You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெங்குமரஹாடா: தமிழ்நாடு அரசு ஒரு கிராமத்தையே காலி செய்ய திட்டமிடுவது ஏன்?
- எழுதியவர், ச. பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா என்ற மலைக்கிராமத்திலுள்ள மக்களை இடமாற்றம் செய்து, கிராமத்தை காலி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அங்குள்ள மக்கள் கிராமத்தை காலி செய்ய மறுக்கின்றனர். அரசின் திட்டம் என்ன? மக்கள் எதிர்ப்பது ஏன்?
தெங்குமரஹாடா மக்களின் மனநிலை என்ன?
ஈரோடு மாவட்ட எல்லையில் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய பகுதியில், தெங்குமரஹாடா மலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் அடர் வனம் சூழ மாயாற்றின் கரையில் இக்கிராமம் உள்ளது. ஆரோக்கியமான பல்லுயிர் பெருக்கச் சூழலை உடைய இந்த கிராமம், யானைகளின் வலசைப்பாதையாக உள்ளதுடன், மாயாற்றில் முதலைகளும், மற்ற வனத்தை விட அதிக அளவில் புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல காட்டுயிர்கள் உள்ளன.
கடந்தாண்டு எடுக்கப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில், இந்த கிராமத்தைச் சுற்றிய காட்டுப்பகுதியில் மட்டுமே, 33 புலிகள் இருப்பதாக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
1952ல் உருவான கிராமம்!
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின் வந்த கடுமையான உணவுப்பஞ்சத்தின் போது, கடந்த 1952ல் தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, நீலகிரியின் படுகர் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை காத்துக்கொள்வதற்காக அரசு, 100 ஏக்கர் நிலத்தை கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கியது. பின் மீண்டும் விளைநிலத்தின் பரப்பை அதிகரித்து, 500 ஏக்கர் வன நிலம் குத்தகையாக வழங்க அரசு உத்தரவிட்டது.
இந்த நிலத்தை குத்தகைக்கு பெற்றவர்கள், நிலத்தில் கூலி வேலை செய்வோர் என, பலரும் தெங்குமரஹாடாவில் குடியேறி, இன்று 497 குடும்பங்கள் இந்த கிராமத்தில் உள்ளன.
கிராமத்தை காலி செய்ய திட்டம்!
இப்படியான நிலையில், காட்டுயிர்கள் அதிகம் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை முற்றிலுமாக வனப்பகுதியாக மாற்ற திட்டமிட்ட கோவை மாவட்ட வனத்துறை, கடந்த 2011ல் குத்தகையாக வழங்கிய நிலத்தை திரும்பப்பெற்று இங்குள்ள மக்களை இடமாற்றம் செய்து, கிராமத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்ய, கோவை வனத்துறையினர் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கான பணிக்காக வனத்துறை மற்றும் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழுவினர், இங்குள்ள மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தியிருந்தனர்.
இதில், மக்கள் சிலர் கிராமத்தை காலி செய்ய ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 497 குடும்பங்களுக்கும் தலா, 15 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், 74.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டது. அரசுக்கும் இதற்கான பரிந்துரை, 2022 அக்டோபரில் அனுப்பியது.
இப்படியான நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிராமத்தினரை இடமாற்றம் செய்ய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தேசிய வன இழப்பீடு நிர்வாக நிதியில் தான் பணம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, ‘‘தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். அந்த நிதியை, இரண்டு மாதங்களில், தமிழக வனத்துறை தலைமை பாதுகாவலருக்கு ஒதுக்க வேண்டும். அந்த தொகையை, கிராமத்தினருக்கு வழங்கி, ஒரு மாதத்தில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,’’ என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, அக்டோபர் 10ல் அறிக்கை அளிக்கவும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இப்படியான நிலையில், தெங்குமரஹாடா மக்கள் மாறுபட்ட கருத்தை தெரிவிப்பதுடன், ’கிராமத்தை காலி செய்தால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்,’ என பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மக்களின் மாறுபட்ட மனநிலை மற்றும் பழங்குடியினரின் கோரிக்கைகளால், தெங்குமரஹாடா காலி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
கிராம மக்களின் மனநிலை என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய தெங்குமரஹாடா ஊராட்சித்தலைவர் சுகுணா, ‘‘இங்குள்ள மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து பழகிவிட்டனர். இங்குள்ளவர்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்த பணியும் தெரியாது. இங்கு வேலையில்லாத மக்கள் பலரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றியும், கால்நடைகள் வளர்த்தும் தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்கின்றனர்,’’ என்றார்.
தனி ஊராட்சியாக மாற்றக் கோரிக்கை
மேலும் தொடர்ந்த அவர், ‘‘தற்போது, இங்குள்ளவர்களை இடமாற்றம் செய்து, ஈரோடு பவானிசாகர் பேரூராட்சியில் சேர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால், இங்குள்ள மக்களை பேரூராட்சி பகுதியில் சேர்த்தால், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி கூட கிடைக்காத நிலை ஏற்படும். இங்குள்ள மக்களை இடமாற்றம் செய்ய தலா, 15 லட்சம் ரூபாயை அரசு நிர்ணயித்துள்ளது. பணத்தை வைத்துக்கொண்டு மக்கள் என்ன செய்ய முடியும். 5 சென்ட் இடத்துடன் கூடிய வீடு மற்றும் 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். எங்களை பவானிசாகர் பேரூராட்சியில் சேர்ப்பதற்கு பதிலாக வேறு ஊராட்சியில் சேர்க்க வேண்டும். அல்லது, ஈரோடு மாவட்ட பகுதிக்குள் தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், இங்குள்ள மக்கள் நிச்சயம் கிராமத்தை காலி செய்ய மாட்டார்கள்,’’ என்றார்.
கிராமத்திலுள்ள வசதிகள் குறித்து தொடர்ந்த ஊராட்சித்தலைவர் சுகுணா, ‘‘தெங்குமரஹாடா கிராமத்தில், உயர்நிலைப்பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம், வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. மாயாற்றை பரிசலில் கடந்து தான் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அள்ளி மாயார் மக்கள் பேருந்து வசதி பெறுகின்றனர். காலை 7:00 மணிக்கு தெங்குமரஹாடாவில் இருந்து புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு திரும்ப வரும் வகையில் ஒரு பேருந்து மற்றும் மதியம் 1:30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு இரவு, 9:15 மணிக்கு தெங்குமரஹாடாவுக்கு திரும்ப வரும் வகையில் பேருந்து வசதி உள்ளது. ஆனால், பேருந்து வசதியை பெற தெங்குமரஹாடா மக்கள் 1 கிலோ மீட்டரும், கல்லாம்பாளையம் மற்றும் அள்ளி மாயார் மக்கள், 4 – 5 கிலோ மீட்டர் வரையில் நடக்க வேண்டியுள்ளது. இப்படியான நிலையில், தெங்குமரஹாடா கிராமத்தை காலி செய்தால், பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்,’’ என்றார்.
“பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்து அரசு உறுதி அளிக்கவில்லை”
பழங்குடியினரின் கோரிக்கைகள் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தெங்குமரஹாடா முன்னாள் கவுன்சிலர் பொம்மன், ‘‘நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா ஊராட்சிக்கு அருகே, அள்ளி மாயார், கல்லாம்பாளையம் மேலூர் மற்றும் கீழூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றில், 260 குடும்பங்களாக, 400க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் உள்ளனர்.
இவர்களுக்கான மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு தெங்குமரஹாடா கிராமத்தை நம்பியே உள்ளது. தெங்குமரஹாடாவை காலி செய்தால் அங்குள்ள பள்ளி, மருத்துவ வசதி என எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல், பழங்குடியின மக்கள் அகதிகளாக மாறிவிடுவார்கள். தெங்குமரஹாடா கிராம மக்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், பழங்குடியின மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தருவார்கள் என்பது குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு மாயார் ஆற்றை கடக்க பாலம் அமைத்துக்கொடுத்தால் போதும் எளிதாக மருத்துவம், கல்வி மற்றும் இதர வசதிகளை பெற்று நிம்மதியாக வாழ்வோம். எங்களின் கோரிக்கைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
“நாங்கள் வெளியேற மாட்டோம்”
பிபிசி தமிழிடம் பேசிய தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் போஜராஜன், ‘‘பல ஆண்டுகளாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் கட்டணம் செலுத்தி பெற்ற குத்தகை இடத்தில், இங்குள்ள விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு, 40 ஏக்கரில் வீடுகள் அமைத்துக்கொடுத்துள்ளோம். கூட்டுறவு சங்கத்தில் மொத்தமாக, 141 நில குத்தகைதாரர்கள் உள்ளோம்.
இங்குள்ள விவசாய கூலித்தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திவிட்டு, அவர்களில் சிலர் கூறியதை வைத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா, 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த இடத்தை உருவாக்கிய எங்களின் கருத்துக்களை கேட்கவே இல்லை. தெங்குமரஹாடா கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். எங்களுக்கு மாயாற்றை கடக்க பாலம் அமைத்துக்கொடுத்தால் போதும். வனவிலங்குகள் தெங்குமரஹாடாவில் இருந்தாலும், இதுவரை பெரிய அளவில் வனக்குற்றமோ, வன விலங்குகள் தாக்கி யாருக்கும் பாதிப்புகளும் ஏற்பட்டது இல்லை,’’ என்றார்.
அரசு அதிகாரிகள் சொல்வதென்ன!
பழங்குடியினர் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கருத்துகள் குறித்து கேட்ட போது, பிபிசி தமிழிடம் பேசிய குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், ‘‘தெங்குமரஹாடாவில் இருந்து பழங்குடியின மக்களை வெளியேற்றுவதற்கு அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி மற்றவர்களை வெளியேற்ற வனத்துறைக்கு நாங்கள் உதவுகிறோம். பாலம் கட்டுவது, பழங்குடியினரின் கோரிக்கைகள் எல்லாம் வேறு பிரச்சினை,’’ எனக்கூறி, அழைப்பை துண்டித்தார்.
முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், ‘‘தற்போது, நாங்கள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தெங்குமரஹாடா கிராமத்தை காலி செய்ய திட்டமிட்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மாறிவிடும். இங்குள்ள மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் குறித்தெல்லாம் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்,’’ என, சுருக்கமாக தெரிவித்தார்.
இடமாற்றம் தொடர்பாக பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, ‘‘தெங்குமரஹாடாவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு இடம் வழங்க, பவானிசாகர் அருகே இடம் உள்ளது. இவர்களை இடமாற்றம் செய்வது குறித்தும், இந்த இடத்தை வழங்குவது குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். பேரூராட்சியில் சேர்ப்பதா, அல்லது ஊராட்சியில் இந்த மக்களை சேர்ப்பதா என்பது குறித்தெல்லாம் அரசு முடிவெடுக்க வேண்டும். தெங்குமரஹாடா மக்களின் கோரிக்கைகள், அவர்களது நிலைப்பாடு குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
‘நம்பி ஏமாறாமல் இருக்கணும்’
பிபிசி தமிழிடம் பேசிய மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பரமசிவம், ‘‘கோவை மாவட்ட ஆனைமலை ஒன்றியம், அங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட களிம்புத்தண்ணி ஊற்று பகுதியில், விவசாயம் செய்து வந்த 110 பழங்குடியின குடும்பங்களை மாவட்ட நிர்வாகம், 2013ல் இடமாற்றம் செய்தது. அங்கலக்குறிச்சியில் ஜே.ஜே நகரை உருவாக்கி தலா, 1 சென்ட் இடத்தில் மிகச்சிறிய தொகுப்பு வீடு கட்டிக்கொடுத்தது. விவசாயம் செய்ய மாற்று இடமோ, வேறு சலுகைகளையோ வழங்கவில்லை. அரசின் கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி வெளியேறிய பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை காக்க எதையும் செய்யாமல் அரசு அவர்களை கைவிட்டுள்ளது.
களிம்புத்தண்ணி ஊற்றில் விவசாயம் செய்து வந்த அவர்கள் தற்போது, தூய்மை பணியாளர்களாகவும், கூலித்தொழிலாளியாகவும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தெங்குமரஹாடாவில் பழங்குடியின மக்களோ அல்லது பிற சமூகத்தை சேர்ந்தவர்களோ, அரசின் கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும். உண்மையில் கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே வெளியேற பரிசீலிக்க வேண்டும்,’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்