You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கௌதம் கம்பீர்: இந்தியாவின் 'சாதனை வீரர்' தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது ஏன்?
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, பிபிசி இந்தி
இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை பேட்ஸ்மென்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதன் காரணமாகவே, ஏராளமான தலைசிறந்த பேட்ஸ்மென்களை இந்திய அணி பெற்றுள்ளது.
லாலா அமர்நாத் முதல் விஜய் மஞ்ச்ரேக்கர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை இந்தியா வழங்கியுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவாக இருந்தது. தற்போது வரை அதற்கு இணையாக எந்த மிடில் ஆர்டரையும் குறிப்பிட முடியாது.
ராகுல் டிராவிட் 3வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்திலும், சௌரவ் கங்குலி 5வது இடத்திலும், விவிஎஸ் லட்சுமண் 6வது இடத்திலும் களமிறங்குவார்கள்.
இதுமட்டுமின்றி, அதிரடியான தொடக்க ஜோடியான வீரேந்திர சேவாக்கும் மற்றும் கௌதம்தம் கம்பீரும் வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
கிரிக்கெட் ஆடுகளத்தில் அவர்களின் மகத்தான சாதனைகளைப் பலரும் புகழ்ந்தனர். இவற்றைப் பற்றி பெரிய புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன.
ஆனால், இத்தனைக்கும் நடுவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத வீரர் கெளதம் கம்பீர் என்பது பல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
கடந்த 2011 உலகக்கோப்பை வெற்றியில் அவரின் முக்கியமான பங்கு, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற இடத்தைப் பெற்றது என கம்பீரின் சாதனைகள் பெரும்பாலும் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவதில்லை.
கௌதம் கம்பீரின் தொடக்க நாட்கள்
நவம்பர் 2004இல், கம்பீர் தனது இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 91 ரன்கள் எடுத்து ஓர் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார்.
அடுத்த மாதமே, வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் அது. அந்தப் போட்டிக்குப் பிறகு கம்பீரை பேட்டி காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கிரிக்கெட், அணி மற்றும் நாடு பற்றிய தனது உணர்வுகளை அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பீர் புதியவர் என்றாலும், அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இந்திய அணியை இரண்டாவது இடத்தில் பார்க்க அவர் விரும்பவில்லை.
அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 அரைசதங்கள் அடித்து இந்திய இன்னிங்ஸுக்கு வலுவான தொடக்கத்தைத் தந்தார். கடினமான சூழ்நிலையிலும் கடினமான சவால்களை அளிக்கக் கூடிய ஒரு பேட்ஸ்மேனாக கம்பீர் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தைப் பிடித்த கம்பீர்
கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில், கம்பீரின் கிரிக்கெட் பயணம் வேகம் பெற்றது. இலங்கைக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் அவர் 310 ரன்கள் எடுத்தார். இதில் அவரின் சராசரி 51. தன்னால் நிலைத்து நின்று விளையாட முடியும் என்பதை அவர் நிரூப்பித்தார்.
அடுத்தடுத்த ஐந்து தொடர்களில், டெஸ்டில் கம்பீரின் சராசரி 77, 90, 89, 94 மற்றும் 69 என்று இருந்தது. பின்னர் 12 போட்டிகளில் 1,750 ரன்களுக்கு மேல் குவித்தார். இதில் 8 சதங்கள், 5 அரை சதங்களும் அடங்கும்.
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், குமார் சங்ககாரா போன்ற பேட்ஸ்மேன்களை பின்னுக்குத் தள்ளி, ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 இடத்தை கம்பீர் பிடித்தார்.
அவர் முதல் இடத்தைப் பிடித்தார் என்று சொல்வதைவிட ஆதிக்கம் செலுத்தினார் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் அவர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சதம் அடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி 2010 ஜனவரியில் நடந்த மிர்பூர் டெஸ்டில், ஒட்டுமொத்த உலகின் பார்வையும் கௌதம் கம்பீர் மீது பதிந்திருந்தது. காரணம், மேலும் ஒரே ஒரு சதம் அடிப்பதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவன் பிராட்மேனின் 75 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவர் முன்னால் இருந்தது.
டெஸ்டில் தொடர்ந்து 6 சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை பிராட்மேன் படைத்திருந்தார். அந்த சாதனையை சமன் செய்வதற்கு கம்பீருக்கு மேலும் ஒரு சதம் மட்டுமே தேவைப்பட்டது. மிர்பூர் டெஸ்டில் நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதத்தைக் கடந்தார்.
எனினும் 68 ரன்கள் அடித்திருந்தபோது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷஃபியுல் இஸ்லாம் வீசிய பவுன்சரில் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால், இங்கு சதம் என்ற கேள்வியே எழவில்லை. இதன் மூலம் பிராட்மேனின் வரலாற்று சாதனை முறியடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் நம்பர் ஒன் தொடக்க ஜோடி
கம்பீர், வீரேந்திர சேவாக்குடன் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் நம்பர் ஒன் தொடக்க ஜோடியை உருவாக்கினார். இருவரும் 87 இன்னிங்ஸ்களில் 52.52 சராசரியில் 4,412 ரன்கள் எடுத்தனர்.
இந்தக் காலகட்டத்தில், சேவாக்-கம்பீர் ஜோடி 11 சதங்களை அடித்து சுனில் கவாஸ்கர்-சேதன் சௌஹானின் 10 சத பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்தது. இருவரும் ஜோடி சேர்ந்து 25 அரை சதங்களை அடித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக அவர்கள் மாறினர்.
தனது டெஸ்ட் வாழ்க்கையில், கம்பீர் 58 போட்டிகளில் 41.95 சராசரியுடன் 4154 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒன்பது சதங்களும் அடங்கும். 147 ஒருநாள் போட்டிகளில் 39.68 சராசரியில் 5,238 ரன்கள் எடுத்துள்ளார். டி20யிலும் கம்பீர் வெற்றிகரமான வீரராக இருந்திருக்கிறார். அவர் 251 டி20 போட்டிகளில் விளையாடி 6,402 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இதன் மூலம் கம்பீர் கிரிக்கெட்டை மூன்று வடிவங்களிலும் தன்னை ஒரு வெற்றிகரமான வீரராக நிரூபித்திருக்கிறார்.
உலகக்கோப்பை வெற்றியில் கம்பீரின் பங்கு
கம்பீரை பற்றிப் பேசும்போது 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல கம்பீர் உதவினார்.
அதேபோல், 2011 உலகக் கோப்பையை அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணமாகக் கூறலாம். அந்த உலகக் கோப்பையைப் பற்றி நினைக்கும்போது இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸர்தான் முதலில் நம் நினைவுக்கு வரும்.
இந்திய அணியின் ஒப்பற்ற வெற்றியில் அந்த சிக்ஸருக்கும் பங்கு உள்ளது. ஆனால், கம்பீர் அடித்த 97 ரன்கள் அந்த சிக்ஸரைவிட பெரியது. இலங்கை 275 எடுத்த நிலையில், இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் இருந்தது. ஆனால் கம்பீர் கோலியுடனும் தோனியுடனும் அற்புதமான பார்ட்னர்ஷிப்களை அமைத்து வெற்றிக்கு வித்திட்டார்.
கம்பீர் 122 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடி தனது அணியுடன் உலக சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றார்.
கம்பீரின் சாதனைகளைப் பாராட்டும் அதே நேரத்தில் மூர்க்கமான அவர் சில நேரங்களில் எல்லை மீறுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.
கம்பீரை தொடரும் சர்ச்சைகள்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கௌதம் கம்பீர், சில வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியை தோனி என்ற ஒரே ஒரு வீரருக்கு வழங்குவது தவறானது. இது அவரை முன்னிலைப்படுத்தி பிற வீரர்களை பின்னுக்கு தள்ளுகிறது என்று கம்பீர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இரண்டு உலகக் கோப்பைகளிலும் சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் தான் உண்மையான ஹீரோ என்றார்.
அடுத்த பேட்டியில், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரின் பங்களிப்பையும் அவர் நினைவுபடுத்தினார். உண்மையில், கம்பீர் 'நாயக வழிபாட்டுக்கு' எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.
சமீபத்தில், முகமது கைப்புடன் கம்பீர் கருத்து மோதலில் ஈடுபட்டார். உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன், கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
இது குறித்து கைஃப் கூறும்போது, ராகுல் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லையே தவிர ஃபார்ம் காரணமாக அல்ல, எனவே அவர் உடல்தகுதி அடையும்போது நம்பர் ஒன் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருப்பார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இஷான் கிஷண் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரையே தேர்வு செய்ய வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார்.
கம்பீரின் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் கடுமையான பேச்சுகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுகிறார்.
விராட் கோலியுடனான மோதல்
கருத்து மோதல் மட்டுமில்லாமல் களத்திலும் கடுமையான சர்ச்சைகளில் கம்பீர் சிக்கியிருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் நடந்த சர்ச்சைதான் அதிகம் பேசப்பட்டது.
லக்னௌ-பெங்களூரு இடையிலான போட்டியில், போட்டி முடிந்து லக்னௌ வீரர்களிடம் கோலி ஏதோ சொல்ல வந்தபோது, கம்பீர் அவரை நோக்கி நகர்ந்து, 'என்ன விஷயம் சொல்லுங்க?' என்று கூறியுள்ளார்.
அதற்கு, 'நான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை' என்று கோலி தெரிவித்தார். அதற்கு, அணி தனது குடும்பம் போன்றது என்பதால் அணியை பற்றிப் பேசுவது என்பது தன்னைப் பற்றி பேசுவது போல என கம்பீர் கூறினார்.
இந்தியாவின் இரு பெரிய வீரர்கள் குழந்தைகளைப் போல் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நிச்சயமாக அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதல்ல.
அஃப்ரிடி உடனான மோதல்
பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடியுடனும் கம்பீருக்கு பழைய தகராறு உள்ளது.
கான்பூரில் 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இரு வீரர்களுக்கும் இடையே கடும் அனல் பறந்தது. சமீபத்தில், கம்பீரை பற்றி அஃப்ரிடி தனது புத்தகத்தில், அவர் ஒரு சாதாரண வீரர் என்றும் அவரது சாதனைகள் எதுவும் சிறப்புக்குரியது இல்லை என்றும் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக ட்வீட் செய்த கம்பீர், “வயதை நினைவில் கொள்ள முடியாத ஒரு வீரர் எனது சாதனைகளை எப்படி நினைவில் கொள்வார். ஆனால் 2007 டி20 இறுதிப் போட்டியில் கம்பீர் 75 ரன்கள் எடுத்தார், அஃப்ரிடி பூஜ்ய ரன் மட்டுமே எடுத்தார். உலகக் கோப்பையை இந்தியா வென்றது,” எனக் குறிப்பிட்டார்.
கம்பீர் சில ரசிகர்களை நோக்கி நடுவிரலைக் காட்டுவது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.
சில பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் அதற்கு பதிலடியாகத்தான் அவ்வாறு செய்ததாகவும் கம்பீர் கூறினார்.
உண்மையில், கிரிக்கெட் களத்தில் கம்பீர் ஒரு துணிச்சலான மூர்க்கமான வீரராகக் கருதப்படுகிறார்.
நிஜ வாழ்க்கையிலும் அவர் வெளிப்படையாகப் பேசுகிறார், இது குறித்து கலவையான கருத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தான் 'தனிநபர் துதிபாடலுக்கு' எதிரானவர் என்று கம்பீர் கூறுவது போலவே, அவரது அறிக்கைகளும் அவரை பிரபலமாக்குவதைவிட இந்திய கிரிக்கெட்டில் எந்தளவுக்குப் பயனடைகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. குறைந்தபட்சம் கம்பீர் மட்டுமாவது அப்படி நம்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்