காணொளி: கே விசாவை சீனர்கள் எதிர்ப்பது ஏன்?

காணொளி: கே விசாவை சீனர்கள் எதிர்ப்பது ஏன்?

வெளிநாட்டை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக கே விசா எனப்படும் புதிய விசா திட்டத்தை சீனா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அப்போது பெரிதாக கவனம் பெறாத அந்த விசா, கடந்த புதன்கிழமை அமலுக்கு வந்த பின் திடீரென பேசுபொருளாகி இருக்கிறது.

காரணம், ஒரு இந்திய ஊடகம் அந்த விசாவை "சீனாவின் ஹெச்-1பி என்று குறிப்பிட்டது. அமெரிக்காவின் ஹெச்-1பி விசா திறன்சார் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் அரசு அதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது.

இந்திய ஊடகம் வெளியிட்ட அச்செய்தி, சீனாவில் பெரும் கவனம் பெற்றது. கவனம் பெற்றதோடு மட்டுமல்லாமல் கவலைகளையும் பயத்தையும் சீனாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிநாட்டினருக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாக இருந்தால், ஏற்கனவே சிரமத்தை எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சந்தையில் போட்டி இன்னும் அதிகரிக்கும் என சீன மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த கே விசா வெளிநாட்டினர் சீனாவில் வேலை செய்ய அனுமதிக்குமா அல்லது நாட்டிற்குள் எளிதாக நுழைய மட்டும் வாய்ப்பு தருமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், சீனாவின் சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

"இங்கு ஏற்கனவே இளங்கலை பட்டதாரிகள் நிறைய பேர் உள்ளார்கள். பலர் முதுகலை, முனைவர் பட்டங்களுடன் உள்ளனர். நம் நாட்டில் திறமைகள் நிறைய உள்ளது. ஏன் வெளிநாட்டு பட்டதாரிகளை கொண்டு வருகிறீர்கள்?'' என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

"பல புதிய திட்டங்கள் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடும்படி செய்கின்றன. ஆனால் இறுதியில், வெளிநாட்டு பாஸ்போர்ட்களே வெற்றி பெறுகிறது" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

சில கருத்துகளில் வெளிநாட்டினர் மீதான விரோதமும், இனவெறியும் காணப்பட்டது. குறிப்பாக இந்த கருத்துகள் இந்தியர்களை குறிவைக்கும்படி இருந்தது.

இந்த விசாவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததால் அரசு ஊடகம் அதை தணிக்க முயன்றது.

குளோபல் டைம்ஸ் இந்த திட்டத்தை ஆதரித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில், இந்த புதிய யுகத்தில் சீனா தன்னம்பிக்கையுடன், திறந்த மனப்பான்மையுடன் இருப்பதை உலகுக்கு காட்டும் நல்ல வாய்ப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில் கே விசாவை தவறாக சித்தரிப்பது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது.

சரி, கே விசா என்றால் என்ன?

இந்தத் திட்டத்தில் முழுமையாக என்னென்ன அடங்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கானது என சீன அரசு கூறியுள்ளது.

"சீனா அல்லது வெளிநாடுகளில் உள்ள நன்கு அறியப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் மேலே குறிப்பிட்ட துறையில் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்கள் அல்லது அந்த நிறுவனங்களில் கற்பிப்பவர்கள் அல்லது ஆராய்ச்சிப் பணி மேற்கொள்பவர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ஊடகக் குறிப்பில் அரசு கூறி உள்ளது.

ஆனால் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறித்தோ, இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறும் பல்கலைக்கழகங்கள் குறித்தோ எந்த விபரங்களும் இன்னும் வழங்கப்படவில்லை.

பொதுமக்களின் பதற்றத்தைக் குறைக்க அரசு ஊடகங்கள் முயன்றாலும், கே விசாவின் செயல்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை அரசு இன்னும் வழங்கவில்லை.

இந்த விசா குறித்து கூடுதல் விபரங்களை வெளிநாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் வெளியிடும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு