You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூண்டில் வளைவு அமைப்பதால் கடற்கரை பாதிக்கப்படுமா? மீனவர்களின் கோரிக்கை என்ன?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தின் மீனவ மாவட்டங்களின் கடற்கரைகளில், படகுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ‘தூண்டில் வளைவு’ எனும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் கடலுக்குள் இவ்வமைப்புகளை உருவாக்குவது, கடலின் இயற்கையான அமைப்பினை பாதிக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தற்போது தமிழகத்தின் 15 கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இவை அமைக்கப்பட்டால் கடலின் இயற்கை தன்மை பாதிக்கப்படும் எனக்கூறி பசுமைப் தீர்ப்பாயம் அதற்குத் தடை விதித்திருக்கிறது.
தூண்டில் வளைவு என்றால் என்ன? அவற்றால் என்ன நன்மை? அவை எப்படிக் கடலின் தன்மையை பாதிப்பதாக அச்சம் ந்லவுவது ஏன்?
தூண்டில் வளைவு என்றால் என்ன?
1134 கி.மீ. நீளமான தமிழ்நாட்டின் கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி வரை நீள்கிறது. இக்கடற்கரையோரம் அமைந்திருக்கும் 14 மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 35,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று தினசரி மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களது படகுகளை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காக மீன்வளப் பொறியியல் துறையின் சார்பில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் அளவும் வடிவமும் கடல் அலையின் வேகத்தையும் தன்மையையும் பொறுத்து மாறுபடும்.
ஓரிடத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்குமுன் மீன்வளத்திற்கான கடற்கரை பொறியியல் மத்திய நிறுவனமும், இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் ஆராய்ச்சி செய்து அதன் நீளம், அகலம் ஆகியவற்றை முடிவு செய்வர்.
சென்னை துறைமுகத்தில் அமைக்கப்ப்ட்டுள்ள தூண்டில் வளைவு ஒரு கிலோமீட்டர் நீளமும் இரண்டு கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். தற்போது அமைக்கப்பட்டு வரும் மண்டபம் தூண்டில் வளைவு ஒரு கிலோ மீட்டர் நீளமும் வெறும் 300 மீட்டர் ஆழம் மட்டுமே கொண்டுள்ளது.
சாதாரண பாறைக் கற்களைப் பயன்படுத்தியே தூண்டில் வளைவுகல் அமைக்கப்பட்டு வருகின்றன.
15 புதிய தூண்டில் வளைவுகள் அமைக்கத் திட்டம்
சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், நாகை போன்ற பல்வேறு மாவட்டங்களின் கடற்கரைகளில் ஏற்கனவே ‘தூண்டில் வளைவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் படகுகளை நிறுத்தும் போது விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மழை, புயல், போன்ற மோசமான காலநிலையில் பாதுகாக்கப்படுகின்றன.
தற்போது மேலும் 15 கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க, மீனவர்களின் கோரிக்கை அடிப்படையில் மீன்வளத்துறை அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டியுள்ளது.
ஆனால், தூண்டில் வளைவுகள் அமைக்க கடலில் கல்லைப் போட கூடாது என பசுமை தீர்ப்பாயம் முட்டுக்கட்டை போட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான காரணம் என்ன?
மீனவர்களின் கோரிக்கை என்ன?
புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் தூண்டில் வளைவுதான் தங்கள் படகுகளுக்குப் பாதுகாப்பைத் தரும் என மீனவர்கள் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மீனவ நல வாரிய அலுவல் சாரா அமைப்பின் உறுப்பினர் சேசு ராஜா, கடற்கரைகளில் தூண்டில் வளைவு அமைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான முக்கியமான திட்டம் என்றார்.
“தூண்டில் வளைவு இல்லாவிட்டால், புயல், மழை காலங்களில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதம் அடைகின்றன. ஒரு விசைப்படகின் விலை சுமார் 40 லட்சம் ரூபாய். ஆனால் கடந்த காலங்களில் புயலால் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு அரசு சார்பில் வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இது எப்படி புதிய படகு வாங்க மீனவர்களுக்கு உதவும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட குறுகிய கடல் பகுதிகளிலேயே 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இருக்கின்றன.
விசைப்படகுகளுக்குச் சராசரியாக 250 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை டீசல் பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர், என்றும், இதன் மூலம் மட்டுமே அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வருவாய் வருகிறது என்றும் கூறுகிறார்.
“ஆனால் பசுமை தீர்ப்பாயம், தூண்டில் வளைவு அமைக்கக் கடலுக்குள் கல்லைப் போடக்கூடாது, ஏனெனில் அது இயற்கையை பாதிக்கும் என்று கூறுகிறது. ஆனால் தூண்டில் வளைவு இல்லாவிடில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை ஏன் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை,” என்று கேள்வியெழுப்புகிறார் சேசு ராஜா.
மேலும் பேசிய அவர், மீனவர்கள் கடலை நம்பித்தான் இருப்பதாகவும், இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் மீனவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் கடற்கரை தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும், என்றும் கூறினார்.
“தூண்டில் வளைவு அமைத்தால் கடலோரப் பகுதிகளில் மீன் வணிகம் அதிகரிக்கும்,” என்கிறார் அவர்.
‘மெரினா கடற்கரையே இல்லாமல் போகக்கூடும்’
கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால் கடல் அலைகளின் நீரோட்டம் தடுக்கப்பட்டு, கரையோரச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சரவணன், ஒரு வருடத்தின் 9 மாதங்களுக்குக் கடல் அலைகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாயும், என்றும் மற்ற 3 மாதங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாயும் என்றும் கூறினார்.
“இந்த காலகட்டத்தில் கடலில் இருக்கும் மணல், கரையில் இருந்து கடலுக்குள்ளும் மீண்டும் கரைக்கும் தள்ளப்படுகிறது. ஆனால் தூண்டில் வளைவு அமைத்தால் இந்தச் சுழற்சி முறை தடுத்து நிறுத்தப்படும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், சமீபத்தில் செங்கல்பட்டில் உள்ள ஒரு மீனவக் கிராம மக்கள் தங்கள் பகுதியில் கடல் நீர் உட்புகுவதால் அங்கு தூண்டில் வளைவு கேட்டு போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள், என்றார். “இப்படித் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொண்டே சென்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் மெரினா கடற்கரையே இல்லாத சூழல் ஏற்படும். கடல் நீரின் மட்டம் உயரும்பொழுது நிலத்தடி நீர் முற்றிலுமாக பாழாகிவிடும். நிலத்தடி நீருக்கு கடல் மணல் ஓர் பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது,” என்றார்.
“இதனைக் கருத்தில் கொண்டுதான் பசுமைத் தீர்ப்பாயம் கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவை கல் கொண்டு அமைக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதற்கு மாற்று வழிமுறைகள் ஏதேனும் பயன்படுத்தினால் மட்டுமே இயற்கையை காப்பாற்ற முடியும் என கூறி இருக்கிறது,” என்றார் சரவணன்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு அரசு பல்வேறு பகுதிகளில் தூண்டில் வளைவுகளை அமைத்து வருகின்றது, என்றும், இது எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார். “பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள உத்தரவுகளை பின்பற்றித் தூண்டில் வளைவு அமைக்கும் முறையை மாற்றினால் மட்டுமே எதிர் காலத்தில் கடற்கரைகளை காப்பாற்ற இயலும்," என்றார் சரவணன்.
‘பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்றே தூண்டில் வளைவு அமைக்கப்படும்’
பிபிசி தமிழிடம் பேசிய, மாநில மீன்வளத்துறை அதிகாரி ஒருவர், தமிழ்நாடு அரசுக்கு புதிதாக 15 புதிய தூண்டில் வளைவு அமைப்பதற்கான கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவற்றுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை, எனவும் தெரிவிதார்.
மேலும் பேசிய அவர், “கடல் அரிப்பு கோட்டத்தின் சார்பில் தூண்டில் வளைவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கை ஐ.ஐ.டி-யால் தயார் செய்யப்படுகிறது. இதற்குப் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த பிறகே கடலோரப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் துவங்கும்,” என்றார்.
ஒரு தூண்டில் வளைவு அமைப்பதற்கு சராசரியாக 25 லட்சம் ரூபார் வரை தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பசுமை தீர்ப்பாயம் மேற்கோள் கட்டியதை அரசு கவனத்தில் எடுத்தே அரசு கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடலில் ஆறு சேரும் பகுதிகளில் ஆழப்படுத்தி துறைமுகம் அமைத்து உள்ளது, என்று கூறினார் அந்த அதிகாரி.
“இதன் மூலம் இயற்கை பாதிக்கப்படுவது பெருமளவு குறைந்திருக்கிறது. இதே போல பல்வேறு இடங்களில் ஆறுகள் கடலில் கலக்கும் பகுதிகளில் கப்பல் நிற்பதற்கு ஏற்ப ஆழப்படுத்தி துறைமுகமும் தூண்டில் வளைவும் அமைத்தால் கடல் அலைகளின் நீரோட்டத்திற்கு பாதிப்பு இருக்காது இயற்கையும் பாதுகாக்கப்படும்," என்றார்.
மேலும் பேசிய அந்த அதிகாரி, தமிழ்நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 5.78% பங்கு மீன்வளத்தில் இருந்து வருகிறது, என்றும் 2021-22ஆம் ஆண்டில் மட்டும் 6569.64 கோடி ரூபாய் ஏற்றுமதி மூலம் வருவாய் கிடைத்தது என்றும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)