்போது, மொத்த கொரிய தீபகற்பத்தையே அவர்கள் வரைகின்றனர். இது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” என்றும் தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் இப்போது தென் கொரியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால், அவரது தாயின் தேர்வு சரியானது என்று சோங்மி கூறுகிறார்.

மியுங்-ஹுய் தனது மகளை ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாமல் போயிருக்கலாம், ஆனால் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரிகின்றனர். இப்போது அவர் தனது 19 வயது சுயத்தை தனது மகளில் பார்க்கிறார்.

நண்பர்கள் போன்றும் சகோதரிகள் போன்றும் அவர்கள் பழகிக்கொள்கின்றனர். தனது டேட்டிங் குறித்து மகிழ்ச்சியுடன் தாயிடம் சோங்மி பகிர்ந்துகொள்கிறார்.

“ நான் நிஜமாகவே என் அம்மாவுடன் வாழ்கிறேன்” என்று சிரித்தப்படியே சோங்மி கூறுகிறார்.

கூடுதல் தகவல், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்- ஹோசு லீ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: