அதானி நிறுவன சி.இ.ஓ.வாக இருந்தவர் 54 வயதில் திடீரென மசாலா கம்பெனி தொடங்கியது ஏன்?

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

2020-ம் தேதி மார்ச் 14

இந்தோனேஷியாவில் பெருநிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த 54 வயதான அவர், அதே நிறுவனம் தென் அமெரிக்காவில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் புரொஜெக்டிற்காக (Anthracite Project) பெரு நாட்டிற்கு செல்லும் வழியில் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார்.

புதிய புராஜெக்டில் சேரும் முன்பாக, தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக, சென்னை வந்திறங்கிய அவர் அதன் பிறகு, தான் இதுகாறும் பணிபுரிந்து வந்த இந்தோனேஷியாவுக்கோ அல்லது புதிய புராஜெக்டிற்காக பெருவுக்கோ செல்லவே இல்லை.

தாய், தந்தையரிடம் ஆசி பெற சென்னை வந்திறங்கிய அவரை கொரோனா இங்கேயே சில காலம் கட்டிப்போட, அந்த காலகட்டத்தில் நடந்தேறிய சில நிகழ்வுகள் அவரது எண்ண ஓட்டத்தை அடியோடு மாற்றிவிட்டன; அவரது வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப் போட்டுவிட்டன.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவில் இருந்து மீண்டு முந்தைய வாழ்க்கைக்கு திரும்பினாலும் கூட, அவர் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பவே இல்லை. அதற்குக் காரணம் என்ன? அவரது சிந்தனையை அடியோடு மாற்றிய அந்த நிகழ்வுகள் என்ன? 54 வயதை எட்டிவிட்ட அவர், அதன் பிறகு என்ன செய்தார்? தற்போது என்ன செய்கிறார்?.

சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் கணேசன் வரதராஜன். எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளரான அவர், இந்தியாவில் பல நிறுவனங்களில் பணிபுரிந்த பின்னர், 1999-ம் ஆண்டு இந்தோனேஷியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அதானி நிறுவனத்தின் இந்தோனேஷியப் பிரிவு சி.இ.ஓ. உள்பட பல நிறுவனங்களின் உயர் பொறுப்பு வகித்துள்ள அவர் அங்கேயே சுமார் 22 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். பெட்ரோ கெமிக்கல்ஸ், பாலியஸ்டர், சிமெண்ட், நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணிபுரிந்துள்ளார்.

இந்தோனேஷியாவில் தான் பணிபுரிந்த நிறுவனம், தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் ஆலையின் பொறுப்பேற்க 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் புறப்பட்டுள்ளார். பெரு சென்று புதிய பணியில் சேரும் முன்பாக தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் சொந்த ஊரான சென்னை வந்துள்ளார். அப்போதுதான் கொரோனா வடிவில் அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது.

சீனா தொடங்கி உலகின் பிற நாடுகளையும் முடக்கிய கொரோனா வைரஸ் பரவலின் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பொது முடக்கம் அமலுக்கு வந்தது. விமானங்கள் மட்டுமல்ல, ரயில், பேருந்து, கார், இரு சக்கர வண்டிகள் என எந்தவொரு வண்டியும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடந்து கூட வீட்டை விட்டு வெளியே செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய உலகளாவிய நெருக்கடியில் அவரும் ஒருவராக சென்னையில் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போக நேரிட்டது.

வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த இந்த கால கட்டம்தான் தன் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டதாகக் கூறுகிறார் கணேசன் வரதராஜன். அந்த கால கட்டத்தில் தன்னைச் சுற்றிலும் நடந்த மற்றும் கேள்விப்பட்ட நிகழ்வுகள் தன் எண்ண ஓட்டத்தையும் சிந்தனையையும் அடியோடு மாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

யாரும், எங்கும் செல்ல முடியாதபடி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த அந்த கால கட்டத்தில், இந்தோனேஷியாவில் அவருடன் பணிபுரிந்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஓரிருவரும் அடங்குவர். இந்தோனேஷியாவில் உயிரிழந்த அவர்களின் உடலைக் கூட இந்தியாவில் சொந்த ஊருக்குக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது. உறவுகளின் முகத்தை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியாத குடும்பத்தினர் ஜூம் கால் (Zoom) மூலமாக இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர். இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை கணேசன் வரதராஜனே முன்னின்று நடத்தியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் அவர் இடம்பெற்றிருந்த குழுக்கள் பலவற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்களை பகிர்வது நின்றுபோய், உடல் ஆரோக்கியம் குறித்த பகிர்வுகளையே அதிகம் பார்க்க முடிந்துள்ளது. அவ்வாறு வந்த வாட்ஸ்அப் பகிர்வுகளில் ஒன்றே கணேசன் வரதராஜனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

இந்தியாவில் அகால மரணங்களும் Years of life lost (YLL), முழு ஆரோக்கியத்தை இழந்து, நிரந்தர உடல்நலப் பிரச்னைகளுடன் வாழ்வதும் Disability-adjusted life years (DALYs) அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும், மத்திய சுகாதாரத்துறை தரவுகளை சுட்டிக்காட்டி அதில் செய்தி இருந்துள்ளது.

"அந்த செய்தியைப் படித்த போது அதிர்ந்து போனேன். நானும் என் நண்பர்களும் அதுகுறித்த விவரங்களை சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்தோம். அப்போதுதான் ஒரு விஷயம் புலப்பட்டது. உணவு என்பது இந்தியாவுக்கு வெளியே வெறும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவற்றின் சேர்க்கைதான். ஆனால், இந்தியாவிலோ கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உணவே மருந்து என்பதே பாரம்பரியமாக நடைமுறையில் இருக்கிறது.

அந்த பாரம்பரிய வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே இன்றைய பிரச்னைகளுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தோம். அதாவது, உணவு விஷயத்தில் இந்தியர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் உள்ள வேறுபாடு மசாலாதான். உண்மையில், தமிழர் பாரம்பரிய வழக்கப்படி இதனை மசாலா என்று கூட குறிப்பிடக் கூடாது. மணமூட்டிகள் என்றே சொல்ல வேண்டும்.

நாம் சமையலில் பயன்படுத்தும் அந்த மசாலாவில் ஏற்பட்ட மாற்றமே இன்று நாம் சந்திக்கும் உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம் என்பதை எங்களது ஆய்வில் கண்டுபிடித்தோம். கொரோனா காலத்தில் எங்களைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும், நெருங்கியவர்களுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களும் எங்களது எண்ண ஓட்டத்தையும், சிந்தனையையும் அடியோடு மாற்றிவிட்டன." என்று அவர் கூறுகிறார்.

"செல்களின் தகவல் பரிமாற்றமே உடல் இயக்கத்திற்கு அடிப்படை"

"மனித உடல் 40 டிரில்லியன் செல்களாலானது. மொத்தம் 5 வகை செல்களே இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற 80 உடல் உறுப்புகளை உருவாக்குகின்றன. தாயின் வயிற்றில் மனிதன் கருவாக உருப்பெறும் போதே ஒவ்வொரு செல்லின் பணியும் தீர்மானிக்கப்பட்டுவிடும். ஒரு செல் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே வேலையை மட்டுமே செய்யும்.

அத்தகைய செல்களின் ஒருங்கிணைப்பிற்கும், சரியான செயல்பாட்டிற்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். என்சைம்கள், புரதங்களை பரிமாறிக் கொள்வதன் வாயிலாக செல்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இந்த என்சைம்கள் மற்றும் புரதங்களை உருவாக்கும் மரபணுக்கள் தொடர்ந்து சரியாக செயல்பட வேண்டியது அவசியம்.

உணவில் சேர்க்கும் மசாலாவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு?

"மரபணுக்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ அல்லது தவறாகவோ என்சைம்கள், புரதங்களை உற்பத்தி செய்யும் போது செல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. அதுவே, உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையவோ அல்லது செயலிழக்கவோ காரணமாகிறது. இதையே, நாம் இதய அடைப்பு, புற்றுநோய், நீரிழிவு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

செல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிரச்னையே நமக்கு வரும் மோசமான நோய்களுக்குக் காரணம். நாம் உணவில் சேர்க்கும் மணமூட்டிகள் இந்த வகையில்தான் நம் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன.

செல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு மணமூட்டிகள் உதவுகின்றன. மணமூட்டிகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் (Phytochemicals) மரபணுக்களைத் தூண்டி, செல்களின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் என்சைம்கள், புரதங்கள் உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. அந்த மணமூட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் பாரம்பரிய பழக்கமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்திருந்தது" என்று கணேசன் வரதராஜன் விளக்கம் அளிக்கிறார்.

"அரோமேட்டிக், அலிஃபேட்டிக் என 2 வகை மணமூட்டிகள் உண்டு"

"ஒவ்வொரு மணமூட்டியிலும் உள்ள பைட்டோகெமிக்கல்சை கண்டறிந்து, அதற்கேற்ப மணமூட்டிகளை சரியான கலவையில் சேர்த்து பயன்படுத்தி வந்தோமானால் மோசமான நோய்கள் நம்மை அணுகாது. அந்த மணமூட்டிகளிலும் நிலத்திற்கு அடியில் அதாவது தாவரத்தின் வேரில் இருந்து கிடைப்பவை (Aromatic) மற்றும் தாவரத்தின் மேற்பாகத்தில் இருந்து கிடைப்பவை (Aliphatic) என்று 2 வகை மணமூட்டிகள் உண்டு.

வேரில் இருந்து கிடைப்பவற்றுக்கு எடுத்துக்காட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவை. தாவரத்தின் மேற்பாகத்தில் இருந்து கிடைக்கும் மணமூட்டிகளுக்கு எடுத்துக்காட்டு, மிளகு, ஏலக்காய், சீரகம் போன்றவை. வேரில் இருந்து கிடைக்கும் மணமூட்டிகளில் குறைந்த பைட்டோகெமிக்கல்சே இருக்கும். சூரிய ஒளி படாமல் பூமிக்கடியில் படர்ந்திருப்பதே அதற்குக் காரணம். அவை விரைவிலேயே திறனை இழந்தும் போகும். வெங்காயம், இஞ்சி போன்றவற்றை வெளியே வைத்தால் காய்ந்து போவது அதன் வெளிப்பாடே. ஆகவேதான், நம் முன்னோர்கள் தாவரத்தின் வேரில் கிடைப்பவற்றை தினசரி வாங்கி அரைத்து சமையலுக்குப் பயன்படுத்தினார்கள்.

ஆனால், தாவரத்தின் மேற்பாகத்தில் இருந்து கிடைக்கும் மணமூட்டிகள் காய்ந்து போனாலும் நீண்ட நாட்கள் பைட்டோகெமிக்கல்சை தக்க வைத்திருக்கும். அவற்றை பொடியாக்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து சமையலுக்கு முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். சுருக்கமாக, அம்மிக்குச் செல்லும் மணமூட்டிகளை அரோமேட்டிக், உரலுக்குச் செல்லும் மணமூட்டிகளை அலிஃபேட்டிக் என்று அழைக்கலாம்." என்கிறார் அவர்.

சமையலில் ஏற்பட்ட மாற்றமே நோய்கள் அதிகரிக்கக் காரணம்"

"சமையலுக்குத் தேவையான இந்த மசாலாக்களை அன்றன்றைக்கு தயாரித்து பயன்படுத்தும் வரை பிரச்னையில்லை. 10 - 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட சமையலுக்குத் தேவையான மசாலாக்களை வீட்டிலேயே மக்கள் தயார் செய்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று அந்த நிலை மாறி பெரும்பாலானோர் கடைகளில் கிடைக்கும் மசாலாக்களையே பயன்படுத்துகின்றனர்.

வீட்டில் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தும் அந்த மசாலா பாக்கெட்டுகளின் பின்புறம், அதில் கலந்துள்ள பொருட்கள் என்னவென்று பார்க்கையில் அதிர்ந்து போனேன். காரணம், மேற்சொன்ன இரு வகை மணமூட்டிகளுமே அதில் ஒன்றாக கலந்துள்ளன. ஒரிரு நாட்களில் செயல் திறனை இழந்துவிடக் கூடிய அரோமேட்டிக் பொருட்களான வெங்காயம் போன்றவையே மிகுதியாக அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

நீண்ட நாட்கள் செயல்திறனுடன் இருக்கக் கூடிய அலிஃபேட்டிக் மணமூட்டிகள் வெறுமனே பெயரளவிற்கே அதில் உள்ளன. இந்த மசாலாக்களை சேர்ப்பதால், உணவே மருந்து என்ற நம்முடைய பாரம்பரியமே அடிபட்டுப் போய்விடுகிறது. நாமும் நோய்களுக்கு ஆட்படுகிறோம்" என்பது அவரது கருத்து.

"பிரச்னை என்னவென்று தெரிந்த பின் பேசாமல் எப்படி வேடிக்கை பார்ப்பது?"

உடல் இயக்கம் எப்படி நடக்கிறது? அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொண்ட பிறகு எப்படி பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கிறார் கணேசன் வரதராஜன்.

"13 மணமூட்டிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவற்றில் என்னென்ன பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளன? நம் உடல் ஆரோக்கியத்தில் அவற்றின் பயன் என்ன? என்பதை பட்டியலிட்டோம்.

பின்னர், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய்களுக்குக் காரணமான செல்லியக்க பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும் வகையில் இந்த மணமூட்டிகளை சரியான கலவையில் சேர்த்தோம். அந்த கலவையை ஜீப்ரா மீனுக்குக் (Zebra fish) கொடுத்து ஆய்வு செய்தோம். 30 மீன்களுக்கு சாதாரண மீன் உணவும், 25 மீன்களுக்கு நாங்கள் உருவாக்கிய கலவையின் சாற்றையும் கொடுத்து வந்தோம்.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த மீன்களை வெளியே எடுத்து பகுப்பாய்வு செய்து பார்த்த போது நாங்கள் உருவாக்கிய கலவையை எடுத்துக் கொண்ட மீன்களுக்கு இதய நோய் போன்ற பிரச்னைகள் வருவது 4 முதல் 6 மடங்கு குறைவாக இருந்தது தெரியவந்தது. சுமார் 8 மாதங்கள் நீடித்த ஆய்வில் எங்கள் கலவையை படிப்படியாக மெருகேற்றிக் கொண்டோம். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிய சான்றிதழையும் பெற்றுக் கொண்டோம்.

மக்களை இன்று பாடாய்படுத்தும் உடல்நலப் பிரச்னைகள் இனி யாரையும் பெரிய அளவில் பாதிக்காத வகையில் தடுப்பதற்கான தீர்வும் எங்களிடம் இப்போது இருக்கிறது. அதனை மக்களிடம் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது? என்று நாங்கள் விவாதித்தோம்" என்கிறார் அவர்.

54 வயதில் மசாலா கம்பெனி தொடங்க தீர்மானித்தது ஏன்?

"மசாலா தயாரிக்கும் போது அதில் சேர்க்கப்படும் மணமூட்டிகளின் தன்மையோ, திறனோ கொஞ்சமும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதன் காரணமாக, தற்போதுள்ள மசாலா தயாரிப்பு ஆலை வடிவமைப்பை நாங்கள் நிராகரித்தோம். எங்கள் குழுவில் இருந்த மூவருமே பொறியாளர்கள் என்பதால், மணமூட்டிகளின் தன்மை மாறாமல் அதனை அப்படியே மசாலாவாக்க புதிய ஆலையை நாங்களே வடிவமைத்தோம். அதில் தேவையான மணமூட்டிகளை கொட்டினால், சரியான விகிதத்தில் சரியான கலவையில் கலக்கப்பட்டு நாம் விரும்பும் மசாலாவாக பாக்கெட்டுகளில் வெளியே வரும்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை தினசரி தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டு இந்த மசாலாவை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறையும். இதன் மூலம் இந்தியாவில் அகால மரணங்களையும் Years of life lost (YLL), முழு ஆரோக்கியத்தை இழந்து, நிரந்தர உடல்நலப் பிரச்னைகளுடன் வாழ்வதையும் Disability-adjusted life years (DALYs) கணிசமாக குறைக்க முடியும். அதுவே எங்களின் இலக்கு. அதற்காகத்தான், கொரோனாவுக்கு முன்பாக வெளிநாடுகளில் செய்து கொண்டிருந்த பில்லியன் டாலர் மெகா புராஜக்ட்களை கையாள்வதை விட்டுவிட்டு நாங்கள் இன்று மசாலா கம்பெனி தொடங்கியிருக்கிறோம்" என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.

புதிய நிறுவனம் தொடங்குவதில் சந்தித்த சவால்கள் என்னென்ன?

மசாலா கம்பெனி தொடங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதே மிகப்பெரிய சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் கணேசன் வரதராஜன். கொரோனா பேரிடருக்குப் பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு எளிதில் கடன் வசதி என்று மத்திய அரசு கூறினாலும் நடைமுறையில் அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அவர்.

பலவாறாக முட்டி, மோதியதன் எதிரொலியாக, பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறுகிறார். "8 மாதங்கள் ஆய்வு செய்ததன் முடிவில் கண்டுபிடித்த மணமூட்டி கலவைகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிய சான்றிதழும் பெற்றுவிட்டோம். அவற்றை பெரிய அளவில் தயாரிப்பதற்கான தரமான மூலதனப் பொருட்களை திரட்டுவதற்கு சுமார் ஓராண்டுகள் பிடித்தது." என்று அவர் கூறுகிறார்.

"தமிழ்நாட்டில் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் அனுமதி பெற முடிந்தது"

தமிழ்நாட்டில் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தன்னால் புதிய நிறுவனத்தை தொடங்க முடிந்திருப்பதாக கணேசன் வரதராஜன் பெருமையுடன் குறிப்பிட்டார். சிங்கிள் விண்டோ சிஸ்டம் எனப்படும் ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் வழியே முறையாக விண்ணப்பித்து தேவையான அனுமதிகளை பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.

அனுமதி தருவதற்காக யாரும் என்னிடம் லஞ்சம் கேட்கவே இல்லை என்று கூறும் கணேசன், கணினியை கையாள்வதில் அரசு அதிகாரிகளுக்கு போதிய தேர்ச்சி இல்லாததால் அனுமதியைப் பெறுவதில் சற்று தாமதமாகி விட்டதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிய நிறுவனம் தொடங்குவது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும், அதற்காக தாம் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நல்ல வேலையைவிட்டு தொழில் தொடங்க வீட்டில் ஆதரவு இருந்ததா?

வெளிநாட்டில் பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்பில் கைநிறைய சம்பாதித்து வந்த ஒருவர், ஓய்வு பெறும் காலத்தை நோக்கிப் பயணிக்கும் 54-வது வயதில், திடீரென வேலையை விட்டு தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத புதிய தொழிலை தொடங்கப் போவதாக கூறினால் உடனிருப்பவர்களே அவரை ஏற, இறங்கத்தான் பார்ப்பார்கள். இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று சிலர் பரிகாசம் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.

ஆனால், தனக்கு மனைவி, மகன் என ஒட்டுமொத்த குடும்பமும் ஆதரவாக இருந்ததாக கணேசன் வரதராஜன் கூறுகிறார். நம்மை உருவாக்கிய இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்ற என்னுடைய எண்ணங்களை குடும்பத்தினர் சரிவர புரிந்து கொண்டு உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

100 கி. பாட்டிலை விற்பது சவாலாக இருந்தது"

"நாங்கள் பொறியாளர்கள் என்பதால் மசாலா நிறுவனத்திற்காக புதிய ஆலையை நிறுவுவதோ, இயந்திரங்களை பொருத்துவதோ எங்களுக்குப் பிரச்னையாக இருக்கவில்லை. ஆனால், ஆலையில் தயாரான மசாலாப் பொருட்களை சந்தைப்படுத்துவது எங்களுக்கு சவாலாகவே இருக்கிறது. எங்கள் குழுவில் உள்ள அனைவருமே நிலக்கரி, உலோகங்கள் போன்றவற்றை கையாண்ட பெரிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களுக்கு 100 கி. பாட்டிலை முறையாக சந்தைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. தொடக்கத்தில் சற்று திணறித்தான் போனோம். சிலர் எங்களை ஏமாற்றவும் செய்தார்கள். அந்த சவால்களையெல்லாம் கடந்து வந்துவிட்டோம்.

மசாலாக்களின், மணமூட்டிகளின் மகத்துவத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கருப்பு மிளகிற்காக சுதந்திரத்தையே 200 ஆண்டு காலம் பிரிட்டனிடம் இழந்திருந்த நாடு இந்தியா. அது புரியாமல், சந்தையில் கிடைக்கும் மசாலாக்களை மக்கள் கண்மூடித்தனமாக எடுத்துக் கொள்கிறார்கள். இனியாவது மணமூட்டிகளின் மகத்துவத்தை உணர்ந்து, தரமானதாக தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறும் கணேசன் வரதராஜன், சமையலை ஆசையுடன் செய்யாதீர்கள், அக்கறையுடன் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: