டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 போட்டிகளை ஐசிசி தீர்மானித்தது எப்படி? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 போட்டிகளை ஐசிசி தீர்மானித்தது எப்படி? எளிய விளக்கம்
டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 போட்டிகளை ஐசிசி தீர்மானித்தது எப்படி? எளிய விளக்கம்

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. முன்னதாக, லீக் சுற்றில் நான்கு பிரிவுகளிலும் முதல் இரு இடங்கள் பிடித்த அணிகள் இந்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. குரூப் ஏவில் இந்தியாவும், குரூப் பியில் ஆஸ்திரேலியாவும், குரூப் சியில் ஆப்கானிஸ்தானுக்கு குரூப் டியில் தென்னாப்பிரிக்கவும் முதல் இடம் பெற்றன.

தற்போது சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளில் தலா நான்கு அணிகள் உள்ளன. சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இப்போது முக்கிய கேள்வி என்னவென்றால், குரூப் டியில் முதலிடம் வந்த தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் ஏன் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெறவில்லை என்பதுதான். அதற்கான விளக்கத்தைத் தான் எளிமையாக தற்போது பார்க்கப் போகிறோம்.

ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்று வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை சூப்பர்-8 சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் தரநிலை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையின் அடிப்படையிலேயே அணிகளுக்கு இடையேயான போட்டி தீர்மானிக்கப்படும்.டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்த முறை 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறும்.சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தங்கள் குழுவுக்குள் மோதிக்கொள்ளும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும்.--சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் மோதிக் கொள்வதற்கு ஐசிசி இந்த முறை புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

அதாவது, சூப்பர்-8 சுற்றை அடைவதற்கு முன்பே தகுதிபெற்றுள்ள 8 அணிகளுக்கும் அந்தந்த அணிகளின் தரவரிசையைப் பொருத்து தரநிலையை வழங்கியுள்ளது.

ஐசிசி அமைப்பு டி20 தரவரசையின்படி, அணிகளுக்கு தரநிலையை டி20 உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியா(ஏ1), பாகிஸ்தான்(ஏ2) இங்கிலாந்து(பி1), ஆஸ்திரேலியா(பி2),நியூசிலாந்து(சி1), மேற்கிந்தியத்தீவுகள்(சி2)தென் ஆப்ரிக்கா(டி1), இலங்கை(டி2)என டி20 தரவரிசைக்கு ஏற்ப தரநிலை வழங்கப்பட்டது.

இந்த தரநிலையை அடிப்படையாக வைத்துதான் இந்த சூப்பர்-8 சுற்று நடக்கப் போகிறது. மற்ற சிறிய அணிகளுக்கு தரநிலை வழங்கப்படவில்லை.

ஒருவேளை இந்த எட்டு அணிகளில் எந்த அணியாவது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை எனில், அந்த அணியின் தரநிலை, வேறு எந்த அணி தகுதிபெறுகிறதோ அதற்கு வழங்கப்பட்டு விடும். இன்னும் சற்று எளிமையாக உதாரணத்தோடு பாப்போம்.

குரூப் 1-ல் இந்தியாவும் அமெரிக்காவும் தகுதி பெற்றன, இதில் பாகிஸ்தான் தகுதி பெறவில்லை. எனவே அமெரிக்காவுக்கு ஏ2 தரநிலை வழங்கப்பட்டது. குரூப் பியை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா முதலிடம் இங்கிலாந்து இரண்டாமிடம் பிடித்தன. ஆனால் ஏற்கனவே ஐசிசி தரநிலை கொடுத்திருந்ததன்படி இங்கிலாந்து பி1 அணியாகவும், ஆஸ்திரேலியா பி2 அணியாகவுமே சூப்பர்8-ல் விளையாடவுள்ளன. குரூப் சியை பொறுத்தவரை நியூசிலாந்து சூப்பர்8-க்கு தகுதி பெறவில்லை. அதனால் அந்த பிரிவில் சூப்பர்8-க்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு சி1 வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே தரநிலைப்படுத்தப்பட்ட படி சி2வாக செல்கிறது. குரூப் டியில் தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்தது. அதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டபடி டி1 ஆகவே சூப்பர் 8 செல்கிறது. இலங்கை தகுதி பெறாததால், இந்த பிரிவில் சூப்பர் 8-கு தகுதி பெற்ற வங்கதேசம் டி2 இடத்தை எடுத்துக்கொண்டது.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

அடுத்ததாக இப்போது சூப்பர் 8 விவாகரத்துக்கு வருவோம். நாம் ஏற்கனவே பார்த்தது சூப்பர் 8-க்கு தகுதி பெறும் அணிகளுக்கு கொடுக்கப்பட்ட தரநிலை. இப்போது சூப்பர் 8 சுற்றுக்கு இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அது எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். சூப்பர் 8 சுற்றில் ஏற்கனவே முதல் பிரிவில், A1, B2, C1, D2 ஆகிய அணிகளும் இரண்டாம் பிரிவில் A2,B1,C2,D1 ஆகிய அணிகளும் இடம்பெறும் என்பது விதி. அதன்படி, முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளன. இரண்டாம் பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 8-ல் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு அணியும் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். அதன் பொருள் ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். சூப்பர் 8 சுற்றில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்குச் செல்லும். அதாவது அரை இறுதி.

இதில் குரூப் 1 -ல் முதலிடம் வரும் அணியும், குரூப் 2-ல் இரண்டாமிடம் வரும் அணியும் முதல் அரையிறுதியில் மோதும். அடுத்த அரையிறுதி போட்டியில் குரூப்2-ல் முதலிடம் வரும் அணியும், குரூப் 1-ல் இரண்டாம் இடம் வரும் அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்த முறை டி20 உலகக் கோப்பையில் ஒரு சில போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகின. கத்துக்குட்டி அணிகளிடம் முன்னாள் சாம்பியன்கள் அணிகள் தோற்று, லீக் சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றோடு வெளியேறிவிட்டன. இந்த அணிகள் சூப்பர் 8 சுற்றில் தரநிலைப் படுத்தப்பட்டபோதும் லீக் சுற்றில் சந்தித்த அதிர்ச்சிகரமான முடிவுகளால் லீக் சுற்றோடு வெளியேறின.

சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி 20-ம் தேதி ஆப்கானிஸ்தானையும், 22-ம் தேதி வங்கதேசத்தையும், 24-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)